இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண் வளத்தைப் பெருக்கி இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன.
எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.
மணிச்சத்தை மண்ணில் இருந்து செடிகளுக்கு கிடைக்குமாறு செயல்படும் பாஸ்போ பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போ பாக்டீரியா:
இது மண்ணில் உள்ள மணிச் சத்தை கரைத்து பயிர்களுக்கு வழங்குகிறது. சிலவகை அமிலங்களை இந்த பாக்டீரியா உற்பத்தி செய்து மண்ணிலுள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது.
இதை பயன்படுத்துவதால் 20 சதவீதம் மணிச்சத்து தரும் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம். வேர்கள் செழித்து வளரவும், திசுக்கள் வளம் பெற்று கதிர்கள் செழித்து வளரவும், தழைச்சத்தை அதிக அளவு ஈர்க்கவும் பாஸ்போ பாக்டீரியாபயன்படுகிறது.