கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் பயன்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் இருப்பதால் தான் இவைகளின் மூலமாக பெறப்படும் பொருளாதாரமும் சொற்ப அளவிலேயே முடங்கி விடுகின்றன.
பெரிய பண்ணையாக அமைத்து அவற்றின் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வழி வகை செய்கிறது. இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஓடத்துரை கிராமத்தில் உள்ள நவலடி ஆட்டுப் பண்ணையின் நிர்வாகியான செல்வராஜ் (சிவில் என்ஜினீயர்) கூறியதாவது:–
ஆழ்கூள முறை ஆடு வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு போன்ற நுட்பங்கள் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் பரவி அந்த தொழில் நுட்பங்கள் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
வெள்ளாடு வளர்க்க குறைந்த அளவில் முதலீடு போதுமானது. கொட்டகை வசதி மற்றும் பராமரிப்பு செலவு குறைவு. அதாவது சிறிய அளவில் 25 ஆடுகள் கொண்ட ஆட்டுப்பண்ணை அமைக்க குறைந்த பட்சம் ரூ. 1 லட்சம் போதுமானது.
25 தலைச்சேரி ஆடுகளுக்கு ஒரு போயர் கிடாய் போதுமானது. தலைச்சேரி ஆடுகளை கேரளாவில் மலபாரில் இருந்தும் போயர் (தென்னாப்பிரிக்கா இனம்) கிடா புனேயில் இருந்தும் வழங்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கு தீவனம் வளர்க்க ஒரு ஏக்கர் நிலம் தேவை. 25 ஆடுகளை பராமரிக்க ஒரு ஆள் போதும். பண்ணையில் வளர்ப்பதற்கு தலைச்சேரி ஆடுகளும், போயர் கிடாய்களும் மிகச் சிறந்தது ஆகும். தலைச்சேரி இனத்துடன் போயர் கிடாயை இனக்கலப்பு செய்து பெறப்படும் இனம் மிக தரமானதாக இருக்கும்.
25 தலைச்சேரி ஆட்டிற்கு ஒரு போயர் கிடாய் போதும். 25 ஆட்டிற்கு ரூ.1.50 லட்சமும், சாதாரண கொட்டகை அமைக்க ரூ.25 ஆயிரம் தேவைப்படும். 25 ஆடுகள் வளர்க்க தேவையான தீவனம் பயிரிட ஒரு ஏக்கர் தேவை. தீவனத்தை தென்னந்தோப்பில் ஊடுபயிராக இடலாம்.
முதல் ஆண்டில் லாபம் இல்லை. இரண்டாவது ஆண்டில் ஒரு ஆடு 6 குட்டிகள் வரை போடும். அதாவது ஒரு வயது முடிந்த ஆடு 2 ஆண்டில் 3 முறை குட்டி ஈனும். அதாவது ஒரு ஆடு 6 குட்டிகள் ஈனும். எனவே 25 ஆடுகள் மூலமாக 150 குட்டிகள் கிடைக்கும். இதை 3 மாதம் வளர்த்து விற்கும் போது ஒரு குட்டி 3,500 ரூபாய்க்கு விற்கலாம். 25 குட்டிகளுக்கு 5 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
தேவையாள், கூலி, பசுந்தீவனம், அடர் தீவனம், பராமரிப்பு செலவு என அனைத்து செலவும் சேர்த்து ஒரு லட்சம் வைத்து கொண்டாலும் 4 லட்சம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.