இயற்கைமுறையில் சாகுபடிசெய்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் பார்க்கிறார் சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) அடுத்துள்ள சிக்கிரசம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஓதிச்சாமி.
ஆடி முதல் மார்கழி வரை குண்டுமல்லி நடவுக்கு ஏற்ற பட்டம். கோடை உழவு செய்து 15 டன் தொழு உரத்தை பரவலாக இறைத்துவிட்டு, மறுபடியும் 2 முறை ஏர் உழவு செய்து, 4 அடி இடைவெளியில் பார் முறை பாத்திஅமைத்து, அரை அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட குழிகளை 4 அடி இடைவெளியில் எடுத்து (ஏக்கருக்கு 2500 குழிகள்) 5 மாத வயதான நாற்றுக்களை குழிக்கு இரண்டாக பதியம் போட்டு மூடி உடனே நீர்பாய்ச்ச வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம்தங்கச்சிமடம்பகுதியிலிருந்துதான் தமிழகம் முழுவதும் மல்லி நாற்றுக்களை விவசாயிகள் வாங்கி வந்து நடுகிறார்கள் என்கிறார் விவசாயி. நாற்றின் விலை ஒரு ரூபாய்.
நடவு முடிந்ததும் வாரம் ஒரு முறை தண்ணீர் விடவேண்டும். சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். முதல் 5 மாதத்திற்கு மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். 2 வது மற்றும் 5வது களைக்குப்பின் செடிக்கு 2 கிலோ வீதம் மண்புழு உரம் வைத்து பாசனம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து 2 மாதத்திற்கு ஒரு முறை 500 லிட்டர் கோ மூத்திரத்துடன் 50 கிலோ சாணத்தைக் கரைத்து பாசனத்தண்ணீரோடு கொடுக்கலாம். பூச்சி கட்டுப்பாட்டிற்கு மூலிகை பூச்சிவிரட்டி தெளிக்கலாம். நடவு செய்த 150ம் நாளில் பூ மொட்டுக்களை அறுவடை செய்யலாம்.