குறைந்த நீரில் அதிக விவசாயம் செய்ய முடியுமா? முடியும். எப்படி?

Asianet News Tamil  
Published : Sep 14, 2017, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
குறைந்த நீரில் அதிக விவசாயம் செய்ய முடியுமா? முடியும். எப்படி?

சுருக்கம்

Can I do more farming in low water? Can. How?

நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்குத் தகுந்த பயிர்களைத் தேர்வு செய்து, பயிர் செய்தால், நல்ல மகசூல் எடுக்க முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய தேவையான நீரை வைத்து, 3 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்.

இதுபோல கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப திட்டமிட்டு விவசாயம் செய்யும்போது, விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும். மேலும், நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்கேற்ப நாம் நடவு முறையைப் பயன்படுத்தலாம்.

திருந்திய நெல் சாகுபடியில் நடவு செய்யும்போது, நாற்றங்கால், நடவு போன்றவற்றில் பெருமளவு தண்ணீர் தேவை குறையும்; அதிக லாபமும் ஈட்ட முடியும்.

டெல்டா மாவட்டங்களில் எப்போதெல்லாம் தண்ணீர் குறைவாக வந்ததோ, அப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாக இருந்திருக்கிறது.

நீர்க்கட்டு என்பதுதான், நெல்லுக்கு தாரக மந்திரம். நெல் நடவு செய்த வயலில் தூர் கட்டும் வரை, 2 முதல் 2.5 செ.மீ., உயரம் தண்ணீர் கட்டினால் போதும்.

தூர் கட்டும் பருவத்தில் நீரை வடிகட்ட வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் தூர் வெடிக்கும்.

அதுபோல, பூ பூக்கும் சமயத்தில், பூ பூப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பும், பூத்த பின்பும், 5 செ.மீ., தண்ணீர் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முறையில் பூக்கள் பூத்து, பால் வைக்கும். அதன் பின், தொடர்ச்சியாக, 2 செ.மீ., உயரம் தண்ணீர் இருந்தால் போதுமானது.

அதுபோல அவ்வப்போது தண்ணீரை வடித்து, வயலை நன்கு காயவிட்டு, பின் தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் விளைச்சல் இருக்கும்.

தொடர்ச்சியாக வயலில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, பயிரின் வேர்களுக்கு காற்றோட்டம் செல்வதில்லை. மேலும், தண்ணீரை வடித்து வடித்துக் கட்டும்போது, அதிக விளைச்சல் கிடைக்கும்.

தண்ணீர் சிக்கனத்திற்கு உளுந்து சிறந்த பயிராக உள்ளது; இது, 65 நாட்கள் பயிர் தான். இதற்கு, 300 மி.மீ., தண்ணீர் போதுமானது.

கரும்பு சாகுபடி செய்யும்போது, தண்ணீர் சிக்கனத்திற்காக சொட்டுநீர்ப் பாசனம் செய்யலாம். அதுபோல தென்னை, வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கும், சொட்டுநீர்ப் பாசன முறை சிறந்த பயன் தருகிறது.

இதுபோல சிறு தானியங்கள், காய்கறிகள், பூ வகைகள் போன்றவற்றை மாற்றுப்பயிராக செய்யும்போது, குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு அதிக அளவில் விவசாயம் செய்ய முடியும்.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!