முதல் சந்தேகம்:
பால் மாட்டிற்கு காம்பில் கொப்பளம் அதிகமாக இருக்கிறது?
பதில்:
காம்பில் கொப்பளம் உள்ளது. “மாட்டு அம்மை”(cow pox) என்று உறுதி செய்து கொள்ளவும். அப்படி இல்லையெனில் பால் கறந்து முடிந்த பின்பு போரிக் ஆஸிட் பவுடருடன் தேங்காய் எண்ணெய் கலந்து தொடர்ந்து தடவி வரவும். கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்மூன்றையும் அரைத்தும் காம்பில் தடவலாம். மேலும் பால் கறப்பதற்கு முன்பு நன்றாக காம்பினை கழுவிய பின் பால் கறக்கவும்.
இரண்டாவது சந்தேகம்:
மாடு 8 மாத சினையாக உள்ளது. எந்த மாதிரியான தீவனம் கொடுப்பது? எப்படி பராமரிப்பது?
பதில்:
முதலாவது 7 மாதம் முடிந்த உடனே பால் கறப்பதை நிறுத்துவது நல்லது. மேலும் சத்துள்ள சரிவிகித கலப்பு தீவனம் கொடுக்க வேண்டும். பசுந்தீவன புல் குறைந்தபட்சம் 10 கிலோ கொடுக்க வேண்டும். சுத்தமான தண்ணீர் அதற்கு கிடைக்கும்படி வைக்க வேண்டும்.
மூன்றாவது சந்தேகம்:
மாட்டின் மேல் அதிமாக ஈ இருக்கிறது? என்ன செய்யலாம்?
பதில்:
சோற்று கற்றாழையின் சோற்றை எடுத்து நன்கு தடவி 1 அல்லது 2 மணி நேரம் கழித்து பின் நீரால் கழுவவும். 2 அல்லது 3 நாட்களை தொடர்ந்து செய்யவும்.
நான்காவது சந்தேகம்:
நான்கு மாத சினை மாடு பால் கறக்குது ஆனால் தீனி எடுக்க வில்லை?
பதில்:
மாட்டிற்கு காய்ச்சல் உள்ளதா என்று உஷ்ண மானியை (Thermometer)கொண்டு கண்டு கொள்ளவும். காய்ச்சல் இருப்பின் கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறவும். தீனி எடுக்கவில்லையென்றால் ஹமாலயன் பெத்திசா(Himalayan Bathisa) என்ற மருந்தினை வாங்கி 50 கிராம் எடுத்து சிறிது வெல்லத்துடன் கலந்து உருண்டையாக்கி உள்ளுக்குள் தினமும் காலையும் மாலையும் 3 அல்லது 4 நாட்களுக்கு கொடுக்கவும்.