காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் இரகங்களை மீட்டெடுத்துவரும் புதுகை விவசாயிகள்...!

 |  First Published Nov 4, 2016, 4:28 AM IST



சாகுபடியில் காணாமல் போன விவசாயிகள் மறந்துவிட்ட பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட வறட்சியையும், நோய்த் தாக்குதலையும் தாக்குப்பிடிக்கக்கூடிய நெல் இரகங்களை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர் என்றால் மிகையில்லை.

ஆயிரமாயிரம் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இயற்கையை அவற்றால் வெல்ல முடியாது என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ஒட்டு நெல் இரகங்களை உதாரணமாகக் கூறலாம். பெரும்பாலான ஒட்டு இரக நெல் வகைகள் நமது மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்றதாக இல்லை. “குறைந்த நாட்களில் அதிக விளைச்சல்” என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவைதான் இந்த குட்டை இரக நெல்கள். ஆனால் பாரம்பரிய நெல் இரகங்கள், மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் ஆகிவற்றை உள்ளடக்கியதாக இருந்தன.

Tap to resize

Latest Videos

மேலும், மண்வளம், பூச்சி வளம், நீர் வளம், நம் உடல் வளம் ஆகியவற்றை காக்கும் வலிமையுடையது. சுமார் 160 பாரம்பரிய நெல் இரகங்கள் அனைத்தும் பசுமைப் புரட்சியால் மறக்கடிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும், தொண்டு நிறுவனங்களும் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் வழிகாட்டுதலுடன் பாரம்பரிய நெல் இரகங்களை மீட்டெடுக்கும் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட இயற்கை விவசாயிகளால் 24 வகையான பாரம்பரிய நெல் இரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள பாரம்பரிய நெல் இரகங்கள்: (வயது நாள்கள் அடைப்புக்குள்):

பூங்கார் - (100 - 105), மாப்பிள்ளைச் சம்பா - (165 - 170 ), கருடன் சம்பா - (170 - 180), சிவப்பு கவுனி - (135 - 140), பனங்காட்டு குடவாழை - (135 - 145 ), கருத்தக்கார் - (105 - 110), சண்டிகார் - (155 - 165), கருங்குறுவை - (120 -125), குருவைக் களஞ்சியம் - (140 - 145), தூயமல்லி - (135 - 140), தங்கச்சம்பா - (160 - 165), நீலச்சம்பா - (175 - 180), செம்புளிச் சம்பா - (135 - 140), கிச்சடிச் சம்பா - (135 - 140), இலுப்பைப்பூ சம்பா - (135 - 140), அறுபதாம் குறுவை - ( 80 - 90), சீரகச்சம்பா - (125 - 130), காட்டுயானம் - (180 - 185), சொர்ணமுசிறி - (140 - 145) சிவப்பு குருவிக்கார் - (120 - 125), கருப்புக்கவுனி - (140 - 150), மிளகி - (120 - 130) , சம்பாமோசனம் - (160 - 165), கைவிரச்சம்பா - (160 - 165) ஆகிய இரகங்கள் அடங்கும்.

இது குறித்து ரோஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஆதப்பன் கூறியது: “கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் நபார்டு வங்கியுடன் இணைந்து பாரம்பரிய நெல் இரகங்களை பாதுகாக்கும் திட்டம் செயல்படுகிறது. 24 வகையான பாரம்பரிய நெல் இரகங்கள் பாதுகாக்கப்பட்டு அன்னவாசல், அரிமழம், அண்டக்குளம் பகுதிகள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு விதைகளை கொடுத்து பரவலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

சிறு குறு விவசாயிகளையும், பெண் விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, இயற்கை விவசாய யுக்திகளை பல்வேறு பயிற்சிகள் மூலமாகவும், களப்பார்வைகள் மூலமாகவும், இயற்கை விவசாய மீட்பு மாநாடுகள் மூலமாகவும், பாரம்பரிய உணவுத் திருவிழாக்கள் மூலமாகவும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்ற வல்லுநர்கள் மூலமாகவும் மாவட்ட மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி எஸ். சோமசுந்தரம், பாரம்பரிய நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களை நேரில் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், பாரம்பரிய நெல் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் 98420 93143 -ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டச்செயலர் சி. அப்பாவுபாலாண்டார் கூறியதாவது:

நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் இரகங்கள் படிப்படியாக மறையத் தொடங்கியதால், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் வளரும் உணவு தானியங்களால், மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவிட்டன, இதை உண்பவர்களும் விதவிதமான நோய்களுடன் உலவி வருகின்றனர். இச்சூழலில் நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி இரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து, நார்ச்சத்து மிக்க பாரம்பரிய நெல் இரகங்களின் சாகுபடிக்கு நாங்கள் மாறிவிட்டோம். இதே போல அனைவரும் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.

 

click me!