இயற்கை நலம் பற்றிக் கவனம் கொண்டு, என்ன தேவை என்று புரிந்து கொண்டால் போதும். வீண்செலவு வேண்டாம். எனினும் உங்கள் மண்ணில் பொட்டாசியம் குறைபாடு இன்னமும் உள்ளது என்று சைக்சுக்கு இரண்டாம் மண் பரிசோதனை தெரியப்படுத்தியது. கோதுமைப் புற்களை மண்ணில் பரப்பி மீண்டும் கோதுமையையே பயிர் செய்தார்.
முன்பைவிட அதிகமாகவே கோதுமை விளைந்தது. மூன்றாவது மண் பரிசோதனையில் பொட்டாசியக் குறைபாடும் நீங்கிவிட்டது. மண்ணில் மக்கும் பொருள் ஹாவொர்ட் எடுத்துக்காட்டிய விகிதத்தில் இருந்தால் போதுமானது. அறுவடைக் கழிவும் குதிரைச் சாணமும் உருவாக்கப்பட்ட கம்போஸ்டிங் மண்ணுக்கு வேண்டிய சத்துக்கள் - அதாவது அதிகபட்ச மகசூல் தரும் வழியில் திருத்தம் பெற்று மண்ணைச் சுரண்டாத வழியில் மகசூலும் கிட்டியது மண்ணும் பாதுகாக்கப்பட்டது.
இவர் ஒரு வித்தியாசமான உழவுக் கருவியையும் தயார் செய்து அடிமண்ணை மேலே புரட்டும்படி செய்தார். எல்லாநிலத்திலும் ரை, குளோவர் போன்ற தீவனப்பயிர்களை விதைப்பர். ஏக்கருக்கு சுமார் 2 1/2 டன்கள் வரை பசுந்தீவனம் குதிரைகளுக்குக் கிடைத்தது. பலமுறை அறுத்தும் கூட சிம்பு வெடித்து குதிரைகளுக்குத் தேவையான இயற்கைத் தீவனம் கிடைத்தால் குதிரை - பசுக்கள் நோயின்றி உழைப்புத்திறனையும், பாலையும் வழங்கிற்று. முறையே ஓட்ஸ், கோதுமை இரண்டையும் ஒரு பக்க நிலத்தில் மாற்றி மாற்றி விதைத்து 100 புஷல் வரை பெற்றார். அதாவது 1 ஏக்கருக்கு ஏறத்தாழ 3 டன்கள்.
இரண்டாம் உலக்போர் காலக்கட்டத்தில் போர் எவ்வாறு அமைதியைக் கெடுத்ததோ அவ்வாறே விவசாயத்தில் புகுந்த ரசாயனம் மண்ணைச் சுரண்டியதுடன் மனித நலவாழ்வுக்கு உலை வைத்தது. மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் ரசாயன விவசாயம் விஷம்போல் பரவியபோது இந்தியாவிலிருந்தும் கீழை நாடுகளிலிருந்தும் பெற்ற வேளாண்மை நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ரசாயன விவசாயத்தையும், வீரியரக விதைகளை எதிர்த்தும் ஒரு அறப்போரை ஹோவார்டின் சிஷ்யர்கள் இங்கிலாந்தில் தொடங்கினர்.
ஈவா பெல்ஃபோர் ”ஹிட்லரைப் போல் ஒரு கொடிய சர்வாதிகாரியை எவ்வாறு எதிர்த்துப் போராட உலகமக்கள் ஒன்று திரடண்டுள்ளனரோ அவ்வாறே இன்று ரசாயனங்களை எதிர்த்து இயற்கையை வாழவைக்க விவசாயிகள் ஒன்று திரளவேண்டிய கட்டாயம் உள்ளது…” என்று கூறினார்.
அப்போது ஹிட்லர் பிரான்சை வென்று முன்னேறிக்கொண்டிருந்தான். ஃபிரண்ட் சைக்சும், ஈவா பெல்ஃபோரும் இன்னும் வேறு பல இயற்கை விவசாயிகளும் மண் மக்கள் குழு என்று (Soil Association) தொடங்கி உலகளாவியதாகப் பல நாடுகளில் உறுப்பினர்களைச் சேர்த்தனர். அது மட்டுமல்ல சஃப்போக்கில் (SUFFOLK) மண்பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு இயற்கை விவசாயிகள் சங்கம் நிலம் ஒதுக்கியது. சமகாலத்தில் இவர்களோடு இணைந்த ஜே.ஐ. ரோடேல் பென்சில்வேனியாவில் அப்போது, நலவாழ்வுக்குரிய நல்வழிகள் என்ற பொருளில் HEALTH FINDER என்ற பெயரில் ஒரு கையேட்டை வெளியிட்டார்.
