மலர் பயிர்களின் ராணி மல்லிகை. ஒரு விவசாயின் பொருளாதாரத்தை உயர்த்தும் பயிர்களில் மல்லிகையும் ஒன்று. தொடர்ந்து பத்து வருடங்கள் வரை மகசூல் தரும் பயிர். செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மகசூல் அதிகரிக்கும்.
குண்டு மல்லி சாகுபடி செய்முறை: நடவு செய்யும்பொழுது செடிக்கு செடி இடைவெளி 4×4 அல்லது 5×4 அடி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். பதியன் குச்சிகள் ஆடி மாதம் நடவு செய்வது மல்லிகைக்கு சிறந்தது.
undefined
1×1.5 ஆழம் குழி வெட்டி ஒரு மாதம் கழித்து மண்புழு உரத்துடன் சிறிது மக்கிய ஆட்டு உரம் மற்றும் மண் கலந்து தயார் செய்து கொள்ளவும். நடவு செய்யும் போது செடியை சுற்றிலும் சிறிது மண் அணைத்து நடவு செய்ய வேண்டும். இதனால் வேர்பிடிப்பு நன்றாக இருக்கும். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
மாதம் ஓரு முறை நுன்னூட்ட சத்துக்கள் வேருக்கு அருகே இட்டு தண்ணீர் கட்ட வேண்டும். உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம், பொட்டாஷ் பாக்டீரியா மற்றும் VAM இவற்றை தொழுஉரத்துடன் கலந்து, சிறிது வெல்லம், தயிர் கலந்து மூன்று நாட்கள் நிழலில் வைக்க வேண்டும்.
பின்னர் மாதம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி பின் வேரில் இடுவதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் செடிங்கள் திடமாகவும் இருக்கும்.
மல்லிகையில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வரிசைகள் இடைவெளியில் சணப்பை விதைகளை தொடர்ந்து தூவி ஓரளவு வளர்ந்த உடன் மடக்கி உழுது விட்டால் நல்ல சத்துக்கள் மல்லிகை செடிகளுக்கு கிடைக்கும். மேலும் களைகள் எளிதாக கட்டுப்படும்.
மல்லிகை நடவு செய்த ஆறாம் மாதம் முதல் பூக்கள் தோன்றும். ஏப்ரல் மாதம் முதல் அதிகமாக துளிர்கள் தோன்றும். பிறகு மொட்டுகள் தோன்ற ஆரம்பிக்கும். மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றை தொடர்ந்து பாசன நீரில் கலந்து விடுவதால் நல்ல மகசூல் கிடைக்கும்.
மேலும் அளவிற்கு அதிகமாக துளிர் மற்றும் பூக்கள் தோன்றும். வருடத்திற்கு வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் மக்கிய ஆட்டு சாணம் இடவேண்டும்.
மல்லிகை செடிகளை அதிகம் தாக்குவது செம்பேன் மற்றும் மொட்டு துளைப்பான். கற்பூரகரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இவை இரண்டையும் மாறி மாறி தெளித்து வந்தால் எந்தவித பூச்சி தாக்குதலும் இருக்காது.
இரண்டாவது வருடம் முதல் பூக்கள் பூத்து முடிந்த உடனே கவாத்து செய்து செடிகள் அதிக உயரம் வளராமல் தடுக்கலாம். இதனால் அதிக துளிர்கள் தோன்றும். மேற்சொன்ன இயற்கை சாகுபடி முறை பின்பற்றினால் வருடம் முழுவதும் பூக்கள் பறிக்கலாம் மகசூல் அதிகமாக இருக்கும்.