”தேனீ வளர்ப்பு லாபகரமான தொழில்களில் ஒன்று. கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட, தேனீ வளர்ப்பு மூலம் சம்பாதிக்க முடியும். தேனீ வளர்ப்பில், ‘விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு’, ‘வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பு’ என இரண்டு முறைகள் உள்ளன.
விவசாய ரீதியாக வளர்க்கும்போது, இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும். இவை, அயல் மகரந்த சேர்க்கைக்கு உகந்தவை. இந்தத்தேனீப் பெட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். இவற்றை இடம் மாற்றக்கூடாது.
இம்முறையில், கிடைக்கும் தேனின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை, நன்றாக நடப்பதால், வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.
வியாபார ரீதியில்… அதாவது, தேன் உற்பத்திக்காக வளர்க்க, இத்தாலியத் தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். இவை, அதிக அளவில் உண்ணக்கூடியவை. அதனால், பூக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இவை வாழும்.
‘எந்த மாதத்தில், எந்த ஊரில் என்ன பயிர் இருக்கும்?’ என்ற தகவல்களைத் திரட்டி, ஒரு வரைபடம் தயார் செய்துகொண்டு… அதன் அடிப்படையில் அந்தந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்தால், அதிகளவில் தேன் அறுவடை செய்யலாம். இம்முறையில், குறைந்தது 100 பெட்டிகளாவது வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். கிட்டத்தட்ட கிடை ஆடு மேய்ப்பது போலத்தான் இத்தாலித் தேனீ வளர்ப்பும். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்தான். ஆடுகளை பகலில் இடம் மாற்றுவோம். தேனீக்களை இரவில்தான் இடம் மாற்ற வேண்டும்.
தேனுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது. முறைப்படி ‘அக் மார்க்’ முத்திரை பெற்று, இதை விற்பனை செய்யும்போது நம்பிக்கை கூடுவதால், விற்பனையும் கூடும். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தினர், அதிகளவில் தேனை கொள்முதல் செய்து, பல்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். தனியாக, சந்தைப்படுத்த முடியாதவர்கள் இச்சங்கத்தில் விற்பனை செய்யலாம்.
முறையான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், ராணித் தேனீயில் இருந்து ‘ராயல் ஜெல்லி’யை சேகரித்து லட்சக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும்” என்ற பிலிப்ஸ்ரீதர் நிறைவாக,
”நமது நாட்டில் பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகளவில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெட்டிகளை, பல கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செழிப்பான பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லாரிகளில் ‘நடமாடும் தேன் உற்பத்திக் கூடங்கள்’ இயங்குகின்றன. அதுபோல இங்கும் வசதிகள் ஏற்பட்டால், இன்னும் ஏராளமானோர் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவார்கள்.
ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி, எங்கள் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி நடத்தி வருகிறோம். ஒரு வேளை அன்று அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதையடுத்த வேலை நாளில் பயிற்சி நடைபெறும். இதற்கு கட்டணம் உண்டு. முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.