1. எத்தனை வகை மீன் வளர்ப்பு முறைகள் உள்ளன?
நமது நாட்டில் பொதுவாக 5 முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை நன்னீர் மீன்வளர்ப்பு, உவர்நீர் மீன்வளர்ப்பு, குளிர்நீர் மீன்வளர்ப்பு, வண்ண மீன் அல்லது அலங்கார மீன்வளர்ப்பு, மற்றும் கடல்நீர் மீன்வளர்ப்பு என்பவை ஆகும்.
2. மீன் வளர்ப்பைப் பாதிக்கும் முக்கியக் காரணிகள் யாவை?
நீரின் வெப்பநிலை, கலங்கல் தன்மை, நீரின் கார அமிலத் தன்மை, கரையும் ஆக்ஸிஜன், (கரியமில வாயு), கார்பன் - டை - ஆக்ஸைடு, மொத்த காரத்தன்மை, நீரின் கடத்துதிறன், மண்ணின் வெப்பநிலை, மண்ணின் கார அமிலத் தன்மை, மண்ணின் அங்கக கார்பன், பாஸ்பரஸ், பொட்டாஷ், நீரின் உயிர்நிறை போன்ற காரணிகள் மீன்வளர்ப்பிற்கு அத்தியாவசியமானவை ஆகும்.
3. பிடிப்பு மீன்வளம் என்பது என்ன?
மீன்கள், சுறா, மெல்லுடலிகள், சிங்கிறால் மற்றும் நண்டு போன்றவற்றை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே பிடிப்பு மீன்வளம் ஆகும். நம் நாட்டில் மீன் பிடிப்பு மூலமாக 68 சதம் மீன் கிடைக்கிறது. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
4. பிற அசைவ உணவுகளை விட மீன் சிறந்த ஆரோக்கியமான உணவாக கருதப்படுவது ஏன்?
தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது.
5. மீன் இறைச்சியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் யாவை?
மீன்களில் பொதுவாக 60 - 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 - 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 - 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 - 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.