காணப்படும் இடங்கள்:
விருதுநகர் (சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜ பாளையம்), தூத்துக்குடி (புதூர், கயத்தார், கோவில்பட்டி), திருநெல்வேலி (குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர்) முதலிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
தற்சமயம் பிற மாவட்டங்களிலும் இந்த கன்னி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகமான அளவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளத்திலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டையிலும் காணப்படுகிறது.
சந்தை நிலவரம்:
கன்னி ஆடுகளை கோவில்பட்டி அருகில் உள்ள திருவேங்கடம் என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் சந்தையில் வாங்கலாம்.
கன்னி ஆட்டின் சிறப்பியல்புகள்:
இவை கருமை நிறத்துடனும் முகத்திலும் காதுகளிலும் வெள்ளை அல்லது பழுப்புநிற கோடுகளுடனும், மேலும் அதன் அடிவயிறு, தொடைப்பகுதி, வால்பகுதி மற்றும் கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடன் காணப்படும்.
கருப்பு நிறத்தில் வெள்ளைநிற கோடுகள் காணப்பட்டால் அவை “பால்கன்னி’ என்றும் பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் “செங்கன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவற்றின் காது மற்றும் நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இதனை வரி ஆடுகள் என்று அழைக்கிறார்கள்.
மற்ற நம்நாட்டு வெள்ளாடுளைவிட அதிகமான அளவில் 2 அல்லது மூன்று குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. குட்டிகளை நன்றாக பேணி பாதுகாக்கும் பண்புடையவை. உயரமாகவும், திடகாத்திரமாகவும், ஒரே நிறமுடன் இருப்பதும் கூட்டமாக நடக்கும்பொழுது ஒரு “ராணுவ அணிவகுப்பு’ போல கண்ணை கவரும் இந்த கன்னி ஆடுகள்.
இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு ஆகும். கிடா மற்றும் பெட்டை ஆடுகளுக்கு கொம்புகள் உண்டு. பிறந்த கிடா குட்டிகள் 2.1 கிலோவும், பெட்டை குட்டிகள் 2.05 கிலோ உடல் எடையுடன் இருக்கும். ஒரு வருட வயதில் கிடாக்கள் 21.70 கிலோவும், பெட்டை ஆடுகள் 20.90 கிலோ எடையுடன் இருக்கும்.
மேலும் ஒரு வருட வயதில் கிடாக்கள் 76 செ.மீ. உயரமும், பெட்டை ஆடுகள் 72 செ.மீ. உயரத்துடனும் காணப்படும். கன்னி ஆடுகள் அதிக அளவில் 2 (46.36%), 3(3.43%) மற்றும் 4(0.37%) குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. கன்னி ஆட்டிலிருந்து 48 சதவீத இறைச்சியை பெறலாம்.
கொட்டகை:
ஆட்டுக் கொட்டகையை மேட்டுப்பாங்கான இடத்திலும் காற்றோட்டமுள்ள இடத்திலும் அமைக்க வேண்டும். கொட்டகையின் தரைப்பகுதி ஈரத்தினை உறிஞ்சக் கூடியதாகவும், எளிதில் உலரும் தன்மையுடையதாகவும், பள்ளமோ அல்லது குழியோ இல்லாமல் மணல் கொண்டு நிரப்பி சமமாக வைக்க வேண்டும்.
மேலும் ஆடுகளுக்கு தேவையான அளவில் அதாவது குட்டி ஆடுகளுக்கு (4 முதல் 5 சதுரடி), பெட்டை ஆடுகளுக்கு (10 முதல் 15 சதுரடி), வளர்ந்த கிடாக்களுக்கு (15 முதல் 20 சதுரடி) இடவசதி அளிக்க வேண்டும்.
ஆடுகளை தேர்வு செய்யும் முறை:
பெட்டை ஆடுகளை வாங்கும்பொழுது அவை ஒரு வருடம் நிரம்பியவைகளாக வாங்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை குட்டிகளை ஈனும் ஆடுகளாக பார்த்து வாங்க வேண்டும். நல்ல வளமான, நோயற்ற ஆடுகளாக பார்த்து வாங்க வேண்டும்.
கிடா ஆடுகளை வாங்கும் பொழுது அவை நல்ல திடகாத்திரமான நல்ல வளமான விதைகள் உள்ள ஆடுகளாக வாங்க வேண்டும். குட்டி ஆடுகளாக வாங்குவது என்றால் மூன்று மாதமான குட்டிகளை வாங்கி வளர்க்கலாம்.
இனப்பெருக்கம்:
ஆடுகள் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். சினைக்கு வரும் ஆடுகள் வாலை ஆட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும், பிறப்புறுப்பு வீங்கியும் காணப்படும். அந்த சமயத்தில் பெட்டை ஆடுகளுடன் கிடாக்களை சேர்க்கலாம்.
20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடாவை கண்டிப்பாக பண்ணையில் வைக்க வேண்டும். பெட்டை ஆடுகளின் சினைக்காலம் 150 நாட்களாகும். வெள்ளாடுகள் 8 மாதத்திற்கு ஒரு முறை குட்டிகளை ஈனும். அதாவது 2 வருடத்தில் 3 குட்டிகளை ஈனும்.