சினையான ஆடுகளின் அறிகுறிகள்
** ஆடுகள் சினைப் பட்டதற்கான அறிகுறிகள் 2 – 1/2 மாதத்திற்குப் பின்பே தெரியவரும். குட்டி போடுமுன் கடைசி இரு வாரங்களுக்கு வெளியே அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
** சினையான ஆடுகளின் மடி பெருக்க ஆரம்பிக்கும். அமைதியாகவும் காணப்படும். 67% உறுதியுடனேயே வெள்ளாடுகளில் சினை கண்டு பிடிக்க முடியும்.
** வெள்ளாடுகளில், கருத்தரியாமைப் பிரச்சினை மிகக் குறைவு.
சினைக்காலம்
** வெள்ளாடுகளில், சினைக் காலம் 151 நாட்களாகும். ஆகவே ஆண்டிற்கு இருமுறை வெள்ளாடுகளைக் குட்டிகள் ஈன வைக்கலாம். ஆனால், பாலுக்கான இனங்கள் வளர்க்கும்போது ஆண்டிற்கு ஒரு முறை ஈன வைப்பது வழக்கம்.
** நாட்டு ஆடுகளும், தலைச்சேரி, பார்பாரி, வங்காளக் கறுப்பு ஆடுகளும் குட்டி போட்ட 8 வாரங்களுக்குள் சினைப் பருவத்திற்கு வந்துவிடும். ஆனால் பல வெளிநாட்டு இன வெள்ளாடுகள் குட்டி போட்டுப் பல மாதங்கள் ஆன பின்பே சினைக்கு வருகின்றன.
** தராணமாகச் சாணன் ஆடுகள் குட்டி போட்ட 7 மாதங்கள் சென்ற பின்பே முதல் முறையாகச் சினைக்கு வருகின்றன.
** வெள்ளாடுகள், 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். சினைத் தருணம் 2 முதல் 3 நாட்களுக்கும் நீடிக்கும். ஆனால், குளிர்காலத்தில் சினைத் தருணம் 24 முதல் 36 மணி நேரம் மட்டுமே இருக்கும்.
** வெள்ளாட்டுக் கடாக்கள், பெட்டை ஆடுகளுடன் இருப்பது. அவை சினைப் பருவத்திற்கு வரத் தூண்டி கருத்தரிக்க வைக்கின்றன எனப் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
குட்டி போடும் தருண அறிகுறிகள்
** சிறப்பாக, இனச் சேர்க்கை செய்த நாள்கள் கடந்து 151 நாள்களில் குட்டி ஈனும். இதன் அடிப்படையிலேயே ஆடுகளைத் தனிமைப் படுத்தித் தேவையான வைக்கோல் பரப்பித் தயார் செய்ய வேண்டும்.
** குட்டி போடும் ஆடுகள் தனிமையை விரும்பிச் சென்று, காலால் தரையைத் தேய்க்கும். பெண் உறுப்பிலிருந்து இரத்தம் கலந்த கெட்டியான திரவம் வடியும். முதலில் இரு முன் காலும், தலையும் வெளியே வரும்.
** குட்டி போடும் போது எவ்விதத் தொந்தரவும் செய்யாமல் இயற்கையாகக் குட்டி போட அனுமதிக்க வேண்டும். நச்சுக் கொடி. ஆடு குட்டி ஈன்ற ஒரு மணி நேரத்திற்குள் வெளியாகிவிடும்.