கேள்வியே பட்டிராத பெயர்களில் எல்லாம் புதிது புதிதாக மக்களைத் தாக்குகின்றன நோய்கள். பல நோய்களுக்கும் காரணமாகச் சொல்லப்படுவது, செயற்கை உரங்கள் மற்றும் இரசாயன பூச்சிக் கொல்லிகளின் அதிகபட்ச பயன்பாடு. இயற்கையோடு இணைந்திருந்த நம் முன்னோர் காலத்தில் இத்தனை நோய்கள் இருந்ததில்லை.
வசதி இருப்பவர்கள் செயற்கை உரக் கலப்பில்லாமல் இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுகளை வாங்கி, ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள், புதுப்புது பிரச்னைகளுடன் வாழ்க்கைப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லையா?
‘‘ஏன் இல்லை?
இயற்கை விவசாயத்துக்குப் பயன்படற மண் புழு உரம் இருக்கிற போது, உயிரைப் பறிக்கிற செயற்கை உரங்களை ஏன் திரும்பிப் பார்க்கணும்?’’ எனக் கேட்கிறார் சரஸ்வதி. துறையூர், ஒட்டம்பட்டியைச் சேர்ந்த இவருக்கும், இவரது குடும்பத்தாருக்கும், மண்புழு உரம் தயாரிப்புதான் வாழ்க்கைக்கான ஆதாரம்! ‘‘அஞ்சாவதுக்கு மேல படிக்கலீங்க. கல்யாணத்துக்குப் பிறகு பத்து மாடுங்க வச்சு வளர்த்திட்டிருந்தோம். பராமரிக்க வசதியில்லாம, வித்துட்டோம். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப, எங்க ஊர்ல மண் புழு உரம் தயாரிக்கிறது பத்தி மீட்டிங் போட்டாங்க. அதைப் பார்த்துட்டு, கத்துக்கிட்டு வந்து, பண்ண ஆரம்பிச்சோம். பொதுவா மண்புழுக்களை விவசாயிகளோட நண்பன்னு சொல்வாங்க. மண்புழு உரம், பயிர்களுக்கு பாதகமே பண்ணாது. நோய் வராமக் காப்பாத்தும்.
இந்த உரத்துல தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துன்னு எல்லாம் உண்டு. தொடர்ந்து பயன்படுத்தினா, மண் வளம் அதிகரிக்கும். பயிர்களோட வேர் வளர்ச்சியும், பூக்கும், காய்க்கும் சக்தியும் அதிகமாகும். வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவிகிதம் கூடுதல் மகசூல் பார்க்கலாம். பெரிய அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு மட்டுமில்லாம, சின்னத் தோட்டம், நர்சரி வச்சுப் பராமரிக்கிறவங்களும் மண்புழு தயாரிப்புத் தொழிலில் நம்பி இறங்கலாம். உரம் உங்களைக் கைவிடாது’’ என நம்பிக்கைத் தருகிறார்.
மூலப்பொருள்கள்:
மாட்டு எரு, மண் புழு, வைக்கோல், பழைய கோணி, தண்ணீர், தென்னை மட்டைகள், மூடி போட்ட தொட்டிகள் அல்லது வாளிகள்.
எங்கே வாங்கலாம்?
மாட்டு எருவை மாடுகள் வளர்ப்போரிடம் வாங்கலாம். கிராமங்களில் மாட்டுப்பண்ணைகள் அதிகம் என்பதால் அங்கே சுலபமாகக் கிடைக்கும். விவசாயிகளிடமோ அல்லது ஏற்கனவே மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களிடமோ புழுக்களை வாங்கலாம். ஒரு டிராக்டர் அளவு மாட்டு எருவே ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு கிலோ புழுவின் விலை 350 ரூபாய். வண்டி வாடகை, கொட்டகை அல்லது தொட்டி கட்டும் செலவுகள் தனி.
இட வசதி: பெரிய அளவில் தொடங்க நினைப்போர், கொட்டகை போட்டு, 5 அடி அளவுள்ள தொட்டிகள் கட்டி தனி இடத்தில் தொடங்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், மூடிகளோடு கூடிய ஒரே அளவிலான தொட்டிகளிலேயே கூட புழுக்களை வளர்க்கலாம்.
எப்படி வளர்ப்பது: தொட்டிகளில் எருவைக் கொட்டி, புழுவைக் கலந்து விட்டு, 15 நாள்களுக்கு தண்ணீர் விட வேண்டும். சமையலறைக் கழிவுகளைக் கூட தினமும் தொட்டியில் போட்டு, மண்ணால் மூடி விடலாம். புதிதாக மண் போட வேண்டியதில்லை.
மண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே உரம். புழுக்களை விட்ட 7 முதல் 14 நாள்கள் கழித்து மேல்பரப்பில் குருணை வடிவில் காணப்படும் புழுவின் எச்சங்களைத் தனியே சேகரிக்க வேண்டும். பிறகு அதை சலித்தால், கிடைப்பதுதான் மண்புழு உரம்.
விற்பனை வாய்ப்பு: கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், விவசாயிகளிடம் விற்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள், நர்சரி வைத்திருப்போரிடமும், வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களிடமும் விற்பனைக்குக் கொடுக்கலாம்.
மாத வருமானம்: ஒரு மூட்டை உரம் 250 ரூபாய். ஒரு நாளைக்கு 5 அடி அளவுள்ள ஒரு தொட்டியிலிருந்து 1 மூட்டை உரம் எடுக்கலாம். 50 சதவிகித லாபம் உறுதி.