மண்ணுக்கும் உயிர் உண்டு. அந்த உயிரை மேலும் உயிர்ப்பிக்க உரங்கள் தேவை. செயற்கை உரங்கள் இல்லை. இயற்கை உரம்.
இந்த இயற்கை உரங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். இயற்கை உரத்தை எப்படி தயாரிக்கலாம்?
* காய்ந்த இலைகளை ஒரு தொட்டியில் போட்டு, அதில் மண்புழுக்களைப் போட்டால், அந்தப் புழுக்கள் இலைகளை உண்டு, அவற்றை வளமிக்க உரமாக மாற்றிவிடும். இதை காம்போசிட் உரம் என்று கூறுவார்கள். இந்த காம்போசிட் உரத்தை மண்ணுடன் சேர்த்தல் நல்ல விளைச்சலைப் பார்க்க முடியும். இதற்கு முக்கியக் காரணம் இந்த காம்போசிட்டில் நைட்ரஜன் இருப்பதே ஆகும்.
* அடுத்ததாக மாட்டுச் சாணம் அல்லது குதிரைச் சாணத்தை உபயோகிக்கலாம். இவையும் நைட்ரஜன் சத்து நிறைந்துள்ள உரங்கள் தான். இவை நல்ல பச்சை இலைகள் வளர உதவும்.
* இதைவிட மிகவும் எளிய முறையில் மண்வளத்தைக் கூட்ட நோயில்லாத காய்ந்த இலைகளை நன்றாகக் கசக்கி, நொறுக்கிப் பூந்தொட்டிகளில் போட்டு வைக்கலாம். நோயுள்ள இலைகளைப் போட்டால் மண் கெட்டுவிடும்.
இவ்வாறு காம்போசிட் உரங்களான சாணம் அல்லது காய்ந்த இலைகளை உரங்களாக தொட்டிகளில் போடும் போது, கவனிக்க வேண்டியவை:
* முதலில், மண்ணை நன்கு கலைத்து அதன் பின்னர் உரங்களை நன்றாக உள்ளே தள்ளி வைக்க வேண்டும்.
* அதே போல் உரங்களை மண்ணில் போடும் போது, மண் அதிக ஈரமாகவோ அல்லது அதிகமாக உலர்ந்தோ இருக்கக் கூடாது. மிதமான ஈரப்பதம் இருத்தல் நல்லது.
இவ்வாறு மண்வளத்தைக் காத்து, இயற்கை உரங்களைச் சேர்த்து விளைச்சலை அதிகரிக்கலாம்.