உணவின் ஆறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் 1.சர்க்கரைகள் ( Carbohydrates ) 2.புரதங்கள் ( Proteins ) 3.கொழுப்புகள் ( Fats ) 4.உயிர்ச்சத்துக்கள் ( Vitamins ) 5.தாதுக்கள் ( Minerals ) 6.நீர் என்பவாகும்.
இவற்றில் சர்க்கரை என்பதனை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் (Photosynthesis) மூலம் பெறுகின்றன. இதில் தாவரங்களின் இலைகள், சூரிய ஒளி மற்றும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிகழ்த்துகின்றன. இதில் ஆக்ஸிஜன் கழிவாக வெளியேற்றப்படுகின்றது. மேலும் இந்நிகழ்வில் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு, இயற்கை வடிவிலான (Organic) கார்பனாக மாற்றப்படுகின்றது. இது முதல்நிலை உற்பத்தி (Primary Production) எனப்படுகின்றது.
அடுத்ததாக தாவரங்கள் வேர்களின் மூலம் மண்ணிலிருந்து நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்களை உறுஞ்சுகின்றன.
பிறகு தாவர செல்களில் நடைபெறும் பல்வேறு வேதிவினைகள் மூலமாக உணவின் பிற ஊட்டச்சத்துக்களான புரதங்களும், கொழுப்புகளும், உயிர்ச்சத்துக்களும் பெறப்படுகின்றன.
இவ்வாறான வழிகள் மூலம், மேற்சொன்ன ஆறு ஊட்டச்சத்துக்களும் தாவரங்களில் காணப்படுகின்றன. இவ்வாறாக தாவரங்கள் உணவை தாமே உற்பத்தி (Autotroph) செய்பவராக அமைகின்றன.
இதனால் தாவரங்கள், உணவு சங்கிலியில் முதல்நிலை உற்பத்தியாளர்கள் (Primary Producers) என்ற முதல் நிலையில் அமைகின்றன.
இனி இந்த அடிப்படையில், நம் முன்னோர்களான தொல் தமிழர்கள், இயற்கை சார்ந்த வேளாண்மையை மேற்கொண்டனர்.
அறுவடை முடிந்ததும் ஒரு பகுதி தானியங்கள், விதையாக சேமிக்கப்படுகின்றன. பின்னர் மழை பெய்த ஒரு நாளில் நிலம், ஏர் மற்றும் மாடு கொண்டு உழப்படுகின்றது. இதனால் நிலம் பொல பொலவென மென்மையாகின்றது. இது பயிர்கள், மண்ணில் நன்கு வேர் பிடித்து வளர்வதற்கு வழி செய்கின்றது.
பின் உரிய நேரம் பார்த்து விதைகள் நிலத்தில் விதைக்கப்படுகின்றன.மண் என்பது பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் (Fungi), பாசிகள் (Algae) போன்ற பல்வேறு நுண்ணுயிர்கள் வாழும் வீடாகும்.
இந்த உண்மையினை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் விலங்குகள் மற்றும் தாவர கழிவுகளை மண்ணில் ஈடுகின்றனர். இவ்வாறு மாட்டு சாணம் முதலான விலங்கு கழிவுகளை மண்ணில் இடும்பொழுது மண்ணில் நுண்ணுயிர்கள் பல்கி பெருகுகின்றன. அடுத்து தாவர கழிவுகளை இடும்பொழுது, இந்த நுண்ணுயிர்கள் அவற்றை உணவாக கொள்கின்றன.
இந்த நுண்ணுயிரிகளின் பெரும்பயன் என்னவென்றால், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுக்களை மண்ணில் சேர்க்கின்றன. இதற்கு கழிவுகளையும், காற்றையும் இந்த நுண்ணுயிர்கள் பயன்படுத்தி கொள்கின்றன. இவையே இயற்கை உரங்களாக அமைகின்றன. இவ்வாறாக மண்ணில் சேரும் தாதுக்கள், வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு பயிர்கள் நன்கு வளர்கின்றன.
தேவையான பொழுது நீர், வாய்க்கால்கள் மூலம் பாய்ச்சப்படுகிறது. இதற்கு ஆறு, ஏரி, கண்மாய், குளம், கிணறு ஆகியன உதவுகின்றன. இந்த அவசியம் கருதியே தொன்மை காலத்திலிருந்து பல்வேறு ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும், கிணறுகளும் வெட்டப்பட்டு வந்துள்ளன. மேலும் அவை உரிய கால இடைவேளிகளில் செப்பனிடப்பட்டு வந்துள்ளன. இதன் மூலம் பெரும்பங்கு மழை நீர் சேகரிக்கப்பட்டு வந்தது.
