ஆடுகளில் இருந்து கிடைக்கும் உரம் எந்த மாதிரியான பயன்களைத் தரும் தெரியுமா?

 
Published : Oct 06, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
ஆடுகளில் இருந்து கிடைக்கும் உரம் எந்த மாதிரியான பயன்களைத் தரும் தெரியுமா?

சுருக்கம்

Do you know which fertilizer available from the sheep will benefit?

** காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை இரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.

** அதேநேரத்தில், இரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. செயற்கை இரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு.

** ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.

** ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது.

** ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.

** ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும்.

** ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

** நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம். அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.

** இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

** ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.

** இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.

** எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் இரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும்.

PREV
click me!

Recommended Stories

Business: மாதத்திற்கு ரூ.50,000 வருமானம் ஈட்டலாம் ஈசியா! லாபத்தை அள்ளித்தரும் கீரை சாகுபடி.!
Egg Price: இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!