இயற்கைத் தக்காளிக்கு இருக்கும் மவுசே தனி… நேரடி விற்பனையில், ரூபாய் 1 லட்சம் கூடுதல் லாபம்!

 |  First Published Oct 14, 2016, 4:22 AM IST



கஷ்டப்பட்டு உழைத்து, என்னதான் தரமான மகசூலை எடுத்தாலும்… அதை சந்தைப்படுத்துதல் என்கிற விஷயத்தில், விவசாயிகளுக்குச் சறுக்கல்தான். கமிஷன் மண்டியில் என்ன விஅலைக்கு விற்றாலும், மொத்த விற்பனையில், 10 சதவிகிதம் தரகு அழுதாக வேண்டும். சிலசமயம் விற்ற பணம் கமிஷனுக்கே சரியாகிப்போய், வெறும் கோணிப்பையுடன் வீடு திரும்பும் நிலையும் விவசாயிகளுக்கு ஏற்படுவது உண்டு. ‘இதை மாற்ற வழியே இல்லையா?’ என்ற ஏங்கும் விவசாயிகள் ஒரு பக்கம் இருந்தாலும்… சில விவசாயிகளே வியாபாரிகளாக மாறி, தரகு இல்லாமல் லாபம் பார்த்து வருகின்றனர். இந்த வரிசையில், திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அடுத்துள்ள நிழலிக்கவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரமும் ஒருவர்.

விளையும் தக்காளியை வியாபாரிகளுக்குக் கொடுக்காமல்… தன் மனைவி சுகந்தியுடன் சேர்ந்து, நடுத்தர ஊர்களில் நடக்கும் வாரச்சந்தைகளில் கொண்டு போய் சில்லரை விலைக்கு விற்பனை செய்து வருகிறார், சோமசுந்தரம். கொஞ்சம் மாற்றி யோசித்து, இவர்கள் நல்ல லாபம் ஈட்டி வரும் வித்தையை, நாமும் தெரிந்து கொள்வோமா!

Tap to resize

Latest Videos

ஊடுபயிராக தக்காளி!

பச்சை காட்டி விளைந்து நிற்கும் தக்காளிச் செடிகளில் செந்நிற சீரியல் பல்புகளாய் தொங்கும் பழங்களைப் பறித்துப் பறித்துப் பெட்டியில் அடுக்கும் பணியில் முனைப்பாக இருந்த தம்பதியைச் சந்தித்தோம்.

“எனக்கு சொந்த ஊரே இதுதாங்க. ஏழு ஏக்கர் தோட்டம் இருக்கு. முழுக்க கிணத்துப்பாசனம்தான். எந்த வெள்ளாமை வெச்சாலும், பழுதில்லாம வெளையுற செம்மண் பூமி. வெங்காயம், கத்திரி, தக்காளினு நம்ம தோட்டத்துல ஏதாவது ஒரு பயிர் இருந்துட்டேஇருக்கும். ரெண்டு வருஷத்துக்கு முன்ன, நாலு ஏக்கர்ல பொள்ளாச்சி நெட்டை+குட்டை ரக தென்னையை நட்டிருக்கேன். அதுல ஊடுபயிரா 3 ஏக்கர்ல தக்காளி நடவு போட்டியிருக்கேன். 50 சென்ட்ல பீர்க்கன் இருக்கு. வருஷம் முழுசும் அறுவடை பண்ற மாதிரிதான் சுழற்சி முறையில் தக்காளி போடுவோம். அதனால, எனக்கு தாக்காளி மூலமா வருஷம் முழுசும் வருமானம் கிடைச்சுட்டே இருக்கும். நர்சரிகள்ல நாத்தாவே வாங்கி நடுறதால, பழுதில்லாம விளைஞ்சு வருது.

3 லட்ச ரூபாய்!

