தற்போது நமது விவசாயிகள் பயிரிடும் நிலங்களின் மொத்தப்பரப்பில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக இருப்பவை மானாவாரி புஞ்சை நிலங்கள் தான். "புஞ்சை விளைந்தால் பஞ்சமில்லை" என்பார்கள். அதாவது, இந்த நிலங்களில் விளைச்சலை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தி ஆண்டு தோறும் நிலையான வருவாய் கிடைத்திட பண்ணைக்குட்டை மற்றும் கசிவு நீர்க்குட்டை அமைத்து பயன்பெறலாம்.
தரிசு நிலத்தில் மேல் ஓடும் நீரை சேகரிக்க இந்த பண்ணை குட்டைகள் உதவும். இதில் தேக்கப்படும் நீரை தேவைப்படும் நேரத்தில் மரக்கன்றுகளுக்கோ அல்லது பயிர்களுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
undefined
பொதுவாக தரிசுநிலங்களில் இயற்கையாகவே தாழ்வாக அமைந்துள்ள பகுதிகளில் குறைவான செலவில் நீர்வரத்தில் பகுதிகளை செம்மை செய்தும், தூர் வாரியும் பண்ணைக் குட்டைகளை அமைக்கலாம். இதை கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கும் குட்டையாகவும் பயன்படுத்தலாம்.
பண்ணைக்குட்டையின் அளவு 30 மீட்டருக்கு நீளம் அகலம் உடையதாக அமைக்கலாம். பண்ணைக்குட்டையின் வரப்புகளில் கொடிப்பயிரை நடலாம். பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பும் செய்யலாம்.
கசிவு நீர்க்குட்டை என்பது, தரிசு நிலங்களில் வழிந்தோடும் நீரை மண்ணில் சேமித்து வைத்தும், குட்டையில் தேங்கியது போக உள்ள உபரி நீரை கசிவு நீர்க் குட்டையின் நிலத்தடி நீரை வலுப்படுத்த பயன்படுத்தலாம். இதனால் குட்டைக்கு கீழ் உள்ள கிணறுகளுக்கு அதிக நீர் கிடைக்கும். மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் உதவும். இந்த பண்ணைக்குட்டைகளால் சுமார் 1 கிலோமீட்டர் விட்டத்தில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் சிறப்பாக இருக்கும்.
இது தவிர மண்அரிப்பு தடுக்கப்பட்டு வழிந்தோடும் நீரின் மூலம் மேல் மண் அரிக்கப்பட்டு இடம் மாறிச் செல்வதை தடுக்கிறது.
இயற்கை வளங்களையும், உயிரினச் சமநிலையையும் நன்றாக பராமரிக்க முடியும். ஆகவே விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை அமைத்து பயிர் வளர்ச்சிக்கும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் முன்வர வேண்டும்.