இறைச்சி, பால், தோல், எரு ஆகிய நான்கு பயன்களுக்காக வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகளுக்கு அசையக்கூடிய உறுதியான மேல் உதடுகள் உள்ளதால் முட்செடிகளையும் உண்ணும் வல்லமை பெற்றவை.
மேலும் நெருங்கிய கூரிய கடினமான பற்கள் உள்ளதால், சிறிய தானியங்களையும், கடினமான விதைகளையும் அரைத்து உண்ணவல்லன.
பாலை நிலப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு வாரம் மூன்று முறை நீர் வழங்கினால் போதும்.
கடுமையான பஞ்சம் ஏற்படும்போது ராஜஸ்தான் பகுதியில் ஓர் ஆடும், ஒரு வன்னி மரமும் தம்மைக் காத்துக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளாட்டு இனங்கள்
1.. பள்ளை ஆடு
இவை பலவகையான நிறத்துடன் இருக்கும். குட்டையானவை. இவற்றின் சிறப்பு. இவை பல குட்டிகளைப் போடுவதுதான். சில 4, 5 குட்டிகள் – ஏன்? ஒன்றே கூட ஈனும். சில பகுதிகளில் இவை சீனி ஆடுகள் எனப்படும். இவற்றிற்கு மூழிக் காதுகள் உண்டு.
2.. கொடி ஆடு
இவை மிக உயரமானவை. பல்வகை நிறங்களுடன் இருக்கும். ஒன்று அல்லது இரு குட்டிகள் மட்டுமே ஈனும். இவை செம்மறி ஆடுகளுக்கு வழி காட்டியாகவும் வைத்துக் கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பல இனச் செம்மறி ஆடுகள் இருப்பினும் வெள்ளாடுகளில் ஓர் இனம் கூட இல்லாமல் இருப்பது ஒரு குறைபாடே. உலகெங்கும் புதிய இனங்களைத் தேற்றுவித்தவர்கள் தனிப்பட்ட முற்போக்குப் பண்ணையாளர்களே.
நமது காங்கேயம் இன மாடுகள் பழைய கோட்டைப் பட்டைக்காரரால் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறே இறைச்சிக்கொன்றும், பாலுக்கொன்றும் வெள்ளாட்டு இனம் நமது வேளாண் குடி மக்களால் தோற்றுவிக்கப்படும்.
இப்போது முற்போக்குக் கால்நடை வளர்ப்பபோர் வெள்ளாடு மீது காட்டும் ஆர்வம் நிச்சயமாக ஓர் இனத்தை உருவாக்கும்.