அசோஸ்பைரில்லம்:
அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் பாக்டீரியா நெல், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களின் வேர்ப்பகுதிகளில் வளர்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இதை பயன்படுத்தும்போது ஏக்கருக்கு 10 கிலோ வரை தழைச்சத்து (22 கிலோ யூரியா அளவு) சேர்க்கப்படுகிறது.
மேலும் ஜிப்பர்லிக் அமிலம், இன்டோல் அசிட்டிக் அமிலம் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் அசோஸ்பைரில்லம் உற்பத்தி செய்வதால் பயிர் நன்கு வளர்ந்து விளைச்சல் அதிகமாகிறது. இதை விதை நேர்த்தி செய்தும், நாற்றின் வேர்ப்பாகத்தில் நனைத்தும் மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டும் பல வகைகளில் பயன்படுத்தலாம்.
ரைசோபியம்:
உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைத் தாவரங்கள், நிலக்கடலை போன்ற பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை ரைசோபியட் என்னும் பாக்டீரியாவின் துணை கொண்டு செடிகளில் சேர்க்கின்றன. பயறு வகை பயிர்களின் விதையுடன் ரைசோபியம் உயிர் உரங்களை கலந்து விதைத்தால் வேர் முடிச்சுகள் அதிகரித்து அதிக தழைச்சத்து நிலைநிறுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கிறது.
சாதாரணமாக 20 கிலோ விதைகளுக்கு 200 கிராம் ரைசோபியத்தை சோற்றுக்கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து ஒரு நாள் கழித்து விதைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது. மேலும் 3-ல் ஒரு பங்கு உரத் தேவையும் குறைகிறது.