இயற்கை  முறையில் வெள்ளைப்பூண்டு சாகுபடி செய்வது எப்படி? வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

 |  First Published Apr 21, 2018, 12:39 PM IST
How to make white ginger cultivation...



வெள்ளைப்பூண்டு சாகுபடி

இது ஒரு மணமூட்டும் பயிர். வணிக ரீதியில் நம் நாட்டில் பயிரிடப்படுகிறது. வைட்டமின் பி6, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, காப்பர், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. 

Tap to resize

Latest Videos

undefined

பச்சைப்பூண்டில் அஸ்கார்பிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் மலைப்பூண்டு பிரபலம். மேல்பழநி மலைப்பகுதிகளான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை பகுதிகளில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இரகங்கள் : ஊட்டி 1, சிங்கப்பூர் ரெட், மதராசி, ஆகிய பூண்டு இரகங்கள் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படுகின்றன.ஊட்டி 1 ரகம் 120 முதல் 130 நாட்களில் எக்டருக்கு 17 டன்கள் மகசூல் கொடுக்கும். 

இலைப்பேன், இலை நூற்புழு, இலைக்கருகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.சிங்கப்பூர் உள்ளூர் ரகம் கொடைக்கானல், ஊட்டி, போடி மலைப்பிரதேசங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

யமுனா சபேத்-1 (ஜீ-1), யமுனா சபேத் -2 (ஜீ-50), யமுனா சபேத் -3 (ஜீ-282), அக்ரிபவுண்ட் ஒயிட் (ஜீ-40), யமுனா சபேத்-4 (ஜி-323) ஆகிய ரகங்கள் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவாக ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சி, நல்ல சூரிய ஒளி என வேறுபட்ட தட்பவெப்ப நிலையில் நன்றாக வளரும் வளமான வடிகால் வசதி கொண்ட மண் மிகவும் அவசியம்.

கார அமிலத்தன்மை 5 முதல் 6 வரை மண்ணில் இருக்க வேண்டும்.நிலத்தை நன்கு பண்படுத்தி அடியுரமாக எக்டருக்கு 30 டன் தொழுஉரம், 500 கிலோ வேப்பம் புண்ணாக்கு போன்ற உரக்கலவைகளை அடியுரமாக இடவேண்டும்.

நன்றாக பண்படுத்திய மண்ணை 1மீ அகலமும், 15 செ.மீ. உயரமும் தேவையான அளவு நீளமும் கொண்ட மேட்டுப்பகுதிகளாக தயாரிக்க வேண்டும்.ஒரு எக்டர் நடவுக்கு சுமார் 500 முதல் 600 கிலோ பூண்டு பற்கள் தேவைப்படும். 

விதைப்பூண்டிலிருந்து 8 முதல் 10 மிமீ விட்டம் மற்றும் 4 கிராமிற்கும் அதிகமான எடை கொண்ட பூண்டு பற்களை தேர்வு செய்ய வேண்டும்.நடுவதற்கு முன்பு பூண்டுகளை முதலில் நீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும். 

பின்பு அமிர்த கரைசலில் விதைப்பற்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.மலைப்பகுதிகளில் அக்டோபர் – நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விதைக்க வேண்டும். 

விதைகளை பாருக்கு பாராக 15 செ.மீ. இடைவெளியிலும், விதைக்கு விதை 10 செ.மீ இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.பூண்டின் வளர்ச்சி காலத்தில் 7 முதல் 8 நாட்களுக்கு ஒருமுறையும், முதிர்ச்சியடையும் போது 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் அளிக்கப்படுகிறது.

மழைக்காலத்தில் வடிகால் வசதி அனைத்து நிலத்திலிருந்து நீரை வடிப்பது அவசியம். நடவு செய்த 45வது நாள் மேலுரமாக 35 கிலோ தழைச்சத்து இடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

நடவு செய்த 120 முதல் 130 நாட்களுக்குள் மஞ்சளாக மாறியபின் அறுவடை செய்யலாம்.10 நாட்களுக்கு முன்பே நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும்.மகசூலாக எக்டருக்கு 6 முதல் 8 டன்கள் கிடைக்கிறது.

அறுவடைக்கும் பின் புகை மூட்டம் செய்யப்பட்டு பூண்டுகள் பாதுகாக்கப்படுகிறது.அறுவடை செய்யும் போது பூண்டை வேருடன் அகற்றி எடுத்து, வேரையும் பொய்த் தண்டையும் அறுத்து விட்டு பூண்டை காய வைத்து பிறகு விற்பனை செய்ய வேண்டும்.

இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவு செய்த 30வது நாளில் ஒரு லிட்டர் நீரில் 5மிலி வேப்பெண்ணெயை கலந்து தெளிக்க வேண்டும். வெட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த பயிரின் தண்டுப் பகுதியில் வேப்பிலைக் கரைசலை மாலை நேரங்களில் ஊற்ற வேண்டும். 

சாம்பல் நோய், அழுகல் நோய், வெண்நுனி இலை, நூற்புழு ஆகியவற்றை தக்க முறைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும்.


 

click me!