பருத்தியில் பூச்சி மேலாண்மையை எப்படியெல்லாம் மேற்கொள்ளலாம். வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

First Published Jul 4, 2018, 12:53 PM IST
Highlights
How to manage pest management in cotton Find the bachelor ...


பருத்தியில் பூச்சி மேலாண்மை

** விதை நட்ட 10-20 நாட்களில் விளக்குப்பொறி வைக்கவேண்டும். இது தத்துப்பூச்சி, புரோடீனியா, பச்சைக் காய்ப்புழு, காய்ப்புழுக்களின் அந்துப் பூச்சிகள் ஆகியவற்றின் நடமாட்டம், எண்ணிக்கை, சேதம் ஆகியவற்றைக் கணிக்க உதவுகிறது.

** பச்சைக் காய்ப்புழு, இளஞ்சிவப்புக் காய்ப்புழு மற்றும் புரோடீனியா புழுக்களின் சேதத்தைத் தவிர்க்க ஒவ்வொரு பூச்சிக்கும் உரிய இனக்கவர்ச்சிப் பொறிகளை ஒரு ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் வைக்க வேண்டும். இதனால் ஆண் பூச்சிகளை வெகுவாகக் குறைக்கமுடியும்.

** உயிரியல் முறையில் வைரஸ் கிருமிகளைக் கொண்டு புழுக்களை அழிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 300 வைரஸ் தாக்கிய புழுக்கள் வீதம் உபயோகித்து மாலை நேரங்களில் பருத்தி செடிகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

** பூச்சிகளின் முட்டைக்குவியல், சிறிய வளர்ந்த புழுக்கள், உதிர்ந்த சப்பைகள், பூக்கள், காய்கள் மற்றும் இலைகள் ஆகியவற்றை பொறுக்கி அழிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். தண்டுக்கூன் வண்டு மற்றும் வேர்புழு தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்து விடவேண்டும்.

** பூச்சிகளின் எண்ணிக்கை, சேதம், பொருளாதார சேத நிலையை எட்டிவிட்டால் பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துவது தவிர மாற்று வழியில்லை. இந்நிலையில் பரிந்துரை செய்யப்படுகின்ற பூச்சி கொல்லிகளை சரியான அளவில் உபயோகிக்கவேண்டும். 

** பூச்சி கொல்லிகளின் வீரிய சக்தி, நச்சுத்தன்மை ஆகியவற்றை நன்கு அறிந்து தெளிப்பானுக்குத் தக்கவாறு நீரின் அளவை உபயோகித்து, செடியில் நன்கு படியும்படி தெளிக்கவேண்டும்.

** சில பூச்சிகொல்லிகள், பூச்சிகளின் பெருக்கத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டிருப்பதால் அவற்றை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மாறுபட்ட அமைப்பு கொண்ட பூச்சி கொல்லிகளை ஒவ்வொரு முறையும் தெளிக்க வேண்டும்.

** பருத்தி அறுவடை முடிந்த பின்பு செடிகளை நிலத்தில் விட்டு வைக்கக்கூடாது. குறிப்பிட்ட வயது முடிந்ததும் எஞ்சியுள்ள காய்களை எல்லாம் பறித்துவிட்டு செடிகளை பிடுங்கிவிட வேண்டும்.

click me!