அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம் எல்லாமே மூங்கில் தான்.
மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. தாவர இனங்களிலேயே மிக வேகமாக வளரக்கூடிய ஒரே தாவரமும் மூங்கில்தான். ஒரே நாளில் ஒன்று முதல் நான்கு அடி உயரம் வளரக்கூடியது.
உலகத்துல 111 வகையான பேரின மூங்கிலும், 1575 வகையான சிற்றின மூங்கிலும் இருக்கு. இதுல ரெண்டே ரெண்டுல மட்டுந்தான் முள் இருக்கும். அதைத்தான் கல் மூங்கி, தொப்பை மூங்கினு நாம சொல்றோம். இந்த ரெண்டு மட்டுந்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.
முள் இல்லா மூங்கில்ல அளவிட முடியாத அளவுக்கு பலன் இருக்கு. நல்லா உறுதியா இருக்குறதால, கட்டுமான பணிக்கு ரொம்பவே உதவியா இருக்கும். ஆயிரத்துக்கும் அதிகமான, விதவிதமான கைவினை பொருள்கள் செய்யலாம். அழகழகான நாற்காலி, பொம்மை, கூடை, பாய், பலவிதமான இசைக் கருவிகள், மின் விளக்குகள்ல பொருத்துற மாதிரியான, கலைநயம் மிக்க குடுவை இப்படி ஏகப்பட்டது சொல்லிக்கிட்டே போகலாம்.
இது மூலமா துணியே தயாரிக்குறாங்க. பருத்தித் துணியைவிட இது வியர்வையை நல்லா உறிஞ்சும். அதனால இதுக்கு அமோக வரவேற்பு இருக்கு.
சினிமாவில் வருவது போன்ற அழகழகான மர வீடுகள், அனைத்துமே முள் இல்லா மூங்கிலில் தயாரிக்கப்பட்டவை. கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இம்மாதிரியான முள் இல்லா மூங்கில் மரத்தைக் கொண்டு முழுவீட்டையும் கட்டி முடித்திருக்கிறார்கள். தரை, சுவர் என அனைத்துமே மூங்கில் கொண்டு அமைத்து விடுகிறார்கள். இதில் இருந்து வீட்டு உபயோக பொருட்களும் தயாரிக்கலாம்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு இது மாற்று என்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கிறது. கேரளாவில், முள் இல்லா மூங்கிலின் குருத்தை உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
முள் இல்லா மூங்கில்ல, மொத்தம் பதினைஞ்சு ரகம் இருக்கு. பேம்புசாவல் காரியஸ்தான்ங்கற ரகம், பேம்புசா நியூட்டன், டூல்ட்டா, பல்கூவா வகைகளும் இருக்கு.
இதுக்குப் பெரிசா செலவே இல்லை. பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. ஒரு தடவை ஒரு கன்னு வெச்சுட்டா, அஞ்சு வருஷத்துக்குப் பிறகு பலன்தான். தொடர்ந்து 150 வருஷம் வரைக்கும் வெட்டிக்கிட்டே இருக்கலாம்.
அதுமட்டுமில்லாம, ஒரு குருத்துல இருந்து வருஷத்துக்கு ரெண்டு குருத்து உருவாகும். அதுல இருந்து ரெண்டு ரெண்டா அப்படியே பெருகிகிட்டே இருக்கும்.
ஒரு ஏக்கர்ல முள் இல்லா மூங்கில் போட்டா, வருஷத்துக்கு பன்னிரண்டு டன் சருகு உதிர்க்கும். இதுல இருந்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மண்புழு உரம் தயாரிக்கலாம். குருத்து மூலமாவும், அறுபதாயிரம் கிடைக்கும். ஒரு மரம் அம்பது ரூபா வரைக்கும் விலை போகும்.
அப்படினா, ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு இரண்டாயிரம் மரம் அறுத்தா அது மூலமாக மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்.
பனிப் பிரதேசம் மற்றும் பாலைவனப் பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலுமே முள் இல்லா மூங்கில் நன்கு வளரும். குறிப்பாக டெல்டா பகுதிகளில் மிகவும் சிறப்பாக செழித்து வளரும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 150 கன்றுகள் நடலாம். குறைந்தபட்சம் 110 கன்றுகள் நடலாம்.
ஆறு மீட்டர் இடைவெளியில் குழிகள் போட வேண்டும். ஒவ்வொரு குழியும் ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். அந்தக் குழியில் மண்புழு உரம், தொழு எரு, வேர் பூசணம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பஞ்சகவ்யா, சாம்பல், தென்னை நார் கழிவு ஆகியவற்றை கலந்து குழியினை நிரப்ப வேண்டும்.
குழிகளைச் சுற்றி சிறிய வரப்பு அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் மாலை குழியின் நடுவில் கன்று நட வேண்டும். கன்றை சுற்றிலும் கையால் அழுத்தி விட வேண்டும். அதிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் வருடம் வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மூன்றாம் வருடம், மாதத்துக்கு இரண்டு முறை போதுமானது. அடுத்தடுத்த வருடங்களில் முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் பாய்ச்சும் வசதி இருந்தால் இன்னும் செழிப்பாக வளரும்.