ஆடுகளுக்கு கலப்பு தீவனத்தை விட பசுந்தீவனமே சிறந்தது; செலவும் குறைவு…

 |  First Published Jul 21, 2017, 1:10 PM IST
Greens are better than mixed feed for sheep Cost less



ஆடுகளுக்கு கலப்பு தீவனம் கொடுப்பதை விட பசுந்தீவனம் அளிப்பதால் தீவனச் செலவை குறைக்கலாம்.

பசுந்தீவனத்தை போதிய அளவு கொடுத்தால் கலப்பு தீவனம் கொடுக்கும் அளவை குறைத்துக் கொள்ளலாம். பசுந்தீவனங்களில் புரதம், தாது உப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் குறிப்பாக உயிர்ச்சத்து ஏ மற்றும் இ ஆகியவை உலர்தீவனத்தை விட அதிகமாக உள்ளது.

Tap to resize

Latest Videos

பசுந்தீவன புரதத்தில் ஆர்ஜனின், லைசின் மற்றும் குளுடாமிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம். இது ஆடுகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. உயிர்ச்சத்துக்களில் முக்கியமான பீட்டா கரோட்டின் பசுந்தீவனங்களில் அதிகம் இருப்பதால் இது வைட்டமின் ஏ தேவையை பூர்த்தி செய்வதுடன் ஆடுகளின் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திற்கு அதிக அளவில் பயன்படுகிறது.

பசுந்தீவனம்

பசுந்தீவனங்கள் எளிதில் செரிக்க கூடியவை. உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. இதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், பால் உற்பத்தி திறனையும் அதிகரிக்கிறது. உலர் தீவனங்களுடன் பசுந்தீவனத்தையும் சேர்த்துக் கொடுப்பதால் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிப்பதுடன் உலர்தீவனத்தின் செரிமான தன்மையும் அதிகரிக்கிறது.

குறிப்பாக கடலைக்கொடி, சோளத்தட்டு ஆகியவற்றுடன் மர இலைகள் மற்றும் பயறுவகை தீவனங்களை சேர்த்து கொடுப்பதால் உடல் வளர்ச்சி அதிகரிக்கிறது. வெள்ளாடுகளுக்கு அடர் தீவன செலவை குறைக்க முக்கியமாக புண்ணாக்கு செலவை குறைக்கவும் எளிதில் சினை தங்கவும் சினைக்கு வராத பெட்டைகள் ஒரு சேர சினைக்கு வரவும், ஆடுகள் எடை கூடவும், தோல் மினுமினுப்பு மற்றும் விற்பனைக்கு ஏதுவாக இருக்கவும் பசுந்தீவனம் இன்றியமையாதது.

முக்கிய பசுந்தீவனங்கள்

கோ-3. கோ-4 புல், அகத்தி, வேலிமசால், குதிரை மசால், தீவனச்சோளம், சூபாபுல், கலப்பகோனியம், கிளைசிரிடியா போன்றவை இருக்கின்றன. இந்த வகையில் நேப்பியர் ஒட்டுப்புல் (கோ-1, கோ-2, கோ-3) நீர்ப்புல், கொளுக்கட்டை புல், ஈட்டிப்புல், கினியாப்புல் மற்றும் மயில் கொண்டைப்புல் ஆகியவை முக்கியமானது ஆகும்.

இவ்வகையில் புரதச்சத்து 5 லிருந்து 10 சதம் வரை உள்ளது. இதில் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-3 ரகமானது அதிக விளைச்சல் தரக்கூடியது. அதாவது ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் 150 டன்கள் வரையில் விளைச்சலை எதிர்க்கலாம்.

இது ஒரு முறை பயிர் செய்தால் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளைச்சல் தரக்கூடியது.  இந்த கோ-3 ரகத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொட்டில் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு பசுந்தீவனமாக அளிப்பதன் மூலம் ஆடுகளின் உடல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.

பயறுவகை பசுந்தீவனங்களை புல் வகை தீவனங்களுடன் கலந்து கொடுப்பது அடர் தீவனத்தை தீவனமாக கொடுப்பதற்கு சமமானது. இவற்றில் வேலிமசால் அதிக விளைச்சல் தரக்கூடியது. அதாவது ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் 40 டன் வரை விளைச்சலை தரும்.

click me!