மாவுப்பூச்சிகளிடம் இருந்து தோட்டப் பயிர்களை எப்படி பாதுகாப்பது?

 |  First Published Oct 15, 2016, 5:06 AM IST



 

தோட்டக்கலை பயிர்களைப் பெருமளவுத் தாக்கும் பேராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் என்ற மாவுப்பூச்சியில் இருந்து பயிர்களைக் காப்பது எப்படி என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் வழிகாட்டுகிறார்.

Tap to resize

Latest Videos

அவரது அளிக்கும் தகவல்கள்: இந்த மாவுப் பூச்சியானது பப்பாளி, மரவள்ளி, கொய்யா, மல்பெரி, பருத்தி, கத்தரி, வெண்டை, செம்பருத்தி ஆகிய செடிகளை அதிகளவு தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றன.

இந்த மாவுப்பூச்சியின் தாக்குதலால் பயிர்கள் 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் இழக்க வாய்ப்புள்ளது. வறட்சியும், வெப்பமும் அதிகமாக உள்ள கோடை காலங்களில் மாவுப்பூச்சியின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படும்.

மாவுப்பூச்சியின் குறுகிய வளர்ச்சிக் காலமும், பூச்சியின் அதிக இனப்பெருக்கத் திறனும், இப் பூச்சியின் மேல் இருக்கும் மாவு போன்ற பாதுகாப்பு கவசத்தால் பூச்சிக்கொல்லிகள் ஊடுருவிச் செல்வதைத் தடுக்கும் திறனும் உள்ளதால் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் இப் பூச்சியைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

மாவுப்பூச்சியின் தோற்றம்: உடல் முழுவதும் மாவு, மெழுகுப்பூச்சுடன் கூடிய மாவுப்பூச்சிகள் 2.5 மி.மீ. முதல் 4 மி.மீ. நீளமுள்ளது. பெரும்பாலான மாவுப்பூச்சிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும், சிலவகை வெள்ளை கருஊதா, மஞ்சள் நிறத்திலும் நீள்வட்டமாக காணப்படும். உடலின் பக்கவாட்டிலும், பின் பகுதியிலும் மெழுகு போன்ற இலைகள் காணப்படும்.

மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: மாவுப்பூச்சி தாக்கப்பட்ட ஆரம்ப நிலையில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இலைகள் வளைந்தும், நெளிந்தும், குறுத்தில் இலைகள் சிறுத்து திருகிக் கொண்டிருக்கும். இலையின் அடிப்பகுதி, குருத்து, கிளைகள், தண்டுப்பகுதிகளில் வெள்ளையாக அடை போல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும். சிவப்பு, கருப்பு எறும்புகளின் நடமாட்டம் தென்படும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன் மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும். இப்பூச்சியின் தாக்குதல் அதிகளவில் இருக்கும்போது இலைகள் வாடி கருகிவிடும்.

மாவுப்பூச்சி மேலாண்மை: களைகளை அகற்றி வயல்களை சுத்தமாகப் பராமரிக்கவும். மாவுப்பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள், களைச் செடிகளைப் பூச்சிகள் அதிகம் பரவாமல் பிடுங்கி அழிக்க வேண்டும். ஆரம்ப காலத்திலிருந்தே செடிகளில் மாவுப்பூச்சிகள், எறும்புகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும்போதே பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகள் அதிகம் இருக்கும்போது, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். சேதம் குறைவாக இருக்கும் போது இயற்கைப் பூச்சிக்கொல்லிகளை தாக்கப்பட்ட செடிகள், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தெளிக்க வேண்டும்.

வேப்ப எண்ணெய் – 2 சதவீதம் கரைசல், வேப்பங்கொட்டை பருப்புச்சாறு – 5 சதவீதம் கரைசல், மீன் எண்ணெய் சோப்பு – ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம், சேதம் அதிகமாக இருக்கும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கவும்

குறிப்பு: ஒரே பூச்சிக்கொல்லியைத் திரும்பத் திரும்பத் தெளிக்காமல், சுழற்சி முறையில் வெவ்வேறு பூச்சிக்கொல்லிகளை தெளிக்கவும்.

தேவைப்பட்டால் மீன் எண்ணெய் சோப்புடன், பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கலந்து தெளித்து இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

click me!