மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க எந்த நிலம் சரியானது? என்னென்ன செய்யணும்? இதை வாசிங்க தெரியும்...

 |  First Published Dec 18, 2017, 12:50 PM IST
how to build viralfish pond



 

குளம்

Latest Videos

undefined

ஆறு, குளம், ஏரி, ஓடை, கசிவுநீர்க் குட்டை மாதிரியான இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் மீன் வளர்ப்புக்கு ஏற்றவை. அதிக தண்ணீர் வளம் இருந்து, விவசாயம் செய்ய முடியாத நிலங்களிலும் மீன் வளர்க்கலாம். 

களிமண், வண்டல் மண் சேர்ந்த நிலமாகவும், போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் இருந்தால், நல்லது. களிமண் நிலமாக இருந்தால், தண்ணீர் கசிவு இருக்காது. மணல் அதிகமாக உள்ள மண்ணில் கசிவு இருக்கும். 

கசிவைத் தடுக்க, குளத்தின் தரைப்பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு களி மண்ணைப் பரப்பி மெத்தி விடவேண்டும். மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபம். இருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். 

ஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.  குளத்தின் கரைகளை நீர்க்கசிவு இல்லாத அளவுக்கு பலமாக அமைக்க வேண்டும். வண்டல் மற்றும் மணல் ஆகியவற்றோடு, களி மண்ணையும் கலந்து கரை அமைக்கலாம். 

கரையின் மேல்புறம் ஒரு மீட்டர் அகலம் அளவுக்கு சமதளமாகவும், இரு புறங்களும் சரிவாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டத்துக்கு மேல் கால் மீட்டர் அளவுக்கு கரையின் உயரம் இருக்க வேண்டும். 

கரையின் வெளிப்புறத்தில், தென்னை, பப்பாளி... போன்ற அதிகம் வேர் விடாத மரங்களை நிழலுக்காக நடவு செய்யலாம்.  

அடுத்து, குளத்தில் தாவர மிதவைகள் வளர்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். 

பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல்... ஒரு நாள் வைத்திருந்துதான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால்... தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். 

ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவுக்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். 

தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மிதவைகள் உருவாகாவிட்டால், வேறு நீர் நிலைகளில் உள்ள பாசிகளை, எடுத்து வந்து போடலாம்.

தாவர மிதவைகள்

தாவர மிதவைகள், குளத்தில் சரியான அளவுக்கு இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், பிராண வாயுவின் அளவு குறைந்து மீன்கள் இறந்து விடும் வாய்ப்பும் உள்ளது. குறைவாக இருந்தால், இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மீன்களின் வளர்ச்சி குறைந்துவிடும். 'தாவர மிதவைகள் சரியான அளவுக்கு உருவாகியிருகின்றனவா?’ என்று பார்ப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது.

காலை பத்து மணி அளவில் குளத்தில் இறங்கி நின்று கொண்டு, முழங்கை வரை மடித்து, உள்ளங்கையை மேற்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு... கையைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் இறக்க வேண்டும். 

உள்ளங்கை கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறையத் தொடங்கும். முழங்கைக்கும், தோள்பட்டைக்கும் இடைப்பட்ட புஜப்பகுதி பகுதி மூழ்கும்போது உள்ளங்கை முழுவதுமாக மறைந்தால்... தாவர மிதவைகள் சரியான அளவில் உள்ளன என்று அர்த்தம். 

தோள்பட்டை பகுதி வரை மூழ்கிய பிறகும், உள்ளங்கை பார்வையில் இருந்து மறையவில்லை என்றால், மிதவைகள் குறைவாக உள்ளன என்று அர்த்தம். முழங்கை மூழ்குவதற்கு முன்பே உள்ளங்கை பார்வையிலிருந்து மறைந்தால், மிதவைகள் அதிகமாக உள்ளன என்று அர்த்தம். இதை வைத்து சரியான அளவைப் பராமரிக்க முடியும்.

மிதவைகளின் அளவு குறைந்திருந்தால்... கொஞ்சம் சாணத்தைக் கொட்டுவதன் மூலம் அதன் அளவை சமப்படுத்திவிடலாம். 

மிதவைகளின் அளவு அதிகமாக இருந்தால், குளத்தின் நீரை கொஞ்சம் வெளியேற்றி, புது நீரை விட வேண்டும்.

click me!