வரகு:
1.. வரகு பயிர் இந்தியாவில் சுமார் 3000 வருடங்களாக பயிரிடப்பட்டு வருகிறது.
2.. குறு தானியப் பயிர்களிலேயே இது நீண்ட வயதுடையது (125 - 130 நாட்கள்).
3.. கடும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
4.. சராசரியாக ஒரு எக்டருக்கு 1485 கிலோ தானியம் கிடைக்கும். விலை ரூ.20 / கிலோ.
கோ.3 வரகு ரகம்
இந்த ரகம் 120 நாட்களில் சராசரியாக எக்டருக்கு 1200 கிலோ தானிய விளைச்சல் தரவல்லது.
ஏ.பி.கே.1 வரகு ரகம்
இந்த ரகம் 100-110 நாட்களில் 2000 கிலோ தானிய விளைச்சல் கொடுக்கிறது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த இரண்டு ரங்களும் பயிரிட ஏற்றவை.
மானவாரியாக வரகு சாகுபடி செய்யப்படுவதால் தென்மேற்கு பருவமழை அதிகமாகப் பெறப்படும் மாவட்டங்கள் ஆடிப்பட்டத்திலும், வடகிழக்கு பருவமழை அதிகமாகப் பெய்யும் மாவட்டங்களில் புரட்டாசிப் பட்டத்திலும் விதைப்பு செய்வது நல்லது.
ஊடுபயிர்:
வரகு பொதுவாக தனிப்பயிராகவே பயிரிடப் படுகிறது. சில சமயங்களில் இத்துடன் ராகி (அ) பச்சைப்பயறு (அ) உளுந்து (அ) துவரை (அ) எள் (அ) மக்காச்சோளம் (அ) கடலை போன்ற பயிர்களுடன் 2:1 அல்லது 1:1 என்ற விகிதத்தில் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.
வரகுப்பயிரை துவரை அல்லது அவரை போன்ற பயறுவகைப் பயிர்களுடன் 8X2 வரிசை என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்வதால் மண்வளத்தைக் காப்பதுடன் அதிக லாபமும் பெறலாம்.
நிலத்தை நல்ல முறையில் உழுது தயார் செய்தால் சிறிய விதையாக இருக்கும் வரகு முளைத்து வெளிவர 5 நாட்கள் ஆகும். களைகளின் பாதிப்பும் குறையும். இரண்டு அல்லது மூன்று இடைஉழவு செய்வதால் களைகள் கட்டுப்படும்.
உரம்:
அசோஸ்பைரில்லம் 600 கிராம், 600 கிராம் பாஸ்போ பாக்டீரியா (அ) 600 கிராம் அசோபாஸ் நுண்ணுயிர் உரங்களை ஒரு எக்டருக்கான விதையுடன் கலந்து விதைநேர்த்தி செய்து பின் விதைப்பு செய்ய வேண்டும்.
ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பன்டசிம் (அ) திரம் கலக்க வேண்டும். ரசாயனப் பொருட்களைக்கொண்டு விதைநேர்த்தி செய்வதாக இருந்தால் முதலில் அவற்றுடன் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். பின் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக நுண்ணுயிர் கலவையுடன் சேர்க்க வேண்டும்.
விதைக்கும் முறை:
பொதுவாக கைத்தெளிப்பு முறையில் விதைக்கப்படுகிறது. எக்டருக்கு 15 கிலோ விதை தேவைப்படும். ஆனால் பயிரின் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது. விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்தால் அதிக பரப்பளவில் மண் ஈரம் காயும் முன்பே விதைக்கலாம்.
இம்முறையில் 10 கிலோ விதை போதுமானது. விதையை விதைக்கும்போது 2.5 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 22.5செ.மீ. இடைவெளியும், செடிக்குச்செடி 10 செ.மீ. இடைவெளியும் இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 12.5 டன் மக்கிய தொழு உரம் கடைசி உழவின்போது பரப்பி பின் உழவேண்டும்.
இந்த தொழு உரத்துடன் 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம், 10 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா உரங்களைச் சேர்த்து இடலாம். மண் பரிசோதனை முறைக்கு ஏற்ப உரம் இடவேண்டும். அல்லது எக்டருக்கு 44:22 கிலோ தழை, மணி சத்துக்களை இடவேண்டும். விதைக்கும் போதே அடியுரமாக மணிச்சத்து உரத்தை இடவேண்டும்.
தழைச்சத்தை பாதி அளவு இட்டு மீதமுள்ளதை மேலுரமாக விதைத்த 35-40வது நாளில் முதல் களைக்குப் பின்னர் இடலாம். வரிசை விதைப்பு செய்திருந்தால் 2- 3முறை இடை உழவு செய்து, பின் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும். கைத்தெளிப்பு முறையில் விதைத்திருந்தால் இடைஉழவு செய்ய இயலாது.
எனவே, பயிர் விதைத்த 15ம் நாள் மற்றும் 40ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களை எடுத்தவுடன் 22.5செ.மீ. து 10 ச.மீ. இடைவெளிவிட்டு பயிர்களைக் கலைத்துவிட வேண்டும். கலைத்த பயிர்களைக் கொண்டு பயிர் இல்லாத இடத்தில் இடைநடவு செய்யலாம்.
தேவையான அளவு மண்ணில் ஈரப்பதம் இல்லை என்றாலோ (அ) நல்ல பரவலாக தேவையான அளவு மழைப்பொழிவு இல்லை என்றாலோ பண்ணைக் குட்டைகளில் சேமிக்கப்பட்ட மழைநீரைப் பயன்படுத்தி தெளிப்பான் கொண்டு தெளித்து காப்பாற்றலாம்.
தக்க பயிர் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து மணிக்கரிப்பூட்டை நோய், குருத்து ஈ தாக்குதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். கதிர்கள் நன்கு காய்ந்து முடித்தவுடன் அறுவடை களத்தில் காயவைத்து அடித்து தானியங்களைப் பிரித்தெடுக்க வேண்டும். நன்கு சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.