பருப்பு வகைகளில் அதிகமாக பயன்படுத்தபடுவது உளுந்து. இது ஒரு வெப்ப மண்டல பயிர். தென் இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படுகின்றது.
நம் அன்றாட உணவுகளில் உளுந்தின் பங்களிப்பு இன்றியமையாதது. உளுந்து பலவகையான உணவுகளில் பயன்படுத்தபடுகிறது.
உளுந்தில் பயிரில் பல ரகங்கள் உள்ளன. தனியார் ரகங்களை விட வேளாண் ஆராய்ச்சி நிலைய ரகங்கள் மிகவும் பிரபலமான மற்றும் அதிக மகசூல் தருபவை. குறிப்பாக வம்பன் ஆராய்ச்சி நிலைய ரகங்கள் மிகவும் பிரபலமானவை, தின்டிவனம் ஆராய்ச்சி நிலைய ரகங்களும் மிகவும் பிரசித்திபெற்றவை.
கார்த்திகை பட்டத்தில் அதிகமாகவும், சித்திரை பட்டத்தில் சற்று குறைவாகவும் சாகுபடி செய்யப்படுகிறது.
ஏக்கருக்கு பத்து டன்கள் தொழுஉரம் இட்டு நன்றாக உழுது கொள்ள வேண்டும். ஏக்கருக்கு எட்டு கிலோ விதை உளுந்து போதுமானதாகும். இருவேறு முறைகளில் உளுந்து நிலத்தில் பயிரிடப்படுகிறது. அதாவது நிலத்தில் நேரடியாக கைகளால் தூவுதல் மற்றும் ஏர் அல்லது டிராக்டர் மூலமாக விதைத்தல்.
ஒரு பங்கு கோமியம் இரு பங்கு தண்ணீர் மற்றும் சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். மற்றும் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
இருபத்தைந்து நாட்களுக்கு பிறகு பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் உடன் மீன் அமிலம் கலந்து தெளித்தால் பூக்கள் உதிராது. ஒரு செடிக்கு அதிகபட்சம் 120 பூக்கள் இருந்தால் மிக நல்ல மகசூல் கிடைக்கும்.
தண்ணீர் பாய்ச்சும் ஒவ்வொரு முறையும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் பாசனம் மூலம் கலந்து விடுவதால் திடமான மற்றும் வாளிப்பாக செடிகள் வளரும். வறட்சி தாங்கி வளரும்.
உளுந்தின் வயது 75 நாட்கள். 75 முதல் 80 நாட்களுக்குள் அறுவடைக்கு தயார் ஆகிவிடும். அறுவடை செய்து விற்பனைக்கு தயாராவதற்கு 90 நாட்கள் ஆகிவிடும். அதிகபட்ச மகசூலாக ஏக்கருக்கு 900 கிலோ வரை கிடைக்கும்.
உழவின் பொழுது உயிர் உரங்களை இடுவதால் அதிக மகசூல் பெறலாம். ரைசோபியம் பாக்டீரியாக்களை கண்டிப்பாக தொழுஉரத்துடன் கலந்து இடவேண்டும்.
உளுந்து பயிரை அதிகமாக தாக்கும் பூச்சிகள் இரண்டு. ஒன்று இலைகளை உண்ணும் புழுக்கள். இரண்டாவது அசுவினி (பேன் ). அதாவது சாறு உறிஞ்சும் பூச்சிகள்.
ஆரம்பம் முதல் கற்பூரகரைசல் தெளித்து வந்தால் பூச்சி தாக்குதல் முற்றிலும் தவிர்க்கலாம். மற்றும் அளவுக்கு அதிகமாக பூக்களை பெறலாம்.
குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் பணப் பயிர்களில் இதுவும் ஒன்று. சென்ற வருடம் அதிக விலை இருந்ததால் விவசாயிகள் அதிக லாபம் பெற்றனர். வேர் முன்டுகளில் ரைசோபியம் பாக்டீரியாக்கள் இருப்பதால் இதற்கு அடுத்து செய்யும் பயிர்கள் நன்கு விளையும்.