வெளிநாட்டு வெள்ளாட்டு இனங்கள்
1.. ஆல்பினோ
இவை பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஆல்ப் மலைப் பகுதிகளைச் சார்ந்தவை. பல்வேறு நிறம் கொண்டவை. கறுப்பு, செந்நிறம், வெள்ளை மற்றும் இந்நிறங்களின் கலவையான நிறங்களுடன் காணப்படும். கடா 65 முதல் 80 கிலோ எடை கொண்டது. பெட்டை ஆடு 50 முதல் 60 கிலோ எடை கொண்டது.
2.. ஆங்கிலோ நுபியன்
ஆடுகளின் ஜெர்சி என இவற்றைக் குறிப்பிடலாம். ஏனெனில் இவற்றின் பால் 4 முதல் 5% கொழுப்புச் சத்துக் கொண்டது. இவ்வினம் இங்கிலாந்து நாட்டில் எகிப்து நாட்டு நுபியன் இனக் கடா மற்றும் இந்திய சமுனாபாரி பெட்டை ஆடுகளின் இனச் சேர்க்கையால் தோற்றுவிக்கப்பட்டது.
இவை கறுப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் இவை கலந்த நிறங்களுடன் காணப்படும். சமுனாபாரி போன்று ரோமானிய மூக்கும், நீண்ட தொங்கும் காதுகளும் கொண்டவை. ஆண், பெண் ஆடுகளுக்குக் கொம்புகள் உள்ளன. கிடாக்கள் 65 முதல் 80 கிலோ எடை கொண்டவை. பெட்டை ஆடுகள் 50 முதல் 60 கிலோ எடை கொண்டவை.
3.. சாணன்
இது சுவிஸ் நாட்டின் இனமாகும். இது வெள்ளை நிறமுடையது. ஆல்பின் இனத்தையொத்த உடல் எடையுள்ளது. இவ்வினத்தின் சில வகை ஆடுகளுக்குக் கொம்பு இருக்காது. சில வகைகளுக்குக் கொம்பு இருக்கும்.
கொம்பு இல்லாமை டாமினட் ஜீன் காரணமாக ஏற்படுவது ஆகும். ஆண், பெண் இரண்டிற்கும் தாடி இருக்கும். பால் அளவு 2 முதல் 5 கிலோ வரை, கொழுப்புச் சத்து 3 முதல் 4% வரை.
4.. தோகன்பர்க்
இது சுவிஸ் நாட்டில் தோன்றியதாயினும் அமெரிக்க நாட்டில் சிறப்புடன் வளர்க்கப்படுகின்றது. இது இளம் பழுப்பு நிறமுடையது. வயிறு, கால் பகுதிகள் வெள்ளை நிறத்துடன் இருக்கும். எடை மற்ற வெளிநாட்டு இனங்களைப் போன்றது. பால் அளவு தினம் 5 முதல் 6 கிலோ.
5.. அங்கோரா
இது ஒரு கம்பளி இன வெள்ளாடு ஆகும். இவை மொகேர் (Mohair) வழங்குகின்றன. ஓர் ஆடு, ஆண்டில் 4, 6 பவுண்டு மொகேர் வழங்குகின்றன. இதன் மூலம் சிறந்த கம்பளிகளும் ஆடைகளும் தயாரிக்கப்படுகின்றன. அங்கோரா ஆடுகள் அதிக அளவில் அமெரிக்காவிலும், துருக்கியிலும் வளர்க்கப்படுகின்றன.
6.. சீன நீல ஆடுகள்
சீனாவில் சான்தாங் மாநிலத்திலுள்ள நீல ஆடுகள் 6 அல்லது 7 குட்டிகள் ஒரே வேளையில் ஈனும் குணம் கொண்டவை.