இறைச்சிக்காக ஆடுவளர்ப்போர் தலைச்சேரி ஆட்டினத்தை வளர்த்தால் வருமானம் கொட்டும்...

 |  First Published Dec 27, 2017, 1:25 PM IST
high income for breeding thalaiseri
high income for breeding thalaiseri


தமிழகத்தில் மாறி வரும் உணவுப் பழக்கத்தால் வருடா வருடம் இறைச்சிக்கான  தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆடு வளர்ப்பு தொழிலும் முக்கியத்துவம் பெறுகிறது. 

தமிழ்நாட்டில் கன்னி, கொடி என்ற இரண்டு வகையான ஆட்டு இனங்கள் தான் பெருமளவில் காணப்படுகின்றன. 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைச்சேரி என்ற ஆட்டு இனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை ஆடுகள் கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக கருதப்பட்டது. 

தலைச்சேரி இன ஆடுகளின் இறைச்சி சுவையாகவும், அதன் பால் சுரக்கும் திறன் அதிகமாகவும் இருக்கிறது. குறிப்பாக விவசாயம் பொய்க்கும் காலங்களில் ஆடுகள் விவசாயிகளுக்கான பொருளாதார தேவையை ஈடுகட்டும் செல்வங்களாகவே உள்ளன. இதனால் தலைச்சேரி உள்பட ஆடு வளர்ப்பு தொழில் மதிப்பு மிகுந்ததாக மாறி வருகிறது. 

சமீபகாலமாக தலைச்சேரி இனம் மற்றும் வெளிநாட்டு இனமான போயர் இன ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஆடுகளுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. 

மலபாரி என்னும் தலைச்சேரி

தலைச்சேரி ஆடு என்று பரவலாக அழைக்கப்படும் இந்த ஆட்டு இனத்திற்கு மலபாரி என்றும் பெயர் உண்டு. தூய வெள்ளை நிறம் முதல் முழுக்கருப்பு நிறம் வரையில் பல நிறங்களில் இந்த ஆடுகள் காணப்படுகின்றன. 

இந்த ஆடுகளில் ரோமங்கள் மற்ற இன ஆடுகளை விட அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக உடலின் 30 சதவீத ரோமம் இந்த ஆட்டின் தொடைப்பகுதியில் மட்டும் காணப்படும். இந்த இன கிடாக்களுக்கு தாடி உண்டு. இவை இரண்டரை அடி முதல் 3 அடி உயரம் வரை வளரும். மூக்கு சிவந்து காணப்படும். இதன் இறைச்சி மாற்றும் திறன் 48 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. 

இந்த வகை இயல்புகள் கொண்ட தலைச்சேரி இனத்துடன் அயலின கலப்பு என்ற அடிப்படையில் புதிய இயல்புகள் கொண்ட குட்டிகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக போயர் என்ற வெளிநாட்டின ஆட்டு இனத்துடன் தலைச்சேரி ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட குட்டிகள் 6 மாதத்தில் 20 கிலோ எடை கொண்டதாக வளருகிறது. 

அதாவது, இப்படி உருவாக்கப்படும் புதிய இன ஆடுகள் துரித வளர்ச்சி கொண்டதாகவும், இறைச்சியில் கூடுதல் சுவை கொண்டதாகவும் இருக்கின்றன. 

தலைச்சேரி போயர் இன ஆட்டுப்பண்ணை

தலைச்சேரி மற்றும போயர் இன கலப்பின குட்டிகளை உருவாக்கி வளர்க்க சிறிய அளவு முதலீடு போதுமானது. நிரந்தர முதலீடாக 60 க்கு 20 என்ற அளவில் தென்னை மர சட்டங்களால் ஆன சல்லடை தரை அமைப்பை கொண்ட கொட்டகையை அமைக்க வேண்டும். இந்த வகையான கொட்டகை தரையிலிருந்து 4 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். 

அன்றாட செலவீனம்

ஒரு முறை சாகுபடி செய்தால் பல ஆண்டுகள் பலன் தரக்கூடிய ஒட்டு வகை பசுந்தீவங்களான வேலிமசால், சவுண்டல், தீவனச்சோள ரகங்கள் 27,29, கோ4, அகத்தி (தீவனவகை), கிளிரிசிடியா மரங்கள், தட்டைப்பயறு போன்றவற்றை ஆட்டு பண்ணைக்கு அருகில் உள்ள தரிசுநிலங்களில் பயிரிட்டு வரவேண்டும். ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் பசுந்தீவனமானது 25 தலைச்சேரி ஆடுகளுக்கும் அதனால் உருவாக்கப்படும் கலப்பின குட்டிகளுக்கும் போதுமானது.

வருமானம்

தலைச்சேரி இன ஆடுகள் ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி ஈனும் இயல்புடையது. ஒரு ஆட்டிலிருந்து 2 வீதம் 25 ஆடுகளுக்கு 50 குட்டிகள் வரை கிடைக்கும். 6 மாத கால அளவில் இந்த எண்ணிக்கையிலான குட்டிகளை 3 இலட்சம் ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யலாம். 

இதில் குட்டிகள் தீவனம் மற்றும் பராமரிப்புக்கு 1 லட்சம் வரை செலவு செய்யப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் 2 லட்சம் வரை நிகர லாபமாக கிடைக்கும்.

இந்த ஆடுகளை கொண்டு பண்ணை அமைப்பவர்கள் இறைச்சிகடை மற்றும் இனவிருத்தி பண்ணைகளை தனியாக அமைத்துக் கொண்டால் அதன் மூலமாகவும் தனியாக வருமானம் பெற முடியும்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image