ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

 |  First Published Jan 17, 2017, 1:59 PM IST

சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து இங்கு காணலாம்.

தமிழகத்தில் சோளம் சுமார் 3.2 லட்சம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், தென் தமிழ்நாட்டில் 1.12 லட்சம் ஹெக்டரில் சோளம் 7 மாவட்டங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

தென் மாவட்டங்களில் சோளம் தானியத்திற்கும், தட்டைக்கும் தனித்தனியாக பயிர் செய்யப்படுகிறது. சோளத்தைத் தாக்கக் கூடிய பூச்சிகளுள் குருத்து ஈ, தண்டுப் புழு, கதிர்நாவாய் பூச்சி, கதிர் ஈ மற்றும் அசுவிணி ஆகியன முக்கியமானவை.

இப் பூச்சிகளை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மூலம் கட்டுப்படுத்தி, நல்ல மகசூலைப் பெறலாம்.

சோள குருத்து ஈ:

சோளம் மற்றும் மக்காச்சோளப் பயிரில் முதலில் வரக் கூடிய ஒரு முக்கியமான பூச்சி இதுவாகும். இப் பூச்சி ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை உள்ள பயிர்களைத் தாக்கும். இந்த ஈ இளம் பயிர்களின் நடுக்குருத்தை துளைத்துக் கொண்டு உண்பதால் இந்த பயிரின் நடுக்குருத்து வாடிச் சாய்ந்துவிடும். இந்தக் குருத்தை மெதுவாக இழுத்தால் கையோடு வந்துவிடும். சில சமயங்களில் இப் பூச்சியின் தாக்குதல் 86 சதவீதம் வரை இருக்கும்.

சோளம் தண்டுப்புழு:

இப் புழு பொதுவாக ஒரு மாதப் பயிரைத் தாக்க ஆரம்பிக்கும். தாக்கப்பட்ட பயிரில் நடுக்குருத்து வாடி காணப்படும். இலைகளில் வரிசையாக துவாரங்கள் காணப்படுவது இப்புழு தாக்குதலின் அறிகுறி. இதன் தாக்குதல் அறுவடை வரையிலும்கூட காணப்படும். வளர்ந்த பயிரில் இதன் தாக்குதல் இருக்குமானால், அப் பயிர்கள் தங்கள் வீரியத்தை இழந்து, சிறிய பலமில்லாத சரியாக மணிப்பிடிக்காத கதிர்களைக் கொடுக்கும்.

சோளம் கதிர் நாவாய்ப்பூச்சி:

இளம் பருவ பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் சோளக் கதிரில் மணிகள் பால் பிடிக்கும் தருணத்தில் சாற்றை உறிஞ்சி உண்பதால், கதிர்கள் சாவியாகி விடுகிறது. இதனால் 15 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சோள மணிகளில் இப் பூச்சிகள் ஏற்படுத்திய சிறு துவாரங்களினால் சோளத்தின் தரம் குறைகிறது.

கதிர் ஈ:

இந்தப் பூச்சி பொதுவாக சோளம் பயிரிடப்படுகின்ற எல்லா இடங்களிலும் காணப்படும். சோளத்தைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. இப் பூச்சியின் இளம் புழுக்கள் சோளப் பூக்களைச் சேதப்படுத்துவதால், சோளம் மணிப் பிடிக்காமல் சாவியாகிவிடுகிறது.

அசுவிணி:

இப் பூச்சிகள் சாற்றை உறிஞ்சி உண்ணக் கூடிய தன்மை கொண்டவை. இப் பூச்சிகள் பொதுவாக சோளப் பயிரில் நடுக்குருத்தில் காணப்படும். மேலும், இலைகளின் அடிப்பாகத்தில், தண்டுப்பகுதி மற்றும் சோளக் கதிர்களிலும்கூட காணப்படும். இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சி உண்ணுவதால், இலைகள் மஞ்சளாக மாறும்.

