நீலப்பச்சை பாசி:
இதில் உள்ள நைட்ரஜேனஸ் என்ற பொருள் வெளியில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்து உரமாக ஆக்குகிறது. இந்த வகை பாசியை உழவர்கள் தமது நிலங்களில் நாற்றாங்கால் அமைத்து, விதைத்து 15 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
தொடர்ந்து 4 பருவங்களுக்கு இந்த பாசியை வயலில் இட்டால் தானாக வளர்ந்து பெருகத் தொடங்கி விடும். இதன் மூலம் 25 சதவீதம் ரசாயன உரத்தை சேமிக்கலாம். அதில் தழைச்சத்து மட்டுமின்றி அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவையும் உள்ளன. மேலும் மணிச் சத்தை கரையச் செய்து நெற்பயிருக்கு அளிக்கிறது.
அசோலா:
அசோலா ஒரு பெரணி வகைத் தாவரம் ஆகும். இதில் உள்ள அனபீனா எனப்படும் நுண்ணுயிர், காற்றில் உள்ள தழைச் சத்தை நிலைப்படுத்தி உரமாக அளிக்கிறது. இந்த அசோலாவை நாற்றங்கால்களில் இட்டு உற்பத்தி செய்து ஒவ்வொரு வாரமும் அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு 100 முதல் 250 கிலோ அசோலாவை நெல் நடவு வயலில் பரப்பி விட்டு ஒரு வாரம் தண்ணீர் தேக்கிவைத்து, பின் சேற்றில் மிதித்து விட வேண்டும். இதில் 6 சதவீதம் தழைச்சத்து உள்ளது. வேகமான வளர்ச்சியும், அதிக தழைச்சத்தும் இதன் சிறப்பம்சங்களாகும். ஒரு வாரத்தில் 10 மடங்கு இது பெருகுகிறது. இதன் மூலம் 25 சதவீதம் ரசாயன தழைச்சத்து உரங்களை குறைக்கலாம்.