வாழை சாகுபடி:
undefined
வாழை சாகுபடி செய்யும் நிலத்தில் முன்னதாக கிழங்கு பயிர் சாகுபடி செய்து இருக்க கூடாது.
பட்டம்.
ஆடி முதல் மார்கழி வரை. பல தானியங்கள் விதைத்து மண்ணில் மறுக்கி விட்டு விடவேண்டும். 30 நாள் கழித்து பயிர் செய்யலாம்.
ரகங்கள்
தேன் கதலி, பூவன், G9, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், ஏலக்கி, போன்றவை விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளவை. மேலும் நாடன் , நேந்திரன், குண்டால், சொர்ணமுகி ரகங்களும் உண்டு.
இடைவெளி:
மண்ணின் தன்மை, சாகுபடி செய்யும் பகுதி, ரகத்திற்கேற்ப இடைவெளி விடவேண்டும்
செவ்வாழை 7×8, மொந்தன் 7×7, பூவன் 6×7, ரஸ்தாளி 6×7, ஏலக்கி 6×7, கதலி 7×7, G9 6×6 என்ற அடி கணக்கில் இடை வெளியில் பயிர் செய்யலாம்.
விதை நேர்த்தி
பொதுவாக திசு வாழை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன அதில் குறைந்தபட்சம் 4 முதல் 6 இலைகள் கொண்ட கன்றுகளை ரகத்திற்கேற்ப தேர்வு செய்து நடவேண்டும்.
பக்க கன்றுகள் தேர்வு செய்யும்போது ஊசி போன்ற இலைகள் விட்டிருக்கும் கன்றுகள் தேர்வு செய்வது சிறப்பு. அகலமான இலை தேர்ந்தெடுத்தால் வளர்ச்சி மெதுவாக வரும்.
இவை ரகத்திற்கு ஏற்ப 2 கிலோ முதல் 4கிலோ எடை வரை மாறுபடும். இப்படியாக தேர்வு செய்த கன்றுகளை முதல் நாள் டிரைக்கோடெர்மா மற்றும் சுடோமோனாஸில் விதை நேர்த்தி செய்து இரண்டாம் நாள் ஜீவமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நடவு செய்ய முளைப்பு திறன் நன்றாக இருக்கும்,
நடவு
நடவு செய்ய 1×1 முதல்1½ × 1½ என்று குழி எடுத்து நடவு செய்யலாம். ஒவ்வொரு குழியிலும் 1 kg மண்புழு உரம் இட்டு அதன் மேல் கன்றுகள் வைக்கலாம்.
கன்றுகள் நடவு செய்து குழி மூடி விட்டு உடனே பாசனம் செய்யவேண்டும்
சொட்டுநீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் உகந்தது. 3 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்தது.
15 நாட்கள் ஒரு முறை அமிர்தகரைசல் 200 லிட்டர் பாசன நீரோடு கலந்துவிட வேண்டும்.
30 நாட்கள் ஒரு முறை ஜீவாமிர்தம்,
90 நாட்கள் ஒரு முறை பஞ்சகவ்யா மற்றும் மீன் அமிலம் என பாசனத்தில் தனித்தனியே கொடுக்க வேண்டும்.
கன்று நடவு செய்த நாள் முதல் 60 நாட்களுக்குள் பயிருக்கு தேவையான மணி சத்துக்கள் கொடுத்து விடவேண்டும். அதன்படி கன்று
நடவு செய்த நாள் முதல் 30ம் நாள் இடவேண்டிய இடுபொருட்கள் பின்வருமாறு.
1000கிலோ மக்கிய தொழு உரத்துடன், 2கிலோ வேம், 2கிலோ அசோஸ்பயிரில்லம், 2கிலோ பாஸ்போபாக்டீரியா, கலந்து 5கிலோ வெல்லம், 100லிட்டர் நீருடன் கலந்து தெளித்து ஈர கோணி இட்டு மூடி வைத்து இந்த கலவையை 5 நாட்களுக்கு ஒரு முறை என 3 முறை வெல்ல நீர் தெளித்து மருக்கி எடுத்து 1ஏக்கர் கன்றுக்கு இவ்வளவு என்று சமமாக பிரித்து கன்றை சுற்றி இட்டு மண்ணுடன் கிளறிவிட்டு உடனே பாசனம் செய்ய வேண்டும்.
நடவு செய்த 60ம் நாள் இடவேண்டிய பொருட்கள்.
30ஆம் நாள் கலவை அப்படியே செய்து அதில் 100கிலோ வேப்பம் புண்ணாக்கு, 200கிலோ ஆமணக்கு புண்ணாக்கு, கலந்து கன்றினை சுற்றி இட்டு கிளறி விட்டு பாசனம் செய்ய வேண்டும்.
120 ஆம் நாள்
மேலே சொன்ன கலவையில் பாஸ்போபாக்டீரியா விற்கு பதிலாக 2 கிலோ பொட்டாஷ் பாக்டீரியா கலந்து அத்துடன் 2கிலோ விரிடி மற்றும் 2 கிலோ சுடோமோனாஸ் கலந்து ஊட்டமேற்றி கன்றுகளுக்கு பிரித்து சற்று பெரிய வட்டத்தில் இட்டு பக்க கன்றுகளை நிலத்துடன் ஒட்டி அறுத்து அகற்றி tiller மூலம் மண்ணை கிளறி விட்டு பார் அணைக்க வேண்டும்.
180 ஆம் நாள்.
இது மிக முக்கியமான கட்டம். குலை தள்ளும் பருவம். நீர் பாசனத்தில் குறை இருக்க கூடாது. 120 ஆம் நாள் கடை பிடித்த கலவையுடன் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 200 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு, 100 கிலோ கடலை புண்ணாக்கு கலந்து பாசன பகுதியில் இட்டு கிளறிவிட்டு உடனே பாசனம் செய்யவேண்டும்.
200ஆம் நாள் முதல் குலை தள்ளிய தார்களில் பூக்கள் உடைத்து விட்டு 50 gm மண்புழு உரத்துடன் 50ml அமிர்த கரைசல் கலந்து 5×7 பாலிதீன் கவரில் இட்டு பூ உடைத்த தண்டை போர்த்தி கட்டிவிட காய்கள் பருமானாகவும், நீளமாகவும் , நல்ல நிறத்தில் இருக்கும்.
தார்கள் ஈன ஆரம்பிக்கும் சமயத்தில் சற்று உயரம் குறைவாக உள்ள மரங்களை கண்டறிந்து கன்றுக்கு ½ கிலோ மண்புழு உரம் இட சீக்கிரம் தார் ஈனும். தார்களுக்கு மேலும் பஞ்சகவ்யா தெளிக்கலாம். தார் வெட்டிய பிறகு மரங்களை அகற்றாமல் சீரான பக்க கன்றுகளை விட்டு மீண்டும் பராமரிக்கலாம்.
சாணி கரைசல் 10 நாளுக்கு ஒரு தடவை இளங்ககன்றுகள் மீது தெளிப்பதால் அந்த வாடையின் காரணமாக ஆடுகள் வாழையை மேயாது.
அறுவடை
வாழை காய் நுனியில் பூ உதிரும் காயை சுற்றியுள்ள வரும்புகள் மறைந்து மினுமினுப்பு கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக தார் ஈன்று சரியாக 90 நாட்கள் கடந்துவிட்டால் வெட்டும் பருவம் என எடுத்துக் கொள்ளலாம்.
தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.