நெற்பயிர் நன்கு வளர்ந்துள்ள நிலையில் பூச்சி நோய் தாக்குதல் தென்படும். அவற்றை எப்படி கட்டுபடுத்துவது என்று பார்க்கலாம்.
இலைச் சுருட்டுப் புழு:
ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறத்தில் வண்ணத்துப் பூச்சி வயல்களில் தென்படும். தாய் அந்துப் பூச்சி நெல் தோகையின் அடிப்பாகத்தில் நடு நரம்புக்கு அருகில் தனித்தனியே சுமார் 300 முட்டைகள் வரை இடும். 4 முதல் 6 தினங்களில் முட்டையிலிருந்து புழு வெளிவந்து நெற்யிரின் தோகையை நீளவாக்கிலும் குறுக்கும் மடக்கி அதில் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டி சாப்பிடும்.
இதனால், தோகை வெளுத்து பின் காய்ந்து விடும். கதிர் வரும் சமயத்தில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால் நெல் மணிகள் பாதிப்பு ஏற்படும்.
எப்படி கட்டுப்படுத்துவது:
இலை சுருட்டு புழு தாக்கிய வயல்களில் பூச்சியை கட்டுப்படுத்திய பின் தழைச்சத்து இடுவது நல்லது. இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசாடிராக்டின் (வேம்பு மருந்து) 1000 மில்லி, மோனோகுரோடாபாஸ் 500 மிலி, குளோரிபைரிபாஸ் 500 மில்லி இதில் ஏதாவது ஒரு மருந்தை கைத்தெளிப்பானாக இருந்தால் 200 லிட்டர் தண்ணீரிலும் விசைத் தெளிப்பானாக இருந்தால் 60 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
கூண்டு புழு:
தாய் அந்துப் பூச்சி வெள்ளை நிறத்தில் சிறியதாக இருக்கும். இதன் முட்டையில் இருந்து வெளி வரும் புழுக்கள் பயிரின் இலைகளை வெட்டியும், சுரண்டியும் சேதம் ஏற்படுத்தும். இலைகளை வெட்டி நீரில் விழுந்து பின் மீண்டும் பயிரில் ஏறி இலைகளை வெட்டும்.
எப்படி கட்டுப்படுத்துவது:
கூண்டுப் புழு தாக்கிய வயல்களில் 2 லிட்டர் மண்ணெண்ணையை மணலில் கலந்து வயலில் வீச வேண்டும். இதனால் நீரில் மிதக்கும் புழுக்கள் அழிக்கப்பட்டு விடும்.