இறால் வளர்ப்பில் சூரிய வெளிச்சம்
'களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம்.
அதாவது, 1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும்.
அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும்.
இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியதில்லை.
இறால் வளர்ப்பில் தீவனம்
குட்டையில் இரண்டு சால் உழவு ஓட்டி, 15 நாட்கள் வெயிலில் காயவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 100 கிலோ கல் சுண்ணாம்பு, 100 கிலோ ஜிப்சம் என்கிற அளவில் போட்டு, ஒன்றரையடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி... அதில், 50 கிலோ ஈரச் சாணம்,
5 கிலோ தாதுப்புக் கலவை (இது கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களிலும், கால்நடை மருந்துக் கடையிலும் கிடைக்கும். கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் பாசி உட்பட தாவர, விலங்கின மிதவை நுண்ணுயிரிகள் உருவாகும்.
பிறகு, 4 அடி உயரத்துக்கு தண்ணீரை நிறுத்தி, 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வயதுள்ள ஒரு லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ இறால் தீவனத்தையும் போட வேண்டும்.இது குஞ்சுகளுக்கு ஒரு நாளுக்கான தீவனம்.
தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப் போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று தீவனம் போட வேண்டும்.
அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன் கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். பாம்பு, ஆமை, நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்.