நலவாழ்வுக்கும் நல்ல மண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றின ஹாவொர்ட் வழங்கிய விவரம் ரோடேலுக்குப் புதுமையாக இருந்தது. ”இதுவரை மண்ணுக்கும் மனிதநலவாழ்வுக்கும் உள்ள நல்லுறவை இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கவில்லை” என்று கூறிய ஜே. ஐ. ரோடேல் முதல் வேலையாக ஹோவார்ட் எழுதியுள்ள” வேளாண்மை உயில்” என்ற நூலில் அமெரிக்காவில் வெளியிட்டார்.
நல்ல மண்ணில் இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவில் அதிக அளவு ஊட்டச் சத்து உள்ள உண்மையை ஆய்வுப்பூர்வமாக அவருடைய முக்கியப் பத்திரிகையான”இயற்கைத் தோட்டம் - பண்ணை”யிலும் வெளியிட்டதுடன், ஈவா பெல்ஃபோரின் அனுபவத்தில் நல்ல மண்ணில் விளைந்த இயற்கை நல்லுணவுக்கு நோயாற்றும் பண்பு உள்ளது என்ற செய்தியால் கவரப்பட்ட டாக்டர் ஜே. நிக்கல்ஸின் இதயநோய் நீங்கியதை முன்னர் கவனித்தோம்.
இதன் பின்னணியில் 1942-இல் ஜே.ஐ.ரோடேல் பென்சில்வேனியாவில் எம்மாவுஸ் (EMMAUS) பண்ணையை வாங்கினார். அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தை ஆழமாக வேர்விட வைத்து மண்ணைக் காப்பாற்றிய பெருமை ஜே.ஐ.ரோடேலுக்கும் அவர் மகன் ஜே. ராபர்ட் ரேடலுக்கும் உண்டு.
இவருடைய “ஹெல்த் ஃபைன்டர்” என்ற கையேட்டுக்குத் தடைவிதிக்கும் அளவுக்கும் ஜே.ஐ ரோடர் பிரபலமானார். ”ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ரசாயன விவசாயத்தைத் தவிர்க்க வேண்டும். பாரம்பரிய விதைகளைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லாத உணவை நல்ல மண்ணில் விளைவித்து உண்டால் மரணபயம் எதுவுமில்லை.” என்ற கருத்து ஆளும் வர்க்கத்திற்கு எரிச்சல் மூட்டியது.
யு.எஸ்.பெடரல் டிரேட் கமிஷன் இவர் மீது வழக்குத் தொடர்ந்தது. ரசாயன உணவைப் புறக்கணித்துவிட்டு நலமாக வாழுங்கள் என்று கூறுவது குற்றமா? என்ற கேள்வியுடன் ஜே. ஐ. ரோடேல் இந்த வழக்கை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். இதனால் இவர் நடத்திய பத்திரிகை “இயற்கைத் தோட்டம் - இயற்கைப் பண்ணை” - அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி 9 இலட்சம் சந்தாதாரர்கள் உருவானார்கள். எனினும் யு.எஸ். ஃபெடரல் கமிஷனை எதிர்த்து வழக்கு நடத்தியதில் இவருடைய நீதிமன்றச் செலவு 4 லட்சம் டாலர். இந்த இழப்புத் தொகையை வழங்க அரசு முன்வரவில்லை.
ஏராளமாக நிதி குவிந்தது. நலிவுற்ற பிரிவினர் நலவழ்வு பெறவும் மண்ணைப் போற்றி மண்ணை நஞ்சில்லாமல் காப்பாற்றவும் ரோடேல் தொண்டு நிறுவனம் இன்றளவும் பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1971-இல் ஜே.ஐ. ரோடேல் ஒரு விபத்தில் மரணமுற்றாலும் அவர் புத்திரர் ஜே. ராபர்ட் ரோடேல் தந்தையைவிடத் தீவிரமாக மண்ணைக் காப்பாற்றுவதில் பாடுபட்டார்.
