மக்காச்சோளத்தை தாக்கும் பல்வேறு பூச்சிகளும் அவற்றின் அறிகுறிகளும்…

 |  First Published Jan 17, 2017, 1:58 PM IST

தமிழகத்தில் பயிரிடப்படும் பயிர்களில் மக்காச்சோளம் முக்கியமானது. மக்காச் சோளப் பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு வகையான தடுப்பு மருந்துகளையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த முடிவதில்லை.

மக்காச்சோள பயிரை தாக்கும் பூச்சிகளின் குருத்து ஈ எனப்படும் அதெரிகோனா ஓரியண்டாலிஸ் பூச்சி முக்கியமானதாகும். இந்த பூச்சி வெள்ளை நிறத்தில் காணப்படும். முட்டையிலிருந்து வெளிவரும் காலற்ற புழுக்கள் இலையுறைக்கும், தண்டிற்கும் இடையே குடைந்து சென்று நடுக்குருத்தை தாக்குகிறது. இதனால் நடுக்குருத்து அழுகிவிடும்.

Latest Videos

undefined

இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சி மருந்தினால் விதைமுலாம் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்த வேண்டாம். அறுவடை செய்த உடனே சோளத் தட்டைகளை அகற்றிய பின் உழுதுவிட வேண்டும். மேலும், தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

மற்றொரு பூச்சியான தண்டு துளைப்பான் எனப்படும் கைலோ பார்டெலஸ் எனப்படும் பூச்சியின் புழுக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சியின் புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று பகுதியை தின்று சேதம் விளைவிக்கும். இளம் பயிரில், இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும். வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் காணப்படுவது இப்பூச்சி தாக்குதலின் அறிகுறியாகும்.

இவற்றை கட்டுப்படுத்த அவரை அல்லது தட்டைப்பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். விளக்குப்பொறி அமைத்து அந்துப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். அறுவடை செய்த உடனே மக்காச்சோளத் தட்டைகளையும் சேர்த்து நிலத்தை உழவு செய்வதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். மேலும் தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.

மற்றொரு பூச்சியான இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான் பூச்சிவகையின் பெண் அந்துப்பூச்சி முட்டையை இலையின் அடிப்பகுதில் இடுகிறது. இதன் புழு, சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும், தலை கருமை நிறமாகவும் காணப்படும். இப்பூச்சி இளஞ்சிவப்பு புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களைத் தாக்குகிறது. தாக்கப்பட்ட இளம்பயிரில் குருத்து அழுகிவிடும். இவற்றை கட்டுப்படுத்த தகுந்த மற்றும் பயன்படுத்த வேண்டும்.

மற்றொரு பூச்சியான கதிர் துளைப்பான் எனப்படும் ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா பூச்சி புழுப்பருவத்தில் பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் உடலில் மேற்பரப்பில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும். இப்பூச்சியின் புழுவகை கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதத்தை விளைவிக்கும். புழுவின் சேதக் கழிவுகள், தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறி அமைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இனக்கவர்ச்சி பொறி அமைத்து ஆண் அந்துப் பூச்சியின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

மற்றொரு பூச்சியான கொத்துப்புழு எனப்படும் கிரிப்டோபிளேபஸ் கினிடியெல்லா பூச்சி புழு, நீளமாகவும், கரும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். இதன் தாய்ப்பூச்சியின் முன்னிறக்கைகள் கருஞ்சாம்பல் நிறத்திலும் காணப்படும். இதன் புழு, பூக்களின் பச்சையத்தினை உண்ணும். பின்னர், கதிர்கள் பால் பிடிக்கும் தருணத்தில் சேதப்படுத்தும். மக்காச்சோள கதிர்கள் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

மற்றொரு பூச்சியான சாம்பல் வண்டு எனப்படும் மிலோசிரஸ் வகை பூச்சி வண்டு பருவத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படும். இப்பூச்சியின் புழுக்கள் வேர்களின் நுனிகளை உண்ணும். வண்டுகள் இலைகளின் ஓரங்களை கடித்து சேதம் உண்டாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தடுப்பு மருந்துகளையும் பயன்படுத்தலாம். 

 

click me!