பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு: ரகங்கள் முதல் விற்பனை வரை ஒரு அலசல்…

 |  First Published Aug 21, 2017, 12:28 PM IST
Farm Poultry Farming A Parcel From Selling Top Selling ...



மீன்களின் இரகங்கள்

கெளுத்தி, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, ரோகு, கட்லா, விரால், மிர்கால் ஆகிய இரகங்கள் பண்ணை குட்டையில் வளர்க்க ஏற்ற இரகங்கள் ஆகும்.

Latest Videos

undefined

பண்ணை குட்டை அமைத்தல்

மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபமாக இருக்கும். இருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

களிமண் தான் இதற்கு ஏற்றது. இல்லையேல் வண்டல் மண் நிரப்பிக் கொள்ளலாம். 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் பாதுகாப்பாக இருக்கும்.

மீன் வளர்ப்பு

ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாக வாங்கி விட வேண்டும். அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால் சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிடில், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும்.

மீன்குஞ்சு விட்ட மறுநாள் தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து குளத்தின் நான்கு பகுதிகளிலும் நான்கு கிழங்குகளை, கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருப்பதால் வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.

தீவன மேலாண்மை

மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு கடைகளில் கிடைக்கிறது. தவிடு, பிண்ணாக்கைத் தீவனமாகக் கொடுப்பதைவிட இது செலவு குறைவாக இருக்கும்.

ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவிகித அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதுமானது. மாதத்திற்கு ஒரு முறை சிறிது மீன்களைப் பிடித்து, அவற்றின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல் இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளில் கொடுக்க வேண்டும். இடத்தையும் நேரத்தையும் மாற்றாமல் தினமும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தீவனத்தை இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

இரண்டு மாதம் வரைக்கும், குளத்தில் உள்ள மீன்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு கிலோ கடலைப் பிண்ணாக்கு போடலாம். இதை இரண்டாக பிரித்து காலையும் மாலையும் போட வேண்டும்.

மூன்றாவது மாதத்திற்கு மேல் கொழிஞ்சி இலையை வெட்டி, சின்னச்சின்னக் கட்டுகளாக கட்டி குளத்துக்குள் போடலாம். அது தண்ணீரில் அழுகியதும், அதிலிருந்து நிறைய புழுக்கள் உருவாகும். அது மீன்களுக்கு நல்ல உணவாகும்.

ஆறாவது மாதத்திற்கு மேல் மீன்களுக்கு கோழிக்கழிவு தான் சிறந்த தீவனம் ஆகும். கோழிக்குடல், கறி என்று கறிக்கடையில் வீணாகும் கழிவுகளை வாங்கி வந்து, வேக வைத்து குளத்துக்குள் ஆங்காங்கே போட வேண்டும். அதனால் மீன்கள் நல்ல எடைக்கு வரும்.

ஜிலேபி மீன்களை குளத்தில் விடலாம். இந்த ஜிலேபி மீன்கள் அடிக்கடி குஞ்சு பொரித்துக் கொண்டே இருக்கும். உணவு பற்றாக்குறை ஆனால் இந்தக் குஞ்சுகளை மீன்கள் சாப்பிட்டுக்கொள்ளும்.

தாவர மிதவைகள்

குளத்தில் தாவர மிதவைகளை வளர்க்க வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல் ஒரு நாள் வைத்திருந்து தான் போட வேண்டும்.

மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால் தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவிற்கு சாணம் போட வேண்டும்.

அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். இது மீன்களுக்கு முக்கியமான உணவாகும். முடிந்த அளவு இயற்கை உணவுகளை அளித்தால் இதில் அதிக லாபம் பெற முடியும்.

சுகாதார மேலாண்மை

பண்ணை குளத்தை சுற்றிலும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு முறை அறுவடை முடிந்தவுடன் தண்ணீரை மாற்ற வேண்டும். தீவனங்களை சரியான அளவில் கொடுக்க வேண்டும்.

விற்பனை

ஆறு மாதங்கள் வளர்ந்த நிலையில் ஒரு மீன் சராசரியாக ஒரு கிலோ எடை இருக்கும். அந்நிலையில் இருந்து விற்பனை செய்யலாம்.

click me!