தீவன மேலாண்மை
கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.
கூண்டு முறை கோழி வளர்ப்பில் குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.
கூண்டு இல்லா கோழி வளர்ப்பில் கோழிகளுக்கான உணவு, நீர் ஆகியவற்றை குறிப்பிட்ட இடங்களில் வைக்க வேண்டும். மக்காச்சோளம், கம்பு ஆகியவற்றை அரைத்து உணவாக கொடுக்கலாம். காலை, மாலை என இருமுறை தீவனம் போட வேண்டும். ஆனால் இதில் தீவனம் மிகுதியாக வீணாகும்.
இனப்பெருக்க மேலாண்மை
கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் காணப்படும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.
சுகாதார மேலாண்மை
கோழிகளை எந்த முறையில் வளர்த்தாலும் அதன் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கட்டற்ற முறையில் கோழிகள் அடையும் இடத்தை இரு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
கூண்டில்லா முறையில் அடியில் போட்டுள்ள இடுபொருட்களை இரு நாட்களுக்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். இவற்றில் நீர் சிந்துவதால் அந்த இடம் நனைந்து நோய் கிருமிகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே கவனமாக பராமரிக்க வேண்டும்.