G-9 ரக வாழையை சாகுபடி செய்தால் கணிசமான லாபம் நிச்சயம் கிடைக்கும்…

 
Published : Apr 13, 2017, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
G-9 ரக வாழையை சாகுபடி செய்தால் கணிசமான லாபம் நிச்சயம் கிடைக்கும்…

சுருக்கம்

G-9 interceptor banana cultivation will certainly make a substantial profit

திசு வளர்ப்பு வாழையான கிராண்ட் நைன் (G-9) ரக வாழையை சாகுபடி செய்து நல்ல லாபத்தை அடையலாம்.

G-9 வாழை ரகம்

திசு வளர்ப்பு வாழைக் கன்றான G-9 வாழைப்பழம் பார்வைக்கு கவர்ச்சியாக இருப்பதால் அவற்றை மக்கள் விரும்பி வாங்குவர்.

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு G-9 வாழை விற்பனைக்கு வருகிறது.

இந்த வாழையை சாகுபடி செய்வதன் மூலம் கணிசமான லாபம் அடையலாம்.

G-9 நடவு:

பொதுவாக திசு வளர்ப்பு வாழையை அந்தந்தப் பருவ சூழலுக்கு ஏற்ப நடவு செய்ய வேண்டும். இதனடிப்படையில் ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நடவு செய்ய வேண்டும்.

கன்றுகளை ஜனவரி முதல் மே மாதம் வரையிலான மாதங்களில் நடவு செய்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த் தாக்குதல் அதிகம் இருப்பதுடன் செடியின் வளர்ச்சியும் குறைந்து சில நேரங்களில் குலை தள்ளிவிடும். அதனால் ஆகஸ்ட், செம்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.

நிலத்தை சமப்படுத்தி 6 அடி இடைவெளியில் 1 ஏக்கருக்கு 1000 கன்றுகளை நடவு செய்யலாம்.

நடவு மற்றும் உரம்:

நடவு செய்தது முதல் 5 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 1 ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டும், 30 நாளுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

இந்த G-9 வாழைத்தார் ஒன்று ரூ.500 முதல் ரூ.800 வரையில் விற்பனையாகிறது. களை எடுத்தல், முட்டுக்குச்சிகள், தொழு உரம், உரம் உள்ளிட்டவைகளின் செலவு போக நல்ல லாபம் கிடைக்கும்.

புயலின்போது மண்ணில் சாய்ந்த கன்றுகளுக்கு மண் அணைத்ததால் அவை நன்றாக வளர்ந்துள்ளன. எனவே, நல்ல லாபம் தரக் கூடியதாகவும், விற்பனை செய்வதற்கு எளிமையாகவும் இருக்கும்.

வாழை பயிரிடுவோருக்கு:

வாழை பயிரிட விரும்புவோர் நல்ல வடிகால் வசதியுள்ள அமில காரத் தன்மை 5.5 - 7.5 வரையுள்ள மண்ணைத் தேர்வு செய்யலாம்.

காரத்தன்மை அதிகமாகவும் உப்பு கலந்த களிமண்ணானது வாழை நடவு செய்ய ஏற்றதல்ல. ஏனெனனில், இத்தகைய மண்ணில் நுண்ணூட்டச் சத்தும், மணிச்சத்தும் வாழைக்கு எளிதில் கிடைக்காது.

திசு வாழைக் கன்றுகளைத் தேர்வு செய்யும்போது 5 முதல் 6 இலைகள் கொண்ட நன்கு வளர்ந்த தரமான செடிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

வாழைக் கன்றுகள் நடும் வயலை உளிக்கலப்பை மூலம் ஒரு முறையும், சட்டிக் கலப்பையின் மூலம் ஒரு முறையும் உழவு செய்த பின்னர் கொக்கிக் கலப்பையால் 2 முறை உழவு செய்ய வேண்டும்.

நடவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே 1.5 * 1.5* 1.5 அடி அளவுள்ள குழிகளை 6-க்கு 6 அடி அல்லது 5-க்கு 7 அடி இடைவெளியில் எடுக்க வேண்டும். குழிக்கு 5 கிலோ அளவுக்கு தொழு உரத்தை மேல் மண்ணுடன் கலந்து குழியில் இட வேண்டும். மேலும், வேப்பம் புண்ணாக்கு 500 கிராம், பியூரடான் 20 கிராம் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

ஹெக்டர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் வாழைக்கன்றுகள் தேவை. இவ்வாறு நடவு செய்த வாழைக்கன்றுகளுக்கு நாள்தோறும் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

வாழை ஒன்றுக்கு நாள்தோறும் 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். நீரில் எளிதில் கரையும் உரங்களை ஒரு வாழைக்கு 200 முதல் 300 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து என்ற விதத்தில் கரையும் உரப்பாசனம் மூலம் 5 நாள் இடைவெளியில் இடவேண்டும்.

வாழைக் கன்றில் நூல்புழுத் தாக்குதலின் அறிகுறி தெரிந்தால் மீண்டும் வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கை ஒரு மரத்துக்கு 500 கிராம் வீதம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா இரண்டையும் 20 கிராம் அளவில் தொழு உரத்துடன் கலந்து மரம் ஒன்றுக்கு இடவேண்டும். இவ்வாறு செய்தால் கன்றுக்கு ஊட்டச்சத்து சிறப்பாக அமையும். பாக்டீரியா நோய்த் தாக்குதலிலிருந்து கன்றுகளைக் காப்பாற்ற செடிக்கு 25 கிராம் சூடோமோனாஸ் வைக்கலாம்.

வாழைக்குலையின் கடைசி சீப்பு வந்தவுடன் 1 வாரத்துக்குள் ஆண் பூவை நீக்கிவிட்டு சவுக்கு அல்லது யூகலிப்டஸ் குச்சிகளை முட்டுக் கொடுக்க வேண்டும். கடைசி சீப்பு வெளிவந்தவுடன் ஒளி ஊடுருவும் பாலித்தீன் பை கொண்டு வாழைக்குலைகளை மூடவேண்டும்.

பாலித்தீன் பைகளில் குளிர்காலமாக இருப்பின் 2 சதவீதம் துளைகளையும், கோடைகாலத்தில் 4 சதவீதத் துளைகளையும் ஏற்படுத்தி காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் பழங்கள் நல்ல ஏற்றுமதித் தரத்துடன் சிறப்பாகக் காணப்படும்.

நன்கு பராமரிக்கப்பட்ட ஜி9 வாழை நடவு செய்த 11 மாதங்களில் முதல் அறுவடையும், முதல் அடிக்கன்றிலிருந்து வரும் குலைகள் 10 மாதத்திலும், 2-ம் அடிக்கன்றிலிருந்து வரும் குலை 9 மாதத்திலும் வரும்.

 

 

PREV
click me!

Recommended Stories

Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?