உட்புற ஒட்டுண்ணியால் கால்நடைகளுக்கு ஏற்படும் இரண்டு ஆபத்தான நோய்கள்:
1.. தைலேரியோசிஸ்
இந்நோய் கலப்பினப் பசுக்களைத் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோய், தைலேரியா ஆனுலேட்டா என்ற ஓரணு ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
இந்நோய், உண்ணி கடிப்பதின் மூலம் ஒரு மாட்டில் இருந்து மற்ற மாடுகளுக்கப் பரவுகிறது. உண்ணி அதிகமாக உள்ள இடங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது.
நோயுற்ற மாட்டை உண்ணிகள் கடித்து விட்டு நோயில்லா மாட்டை மீண்டும் இரத்தத்தை உறிஞ்ச கடிக்கும் சமயத்தில் இந்நோய் மற்ற மாடுகளுக்கும் பரவுகிறது.
நோய் அறிகுறிகள்
நோயுற்ற மாடுகளில் அதிகக் காய்ச்சல் இருக்கும். சுமார் ஒரு வாரத்திற்கு காய்ச்சல் குறையாது.
தோலின் அடிப்பகுதியிலுள்ள நிணநீர்க் கட்டிகள் வீங்கிக் காணப்படும்.
காது, கழுத்துப் பகுதிகளில் உண்ணிகள் அதிகம் காணப்படும்.
சாணம் முதலில் கெட்டியாகவும், பின்பு இளகளாகவும், இரத்தம் கலந்தும் இருக்கும். வயிற்றுப் போக்கு இருக்கும்.
சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் காமாலை அறிகுறிகள் தென்படும்.
காய்ச்சல் அதிகமிருந்தாலும் மாடு, தீவனம் எடுத்துக் கொண்டிருக்கும்.
சினைப் பசுக்களில் கருச்சிதைவு ஏற்படும்.
இரத்தச் சோகை ஏற்பட்டு மாடு மெலிந்து 10 நாட்களில் இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
இந்நோயைத் தடுக்க உண்ணியைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்ணியைக் கொல்ல சுமத்தியான், மாலத்தியான் போன்ற மருந்துக் கரைசலை 0.5-1 என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
பூட்டாக்ஸ் என்ற மருந்தை 1 லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். மாடுகளை இம்மருந்து கொண்டு குளிப்பாட்டலாம். உண்ணி தங்கும் செடி, புதர், சுவற்றின் கீரல், ஓட்டை, சந்து போன்றவற்றில் மருந்தைத் தெளிக்கவேண்டும்.
கூடுதல் தீவனம், நல்ல பராமரிப்பு போன்றவற்ற வழங்கி மாட்டைக் காப்பாற்றி இலாபம் பெறலாம். நோயிலிருந்து தப்பிய மாடுகள், பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகலாம். இரத்தச் சோகைக்கு மருந்து கொடுக்கவேண்டும்.
2.. பெபிசியோசிஸ்
இந்நோய், பெபிசியா பைசெமினா என்ற ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும். இது, உண்ணிகள் கடிப்பதால் ஏற்படும் நோயாகும். உண்ணிகள் அதிகமாக உள்ள இடங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. கலப்பினப் பசுக்களில் இந்நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது.
நோய் அறிகுறிகள்
காய்ச்சல் அதிகமாக இருக்கும்.
சிறுநீர், காப்பி நிறத்தில் வெளிவரும்
மாட்டின் கழுத்துப்பகுதியில் உண்ணிகள் அதிகமாக இருக்கும்.
இரத்தச்சோகை ஏற்பட்டு மாடு மெலிந்து 7-10 நாட்களில் இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
உண்ணியைக் கட்டுப்படுத்த வேண்டும். மேற்கூறிய உண்ணிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
நோயுற்ற மாடுகளுக்கு மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்ளலாம்.
இரத்தச்சோகைக்கு மருந்து கொடுக்கவேண்டும்.
உண்ணிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றவேண்டும்