தக்காளியை நடவு செஞ்ச 70-ம் நாள்ல இருந்து தொடர்ந்து 50 நாளைக்கு அறுவடை செய்யலாம். ஊடுபயிரா போட்டியிருக்கறதால ஏக்கருக்கு 30 டன் அளவுக்குத்தான் மகசூல் கிடைக்கும். தனிப்பயிரா போட்டா, 40 டன்னுக்கு மேல கிடைக்கும். ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட ஒன்பது, பத்து மாசம் தினமும் காய் கிடைக்கிற மாதிரி நடவு செய்வோம். மொத்தம் மூணு ஏக்கர்லயும் சேர்த்து, சராசரியா வருஷத்துக்கு 90 டன் அளவுக்கு தக்காளி கிடைக்கும். சில சமயங்கள்ல கிலோ 2 ரூபார் இருக்கும். சமயங்கள்ல 50 ரூபாய் இருக்கும். சராசரியா 10 ரூபாய் கிடைச்சுடும். ஒரு பெட்டிக்கு 15 கிலோ தக்காளின்ற கணக்குல 90 டன்னுக்கு 6 ஆயிரம் பெட்டி மகசூல் இருக்கும்.

     எங்க ஊருல செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை. அன்னிக்கு வேலையாட்களுக்கு சம்பள நாள். அதனால அன்னிக்கு பறிப்பு இருக்காது. மத்த ஆறு நாளும் பறிப்பு இருக்கும். அன்னன்னிக்கு பறிக்கிற தாக்காளியை காங்கேயம், வெள்ளக்கோவில், முத்தூர்னு வாரச்சந்தைக்கு கொண்டு போய் வித்துட்டு வந்துடுவேன். வாரத்துல ஆறு நாள் சந்தைக்கு தக்காளி கொண்டு போயிடுவேன். வேன் வாடகை, ஏத்துக் கூலி, இறக்குக் கூலி, சுங்கம் எல்லாம் சேர்த்து, ஒரு பெட்டிக்கு 20 ரூபாய் செலவாகும். அந்த வகையில, விற்பனைக்காக 90 டன்னுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு. தொழுவுரம், பாத்தி, களை, பறிப்புக்கூலி மாதிரியான விஷயங்களுக்கு மூணு ஏக்கருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபய் செலவாகும். 90 டன் தக்காளியை விற்பனை செய்றப்போ… 9 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல செலவு 3 லட்சம் போக 3 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 6 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. இதையே கமிஷன் மண்டிக்கு அனுப்பியிருந்தா கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு அவங்களுக்கு கமிஷன்கொடுக்க வேண்டி வந்திருக்கும். 5 லட்சம்தான் கைக்கு வரும், என்ற சோமசுந்தரத்தைத் தொடர்ந்து நிறைவாகப் பேசினார், சுகந்தி.

“விவசாயிங்க விளைவிக்கிற பொருள்ல கொஞ்சத்தையாவது, நேரடியா விற்கணும். அப்பதான் இடைத்தரகு அழியும். கட்டுபடியாகுற விலையும் கிடைக்கும். காய்கறிகளுக்கு எப்பவுமே நல்ல டிமாண்ட் இருக்கு. அதுவும் இயற்கை முறையில விளையுற காய்கறிகளுக்கு தனி வாடிக்கையாளருங்க இருக்காங்க. கிராமச் சந்தைகள்ல இயற்கை விவசாயம் பத்தின விழிப்பு உணர்வு ரொம்பக் குறைவாத்தான் இருக்கு. எங்க தோட்டத்துல விளையுற தக்காளி ‘சும்மா’ வெங்கைக் கல்லு மாதிரி கெட்டியா இருக்கு. நீண்ட நாட்கள் வரை அழுகிப்போறதில்லை. பழவெடிப்பும் கிடையாது. அதுக்கு காரணம் முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறதான். ஒவ்வொரு சந்தையிலும் இதை எடுத்துச் சொல்லிட்டு இருக்கோம். அதனால, இயற்கையில விளைவிச்சு, நேரடியா வித்தா எல்லா வியாபாரியும் லட்சாதிபதிதான்” என்று மனைவி சொன்னதை ஆமோதித்து, தலையாட்டினார் சோமசுந்தரம்.

tags
click me!