இன்றைக்கு கிராமப்புறங்களில் கால்நடைகள் குறைந்து வருகிறது. பசுந்தீவனம் மற்றும் உலர்தீவன பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
கிராமப்புறங்களில் தரிசு நிலங்களில் தீவன மரங்களை நட்டு வளர்ப்பது மற்றும் வேறு பசுந்தீவனங்களை வளர்ப்பது இந்த பற்றாக்குறையை ஈடுகட்டும். இத்துடன் அசோலா என்னும் நீரில் மிதக்கும் ஒரு வகை பெரணி தாவரம் கால்நடைகளுக்கு அதிகச் சத்துள்ள தீவனமாக பயன்படுகிறது.
அசோலா தாவரம்
அசோலா பெரணி வகை நீரில் மிதக்கும் தாவரமாகும். பெரும்பாலும் பச்சை மற்றும் இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்தி செடி அல்லது கம்மல் செடி என்கிறார்கள். இதனை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்க வளர்க்கும் போது, எந்த விதமான பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.
வளர்ப்பு முறைக்கு தேவையானவை
செங்கல் 30 முதல் 40 கற்கள்
செம்மண் 30 கிலோ மற்றும் சில்பாலின் பாய் 2.5 மீ நீளம் மற்றும் 1.5மீ அகலம்
புதிய சாணம் 3 கிலோ.
சூப்பர் பாஸ்பேட் 30 கிராம்
ஐசோபேட் 10 கிராம்
தண்ணீர் அளவு 10 செமீ உயரம்
அசோலா விதை 300 கிராம் முதல் 500 கிராம் வரை
யூரியா சாக்கு தேவையான எண்ணிக்கை
செய்முறை
குழியின் அளவு 6 அடிநீளம் 3 அடி அகலம் இருக்கும் படி தோண்டிக் கொள்ள வேண்டும். புல்பூண்டு வளர்வதை தடுக்க யூரியா சாக்குகளை குழியில் பரப்பவும். செங்கல் குறுக்கு வாட்டில் குழியை சுற்றி வைக்கவும்.
அதன் மேல் சில்பாலின் பாய் பரப்பி அதன் மேல் 30 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்ப வேண்டும். புதிய சாணம் 2கிலோ தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். தண்ணீரின் அளவு 60 செமீ உயரம் வரும் வரை ஊற்ற வேண்டும்.
250 கிராம் முதல் 500 கிராம் வரை அசோலா விதைகளை குழியில் போட வேண்டும். அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த மூன்று நாளில் எடை மூன்று மடங்காக வளர்ச்சி அடையும். பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.
பராமரிப்பு
தினந்தோறும் குழியில் உள்ள அசோலாவை கலக்கி விட வேண்டும். 5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை குழியிலிருந்து வெளியேற்றி, பதிலாக சுத்தமான தண்ணீரை விட வேண்டும்.
1 கிலோ அசோலா உற்பத்தி செய்ய 75 பைசா தான் செலவு ஆகும். ஆனால் இந்த 1 கிலோ அசோலாவில் உள்ள சத்து 1 கிலோ புண்ணாக்கில் உள்ள சத்துக்கு சமமானது.
அசோலா உட்கொள்வதால் பசுக்களில் பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை உயரும். அசோலா உட்கொள்ளும் கோழிகள் அதிகமான எடையுடன் வளரும்.
அசோலாவை மாட்டுத்தீவனமாக பச்சையாகவோ, பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். இதில் அதிக புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும், தேவையான அமினோ அமிலங்களும் உள்ளன.
அசோலாவை முயல்களும் விரும்பி உண்ணும். அசோலா வளரும் இடங்களில் கொசுத்தொல்லை இருக்காது.