வாழையில் வாடல் நோய் வெளிப்புற அறிகுறி
ஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்களாக காணப்படும். நாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்பிற்கு பரவி கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகின்றது.
undefined
பின்பு இந்த மஞ்சள் நிறமானது அடி இலையில் இருந்து மேல் இலைகளுக்கும் பரவி வாழை மரத்தில் உள்ள அனைத்து இலைகளும் மஞ்சள்நிறமாக மாறிவிடுகின்றது.
இலைகளுக்கும் பரவி வாழைமரத்தில் உள்ள அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றது. பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்பு பகுதியில் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்குகின்றன. தண்டின் நீளவாக்கில் அடியிலிருந்து வெடிப்புகள் காணப்படும்.
சில சமயங்களில் மரம் இறப்பதற்கு முன்னால் நிறைய பக்க கன்றுகள் தோன்றும். பொதுவாக நோய் பாதிக்கப்பட்ட வாழை மரத்தில் தார்கள் வருவதில்லை. அப்படியே தார்வந்தாலும் காய்கள் மிகவும் சிறுத்தும், குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படும்.
இக்காய்களும் ஒரே சீராக பழுப்பதில்லை. சதைப்பகுதியும் ருசி இல்லாமல் அமிலச்சுவையாக இருக்கும்.
உட்புற அறிகுறிகள்
அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப்பார்த்தால் அதில் நீர் மற்றும் சத்துக்களை கடத்தக்கூடிய சாற்றுக்குழாய்த்தெகுப்பு, மஞ்சள், பழுப்பு, கருப்பு போன்ற நிறங்களில் காணப்படும். இந்த சாற்றுக்குழாய்த் தொகுப்புநிறமாற்றத்தை தாரை நீளவாக்கில் பிளந்து பார்த்தாலும் காணலாம். ரொம்ப நாட்களான பிறகு அந்த நோய் பாதிக்கப்பட்ட மரம் அழுகி, வெட்டப்பட்ட தண்டுப்பகுதியில் இருந்து அழுகிய மீன் போன்ற துர்நாற்றம் வீசும்.
நோய் உண்டாக்கும் பூஞ்சாண காரணிகள்
இந்த வாடல் நோயை பியூசோரியம் என்று சொல்லக்கூடிய ஒருவித பூஞ்சாணமானது உண்டாக்குகிறது. இப்பூஞ்சணம் பலவித வித்துக்களை உற்பத்தி செய்து அவைகள் மண்ணில் சுமார் 30 வருட காலம் வாழக்கூடிய திறமை பெற்றது.
தடுக்கும் முறைகள்
வாழையை தொடர்ந்து சாகுபடி செய்யாமல் நெல், மரவள்ளி போன்ற பயிர்களை ஒரிரண்டு ஆண்டுகள் சாகுபடி செய்தபின் வாழைநடவு செய்யலாம்.
எங்கெல்லாம் இந்தநோயின் தாக்குதல் இருக்கிறதோ, அந்த நிலங்களில் மாற்று ரகங்களான பூவன், ரொபஸ்டா (பச்சை வாழை), செவ்வாழை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
நோய்பாதிக்கப்பட்ட கிழங்கு அல்லது கன்றுகளை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடங்களுக்கு கொண்டு சென்று நடவு செய்வதை தவிர்க்கவும்.
வாடல்நோய் தாக்காத வாழைத்தோட்டங்களை தார்வெட்டும் முன்பே சென்று பார்த்து கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
கன்றுகளை வாழைத்தோட்டங்களிலிருந்து எடுத்தபின்பு கன்றுகளின் கிழங்குகளின் மேற்தோல் மற்றும் வேர்களை நீக்கி பின்பு அக்கிழங்கை 0.2 சதவீதம் கார்பெண்டாசிம் (1 லிட்டர் நீரில் 2 கிராம்) மற்றும் மோனோகுரோட்டாபாஸ் (1 லிட்டர் நீரில் 14 மில்லி) மருந்துக்கலைவையில் 30 நிமிடநேரம் மூழ்க வைத்து, பின்பு நிழலில் உலரவைத்து நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்த உடன் கிழங்கை சுற்றி 20 கிராம் டிரைகோடொமா விரிடி மற்றும் 20 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரெசேன்ஸ் ஆகிய எதிர் உயிர் கொல்லிகளை அரைகிலோ மண்புழு உரத்துடன் கலந்து இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இந்த முறையை கன்று நட்ட 2, 4 மற்றும் 6-வது மாதங்களில் மீண்டும் செய்யவும்.
ஓரிரண்டு வாழைகளில் நோயின் அறிகுறி தென்பட்டவுடன் அனைத்து வாழை மரங்களுக்கும் கார்பென்டாசிம் (1 லிட்டர் தண்ணீரில் 2 மில்லி) மருந்தை ஒரு வாழை மரத்திற்கு 2 லிட்டர் மருந்து கலவை என்ற அளவில் மரத்தை சுற்றி மண்ணில் ஊற்றி பியூசேரியம் வாடல் நோயினை கட்டுப்படுத்தலாம்.