இந்தியாவில் 1.2 கோடி எக்டேர் நிலப்பரப்புகள் களர், உவர் தன்மை மண்ணைக் கொண்டதாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலங்களில் நெல் உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதுடன், இவற்றைச் சீரமைக்கவும், அதிகளவில் செலவுகள் ஏற்படுகின்றன.
எனவே, பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு தானியங்களின் மகசூலைப் பெருக்கவும், பிரச்சனைக்குரிய நிலங்களை சாகுபோடிக்கேற்ப தயார்படுத்துவதும் முக்கியம்.
களர், உவர் நிலங்களில் நெல் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான சில வழிகள்
களர் மண் சீர்திருத்த முறைகள்:
களர் நிலத்தைச் சரிவுக்கேற்ப சமன் செய்து சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து முதன்மை மற்றும் கிளை வடிகால்களை அமைக்கவேண்டும்.
நான்கு அங்குல உயரத்திற்கு நீர்தேங்கும் அளவிற்கு வரப்புகளை அமைக்கவேண்டும். பாத்தியின் உள்புறம் நன்கு ஆழ உழுது பின்னர் சேற்றுழவு செய்யவேண்டும்.
மண் பரிசோதனைப்படி பரிந்துரக்கப்பட்ட ஜிப்சத்தை பாத்திகளில் சீராகப் பரப்பி நல்ல நீர் பாய்ச்சி உழவேண்டும்.
நான்கு அங்குல உயரத்திற்கு சுமார் மூன்று நாள்களுக்கு நீரை தேக்கி வைக்கவேண்டும். நீர் உள்புறமாக மண்ணின் ஊடே வடிந்து வெளியேறும்.
நீர் வடித்த பிறகு மறுபடியும் நீரைப் பாய்ச்சி வடிய விடவேண்டும். இதுபோல 3, 4 முறை செய்யவேண்டும். பசுந்தழைகள், பசுந்தாள் உரங்களை உபயோகிக்கவேண்டும்.
இரகத் தேர்வு:
களர், உவர் நிலங்களில் கோ-43, திருச்சி-1, திருச்சி-2, திருச்சி-2, பையூர்-1, சாவித்திரி போன்ற ரகங்கள் களர், உவர் தன்மையைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்கக் கூடியவை.
உவர் மண் சீர்த்திருத்த முறைகள்:
நல்ல நீரை நிலத்தில் தேக்கி, உப்பை வடிக்கவேண்டும்.
நீரைத் தேக்குவதற்கு முன், நிலத்தை நன்கு சமப்படுத்த வேண்டும்.
சிறு, சிறு பாத்திகளாக, சரிவுக்கேற்றவாறு பிரித்து, நல்ல வரப்புகள் அமைத்து நல்ல நீர் அல்லது மழைநீரை விட்டு சுமார் மூன்று நாள்களுக்கு தேக்கி உழவு செய்து உரிய வடிகால் அமைத்து தேக்கிய நீரை வடிகட்டவேண்டும்.
தொழு உரம், கம்போஸ், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை அதிகளவில் சாகுபடிக்கு பயன்படுத்தவேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட நைட்ரஜன், அளவைவிட 25 சதம் கூடுதலாக நிலத்தில் இடவேண்டும்.