சில நேரங்களில் இலைகளின் ஓரங்கள் கருகிக் காணப்படும். இப் பூச்சிகள் சாற்றை உறிஞ்சிக் கொண்டே தேன் போன்ற ஒரு திரவப் பொருளை கழிவாக வெளியேற்றுகின்றன. கதிரில் இப் பூச்சிகள் அதிகமாக இருந்தால், அவை அறுவடையைப் பாதிக்கும். இந்த அசுவிணி ஒரு வகையான வைரஸ் நோயை பரப்பக் கூடிய தன்மையுடையது.

சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு:

ஒரே சமயத்தில் விதைத்தும் மற்றும் முன்பட்டத்தில் விதைப்பதாலும் குருத்து ஈ, தண்டுப்புழு, கதிர் ஈ மற்றும் கதிர் நாவாய்ப் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம்.

குருத்து ஈயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ சோள விதைக்கு 4 மிலி குளோரிபைரிபாஸ் அல்லது 4 மிலி பாசலோன் அல்லது 4 மில்லி மானோ குரோட்டோபாஸ் மருந்தையும், 0.5 சதவீதம் கோந்தையும், 20 மிலி நீரில் கரைத்து விதை நேர்த்தி செய்து, 12 மணி நேரம் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.

நேரடி விதைப்பில் 5 கிலோ விதையைப் பயன்படுத்தி, நெருக்கி விதைத்த பின்னர், குருத்து ஈ, தண்டுப்புழு, அடித்தேமல் நோய் தாக்கிய செடிகளைக் களைத்து விடலாம்.

ஊடு பயிராக தட்டைப்பயறு அல்லது மொச்சைப் பயிரிடுவதால் தண்டுப்புழு தாக்குதலைக் குறைக்க முடியும். வயல் வரப்புகளில் உள்ள களைகளை அகற்றி அழிப்பதால், குருத்து ஈ, தண்டுப்புழு, கதிர் ஈ தாக்குதலைக் குறைக்கலாம்.

கைவினை முறைகள்:

முட்டைப் புழு, கூட்டுப் புழுக்கள் பாதிக்கப்பட்ட பயிரின் பகுதிகளையும் சேகரித்து அழிப்பதால், பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்காது தடுக்கப்படுகின்றன.

கருவாட்டுப் பொறி ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைப்பதால் குருத்து ஈக்கள் கவரப்பட்டு, அழிக்கப்படுகின்றன. ஒரு மாத காலம் இந்தப் பொறியை வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை நனைத்த கருவாட்டை வைத்திட வேண்டும்.

விளக்குப் பொறி வைப்பதால், தண்டுப்புழுவின் தாய்ப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக் கவர்ச்சி பொறிகள் வைத்து, கதிர் பருவத்தில் தாக்கிடும் பச்சைப் புழுவின் (ஹெலிகோவெர்பா) ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

ரசாயன பூச்சிக் கொல்லிகள்:

பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பட்சத்தில் சரியான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.

குருத்து ஈ:

ஒரு செடிக்கு ஒரு முட்டை அல்லது 10 சதவீதம் நடுக்குருத்து காய்ந்து காணப்பட்டால் மீதைல் டெமட்டான் 200 மிலி அல்லது ரோகார் 200 மிலி இவற்றில் ஒன்றை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

குருத்துப் பூச்சி:

10 சதவீதம் நடுக்குருத்து காய்ந்து காணப்பட்டால், குயினால்பாஸ் குருணை மருந்து ஏக்கருக்கு 6 கிலோ அல்லது போரேட் குருணை மருந்தை 3 கிலோ அல்லது பியூடான் குருணை மருந்து 7 கிலோ. இவற்றில் ஏதேனும் ஒன்றை 20 கிலோ மண்ணுடன் கலந்து, நடுக்குருத்தில் இட்டுக் கட்டுப்படுத்தலாம்.

கதிர் ஈ:

கதிருக்கு 5 எண்ணமும், கதிர்நாவாய்ப் பூச்சி கதிருக்கு 10 எண்ணமும், கதிர்புழு கதிருக்கு 5 எண்ணமும் இருந்தால் ஏக்கருக்கு கார்பரில் அல்லது மாலத்தியான் அல்லது பாசலோன் தூசு மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 கிலோ என்ற அளவில் கதிர்களில் தூவிக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

click me!