சம்பங்கி மலர் அணைத்து விதமான விழாக்கள் மற்றும் விசேஷங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த மலருக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதிக பணம் மற்றும் தின வருமானம் ஈட்டி தரும் மலர் பயிர்களில் முக்கிய பங்கு வகிப்பது சம்பங்கி மலர். விவசாயின் பொருளாதார நிலையை உயர்த்தும் பயிர்களில் இதுவும் ஒன்று.
மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால், பியர்ள் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. பிரஜ்வால் ரகம் அதிக மகசூல் தரவல்லது. பூங்கொத்தில் மொட்டுகள் அதிகமாகவும் பூக்கள் நீளமாகவும் காணப்படும்.
பக்ககிளைப்புகள் அதிகமாக வருவதால் அதிகமான மகசூல் கிடைக்கும். சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும். மேலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண், 6.5 முதல் 7.5 வரை உள்ள கார அமிலத்தன்மை ஏற்றது.
சம்பங்கி நீண்டகாலப் பயிர், இதற்கு சத்துக்கள் அதிகம் தேவைப்படும். இயற்கை முறையில் பயிரிடும்பொழுது ஏக்கருக்கு பத்து டன் தொழுஉரம், வேப்பம் பிண்ணாக்கு ஐம்பதுகிலோஅடிஉரமாகஇடவேண்டும். மண்புழு உரம் இடுவதன் மூலமாக தேவையான சத்துகள் கணிசமாக மண்ணில் அதிகரிக்கும்.
நடவு செய்யும்பொழுது வரிசைக்கு வரிசை குறைந்தபட்சம் இரண்டு அடி முதல் அதிகபட்சம் இரண்டரை அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். சிலர் இரு வரிசை முறையிலும் நடவு செய்கிறார்கள்.
நன்கு பூத்த மற்றும் குறைந்தது மூன்று வருடம் ஆன தோட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட கிழங்குகளை நடவு செய்ய வேண்டும். இதனால் வளமான செடிகளை பெறலாம். 25 முதல் 30 கிராம் எடையுள்ள கிழங்குகள் நடவுக்கு ஏற்றவை. ஏக்கருக்கு 44,800 கிழங்குகள் தேவைப்படும்.
45 செ.மீ. இடைவெளியில் பார் பிடித்து, பாரின் சரிவுகளில் 20 செ.மீ. இடைவெளிகளில் இரண்டரை செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் கிழங்கு ஊன்றுதல் நல்லது. கிழங்கு எடுத்து 30 நாள் கழித்து ஊன்ற வேண்டும்.
உயிர் உரங்கள் அதிகமாக பயன்படுத்துவதால் அதிக மகசூல் கிடைக்கும். VAM, ஹூமிக் அமிலம் கண்டிப்பாக பயன் படுத்த வேண்டும் இவை எல்லாம் மாதம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது.
வாரம் ஒரு முறை மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல், மீன் அமிலம் கலந்து பாசன நீரில் விட வேண்டும். தேங்காய் பால் மோர் கரைசல், மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இவற்றை பத்து நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும் தேவைப்பட்டால் ஜிப்ரலிக் அமிலம் பயன்படுத்தலாம்.
தேவைப்படும்போது கை அல்லது இயந்திரம் மூலம் களை எடுக்க வேண்டும். அதிகாலையில் பூக்களை பறிப்பதன் மூலம் ஊட்டமான மலர்கள் பெறலாம். பூத்து முடித்த மலர் காம்புகளை உடனே அறுத்து எடுத்து வரிசைகள் இடையில் மூடாக்காக இடலாம்.
சம்பங்கியை அதிகமாக இரண்டு வகையான பூச்சிகள் தாக்கும். மொட்டு துளைப்பான் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள். இவற்றை கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் முழுமையாக கட்டுப்படுத்தலாம். ஐந்து நாள் இடைவெளியில் கற்பூரகரைசல் தொடர்ந்து அளித்து கொண்டே இருக்க வேண்டும் இதனால் பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை முற்றிலும் காக்கலாம்.
வரிசைகள் இடையில் சணப்பு விதைத்து, சிறிது உயரம் வளர்ந்த உடனே அறுத்து மூடாக்கு இட்டால் களைகள் கட்டுப்படும் மண் புழுக்கள் எண்ணிகையில் கணிசமாக உயரும் ஆனால் இது சற்று கடினமான வேலை. இவ்வாறு செய்வதால் மகசூல் கணிசமாக அதிகரிக்கும்.