இது தவிர பல்வேறு உயிரினங்கள் விவசாயத்திற்கு உதவி செய்கின்றன. இதனை நன்கு அறிந்திருந்த நம் முன்னோர்கள், இவற்றின் உதவியை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.
அவற்றில் முதலாவது மண்புழு ஆகும். இது ஆண்டு முழுவதும் நிலத்தில் துளைகளை இட்டு கொண்டே இருக்கின்றது. மேலும் இவற்றின் கழிவுகளும் நல்ல உரமாக அமைகின்றன. இவை தாவர வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. இதனால் மண்புழு விவசாயிகளின் நண்பன் எனப்படுகின்றது.
மேலும் பல்வேறு பூச்சியினங்கள் பயிர்களுடன் தொடர்புடையன. இவற்றால் பயிர்களுக்கு நன்மை, தீமை இரண்டும் உண்டு.
வயல்களில் நடக்கும் பயிர் வேளாண்மையில், தேனீ, குளவி, வெட்டுக்கிளி மற்றும் வண்ணத்துப்பூச்சி ஆகியன அயல் மகரந்த சேர்க்கை (Cross pollination) நடைபெற உதவுகின்றன. இதனால் நோய் மற்றும் வறட்சியை தாங்கி வளரும் வீரியமான விதைகள் கிடைக்கின்றன.
மேலும் மரங்கள் நிறைந்த தோட்ட வேளாண்மையில், பறவைகள், அணில் மற்றும் பூச்சியினங்கள் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற உதவுகின்றன.
உரிய பருவகாலங்களில் சரியான பயிர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை முழுமையாக பயன்படுத்தினர். தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை பல்வேறு இயற்கை பூச்சி விரட்டிகளின் மூலம் குறைக்கப்பட்டது.
இவ்வாறாக தொன்மைக்கால வேளாண்மை பல்வேறு பறவைகளையும், விலங்குகளையும், பூச்சிகளையும் சார்ந்து இருந்ததால் இவற்றுக்கு இருப்பிடம் அளிக்கும் வகையில் அன்றைய கிராமங்கள் வடிவமைக்கப்பட்டன. அதாவது வயலை ஒட்டி மரங்கள் நிறைந்த சோலைகள் அமைக்கப்பட்டன. அதனைத் தாண்டி, கால்நடைகள் மேய்வதற்கு மேய்ச்சல் நிலங்கள் (Grazing land) அமைந்திருந்தன. இதற்கு அடுத்து காடுகள் அமைந்திருந்தன. இதற்கிடையில் ஆங்காங்கே நீர்நிலைகள் இருந்தன.
இத்தகைய அமைப்பின் மூலம் மழை வளம் அதிகரித்து அது முறையாகவும் சேமிக்கப்பட்டு வந்தது.
பெரும்பாலும் வேளாண் பணிகளுக்கு மனித உழைப்பு மிகுந்திருந்தது.மாடுகளின் உழைப்பும் பயன்படுத்தப்பட்டது.
இந்த வேளாண் அமைப்பில் விவசாயிகளுக்கு பெரிதாக எந்த செலவும் இருப்பதில்லை. இதனால் பொருளாதார சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. மேலும் பறவைகள், தாவரங்கள், விலங்குகள் சிறப்பாக வாழும்படி சுற்றுச்சூழல் பேணி காக்கப்பட்டது. இந்த வகையில் விவசாயம் என்பது முற்றிலும் இயற்கையை சார்ந்தே அமைந்திருந்தது.
இவ்வாறாக விவசாயம் தொல்தமிழர்கள் வாழ்வில் முதன்மை தொழிலாக விளங்கியது.இதனை சார்ந்தே பிற தொழில்கள் அமைந்திருந்தன. இதனாலேயே திருக்குறள் ”உழவே தலை“, ”உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்றெல்லாம் கூறுகின்றது.
மேலும் சூரிய ஓளியின் பங்கு வேளாண்மையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதலால் பூமியின் வட அரைக்கோளத்தில் நடு உச்சியில் (Directly Over Head) சூரியன் தோன்றும், முதல் நாள் தைத்திருநாளாக பொங்கல் வைத்து கொண்டாடப்படுகின்றது. இதுவே தமிழர்களின் தலையாய விழாவாக அமைகின்றது.
இவ்வாறாக உழவை முதன்மையாக கொண்ட அன்றைய தமிழ் சமூகம் நோய்கள்,மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியுடன் இருந்தது. மக்கள் நீண்ட உடல் மற்றும் மன நலத்துடன் வாழ்ந்தனர்.