1. குளங்களில் பிராணவாயு பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பது?
பிராணவாயு பற்றாக்குறைவு ஏற்பட்டால் மீன்கள் அனைத்தும் மேல்மட்டத்திற்கு வந்து சுவாசித்துக் கொண்டு இருக்கும். இத்தகைய நிலை கோடையில் அதிகாலை வேளைகளில் ஏற்படும். இதனை சீர்செய்ய குளத்தில் நீர்மட்டத்தின் ஆழத்தை 41/2 முதல் 5 அடியாக அதிகரிக்கலாம். ஓரளவு அடிமட்ட நீரை வெளியேற்றி விட்டு புதுநீர் பாய்ச்சலாம். மீன்களை கொஞ்சம் அறுவடை செய்து அவற்றின் அடர்த்தியைக் குறைக்கலாம்.
மீன்களின் இருப்படர்த்தியை கட்டுப்படுத்துதல், நீரின் ஆழத்தை உகந்த நிலையில் பராமரித்தல் மற்றும் அடிமட்ட நீரை ஓரளவு வெளியேற்றி புதுநீர் பாய்ச்சுதல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு நீரின் தரத்தைப் பராமரிக்கலாம்.
2. மனிதர்கள் பயன்படுத்தும் பொதுக்குளங்களில், சாண மற்றும் இரசாயன உரங்களை உபயோகிக்க முடியவில்லை. இக்குளங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?
அரிசித் தவிடு, கடலைப்பிண்ணாக்கு, சோளமாவு, சோயாமாவு, குறுணை போன்ற பொருட்களைக் கலந்து தயாரிக்கப்பட்ட மேலுணவினை, குளத்தில் இருக்கும் மீன்களின் மொத்த எடையில், சுமார் 2 - 3 விழுக்காடு ஒரு நாளுக்கு என்ற அளவில், தினசரி அளித்திடல் வேண்டும்.
பொதுமக்கள் பயன்படுத்தும் குளங்களில், நீர் நிறைந்துள்ள காலங்களில் பொதுவாக சாணமோ, சுண்ணாம்போ போட முடிவதில்லை. எனவே, குளத்தில் நீர் சேரும் காலத்திற்கு முன்பே லேசான ஈரப்பதத்தில் உழவு செய்து எக்டருக்கு 200 கிலோ என்ற அளவில் காளவாய் சுண்ணாம்பு இடுவது நல்லது.
கழிவுகள் அதிகளவில் சேரும் குளங்களுக்கு எக்டருக்கு 400 முதல் 500 கிலோ அளவிற்கு சுண்ணாம்பின் அளவை அதிகரிக்கலாம். குளங்களில் ஆழமான பகுதிகளிலும், வண்டல் கழிவுகள் அதிகம் சேர்ந்துள்ள பகுதிகளிலும் கூடுதலாக சுண்ணாம்பு இட வேண்டும்.
3.. மீன்களை எத்தனை முறை அறுவடை செய்யலாம்?
பொதுவாக தற்போது கடைப்பிடிக்கப்படும் வளர்ப்பு முறைகளில் குளங்களில் விடப்படும் மீன்கள் அனைத்தும் ஒரே எடையுடன் சீரான வளர்ச்சியை பெறுவதில்லை. எனவே மீன்களை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்வதைவிட அவ்வப்போது வளர்ந்த மீன்களை பகுதி பகுதியாக அறுவடை செய்வது நல்லது.
வளர்ந்த மீன்களை அவ்வப்போது அறுவடை செய்வதன் மூலம் குளத்திலுள்ள மீத மீன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். நமது பகுதியில் விற்பனைக்கு உகந்த எடையை மீன்கள் அடையும் போது மீன்களை அறுவடை செய்யலாம். விரால்களை இருப்புச் செய்து வளர்க்கும் பண்ணைகளில், சாதாரணமாக ஆறு மாதங்களுக்கு மேல், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.