தமிழ்நாட்டில் பயறு வகைகளின் தேவை ஆண்டுக்கு 18 முதல் 20 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 9.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஒரு எக்டருக்கு 430 கிலோ பயறு என்ற விகிதத்தில் 4 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
பயறு வகை பயிர்கள்
பயறு வகை பயிர்கள் குறைந்த நீர்த்தேவையை கொண்ட பயிர்களாகும். குறைந்த செலவில் அதிக லாபம் பெற்றிட ஏதுவான பயிர் வகையும் ஆகும். எனவே குறுகிய காலத்தில் குறைந்த நீரை கொண்டு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற பயறுவகைகளை பயிரிடலாம்.
பயறு வகை பயிர்களின் சிறப்பு பயன்கள்
உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறு வகை பயிர்கள் குறுகிய காலப்பயிர்களாகும். குறைந்த முதலீட்டில் குறைந்த நீரைக்கொண்டு அதிக லாபம் பெற முடிகிறது.
பயறு வகை சாகுபடி செய்யும் நிலங்களில், வேர்முடிச்சுகளால் நுண்ணுயிர்கள் பெருகி, காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்துவதால் மண்வளம் அதிகரிக்கிறது.
இவை சாதாரணமாக எக்டருக்கு 17 முதல் 27 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேகரித்து வைக்கும். கால்நடைகளுக்கும் தீவனமாகிறது.
பயறுவகைகள் வறட்சியை தாங்குவதால் சாகுபடிக்கு 200 மி.மீ நீர் தேவை போதுமானது. பயறு வகைகளை தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் வரப்புகளின் ஓரத்திலும், கலப்பு பயிராகவும் பயிர் செய்யலாம்.
தாவர வகைகளுக்குள் பயறு வகைகள் மட்டும் தான் எல்லா பயிருடனும் எல்லா பருவத்திலும் ஊடு பயிராகவும் சுழற்சி பயிராகவும் பயிரிடலாம். மேலும் வாய்க்கால், வரப்பு என எல்லா இடங்களிலும் வளரக்கூடிய பயிர். பணப்பயிர்களுடன் இணைத்து பயிரிடுவதால் மற்ற பயிர்களின் மகசூல் குறைவது இல்லை.
அத்துடன் தன்னுடைய வேர் முடிச்சுகளின் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து தான் சார்ந்துள்ள மற்ற பயிர்களுக்கு கொடுக்கின்றது. இதனால் மகசூல் அதிகரிக்கிறது. மண்ணில் தழைசத்தின் அளவும் கூடுகின்றது.
பயறு வகை பயிர்களின் உற்பத்தியை பெருக்க வழிகள்
தனிப்பயிராகவும், நெல்லுக்கு பின் ஈரப்பதமுள்ள இடங்களில் நஞ்சை பயிராகவும் பயிரிடலாம்.
சிறுதானியம், நிலக்கடலை, கரும்பு, பருத்தி பயிர்களில் ஊடுபயிராகவும் பயிரிடலாம்.
நெல்வரப்பில் பயிரிடலாம்.
மானாவாரி பருத்தியில் கலப்பு பயிராகவும் பயிரிடலாம்.
கரும்பு, வாழை போன்ற ஆண்டு பயிர்களுடன் இளம் பருவத்தில் பயிரிடலாம்.
சரியான ரகங்களை சரியான பருவத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.
பயிர் எண்ணிக்கையினை சைக்கிள் டயருக்கு 11 செடிகள் வீதம் பராமரிக்க வேண்டும்.
டிரைக்கோடெர்மா விரிடி போன்ற எதிர் உயிர் பூசண விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ரைசோபியம் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் விதை நேர்த்தியும் செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த உர மேலாண்மையை கடை பிடிக்க வேண்டும். இயற்கை உரம், உயிர் உரம், நுண்ணூட்ட உரம் மற்றும் செயற்கை உரங்களை சரியான அளவில் இடவேண்டும்.
இலை வழியாக உரங்களை தெளித்தலும், பயிர் ஊக்கிகளை தெளித்தலும் வேண்டும்.
புதிய சாகுபடி முறைப்படி சாம்பல் சத்தினை இடவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.
காலத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
சரியான முறையில் பயறு தானியத்தை பிரித்தெடுத்து சேகரிக்க வேண்டும்.