ரோடேல் நிறுவனம் மண்ணில் உயிர் உண்டு. உயிர் மண் தொடர்பாக நிகழ்ந்த அனைத்து ஆய்வு நூல்களையும் ஷாட்ஸ் உட்பட வெளியிட்டது. ஜப்பான் விஞ்ஞானி மாசநபு ஃபுக்கோக்காவின் ஒற்றை வைக்கோல் புரட்சியைப் பல மொழிகளில் வெளியிட்டார்கள். Reason இன்னமும் இயற்கை விவசாய நுட்பங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆகவே இன்று உலகம் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பரப்பியதில் முதல் பெயர் ரேடேல் அன்ட் சன்ஸ் என்பது மிகையில்லை.
மண்ணைப் போற்றிய ஜே.ஐ.ரோடேல் ஆங்கிலமொழியில் மண் என்ற சொல்லுக்கு அழுக்கு, சுத்தமின்மை என்று மண்ணை வெறுக்கத்தக்கதாயுள்ள பொருள் உள்ளதையும் எதிர்த்து மண்ணுக்குப் புதிய பொருள் வழங்கினார். மண் என்பது பல்வகை உயிர்கள் என்னும் தூய்மையுள்ளது என்றும் அர்த்தம் வழங்கினார். மண்ணை நாம் தவறாகப் புரிந்து கொண்டதால் தமிழ் மொழியில் கூட நல்லமண், கெட்டமண் என்று கூறிப் புரியவைக்க வேண்டியுள்ளது. ”நன்னிலம்” என்ற சொல்லாட்சி உள்ளது. ‘நல்லமண்’ என்ற சொல்லாட்சிதான் இனி மண்ணைக் காப்பாற்றும்.
மண் என்று எடுத்துக்கொண்டால், மண்ணின் கீழ் உள்ள உயிரிகளையும் கணக்கிட்டுப் பொருள் கொள்ள வேண்டும் என்பது ரோடேலின் கருத்து.
மண்ணுக்கு அடியில் மண்புழுக்கள் உள்ளன. மண்புழுவை இலத்தீன் மொழியில்” அன்னலிடா” (ANNELIDA) என்பார்கள். இதன் பொருள் “வளையங்கள்”. மண்புழுவின் உடல் ஏராளமான வளையங்களைக் கொண்டுள்ளது. சாதாரணமாக ஆப்பிரிக்கா அல்லது இந்தியவகை நாட்டுப்புழுவில் 100முதல் 200 வளையங்கள் உள்ளன.
ஒவ்வொரு வளையமும் தனித்து இயங்கும். இந்த வளையங்களின் இயக்கத்தால் மண்ணுக்குள் ஆறு அடி அல்லது ஏழு அடி வரை துளைத்து உள்ளே சென்று கீழ் மண்ணை மேலே புரட்டிக்கொடுக்கும். மண்ணைத் துளைத்துக் கீழ்ப்பகுதிக்குச் சென்றாலும், மீண்டும் மேல் மட்டத்திற்கு வந்தாலும் மண்ணை உட்கொண்டு கழிக்கிறது. இந்தக் கழிவுகளே அருமையான மேல்மண் (TopSoil) இந்த மேல் மண்ணே உற்பத்தியைப் பெருக்கும். ஆகவேதான் அரிஸ்டாடில் மண்புழுவை “மண்ணின் குடல்கள்” என்று வர்ணிக்கிறார்.
இவ்வாறு மண்புழுக்களால் மண்ணை வளமாக்க மண்ணில் முக்கிய தொழுஉரம் இட்டு மண்புழுக்கள் அடங்கிய மண்ணைப் பரிசோதித்தால் ஒரு கிராம் மண்ணில் 2.9கோடி நுண்ணுயிரிகள் இருக்கும். இந்த நுண்ணுயிரிகள் மடிவதும் பின்னர் தோன்றிப் பன்மடங்கு விரிவாவதுமாக ஒரு இயக்கத்தை மண்புழுக்கள் செய்யும். மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் கலந்த வேர் மண்ணில் கால்மடங்கு வரை கரிமவேர் விழுதுகள் அதாவது ஹூமஸ் உருவாகிறது.
1டன் மண்புழு மக்கு உரத்தில் 1/4டன் கரிமச்சத்து+ தழைச்சத்துள்ள ஆரோக்கியமான, நல்லுணவு வழங்கக்கூடிய மண் விழுதுகள் உண்டு. இவற்றைப் போற்றி வளர்த்த அரிஸ்டாட்டிலிருந்து ரேடேல் வரை, இயற்கை விவசாயத்திற்காகப் போராடும் இன்றைய விவசாயிகள் வரை மண்ணைப் போற்றும் மாமனிதர்கள் வாழ்ந்து வருவது இந்த உலகம் செய்த தவப்பயன் என்றால் மிகையில்லை.