செயற்கை உரங்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கால்நடைகள் மூலம் உரம் தயாரித்து பயன்படுத்தவது அதிகரித்து வருகிறது.
இயற்கை உரங்களை தயாரிக்க மாடுகள் தான் தேவை என்பது எல்லாம் இல்லை. ஆடுகள் இருந்தால் கூட அவற்றின் மூலம் இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
தயாரிக்கும் முறை:
ஆட்டு கழிவு ஐந்து கிலோ, ஆட்டு சிறுநீர் மூன்று லிட்டர், சோயா அல்லது நிலக்கடலை புண்ணாக்கு 1.5 கிலோ ஆகியவற்றை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இரண்டு ஆட்டின் பால், தயிர், இளநீர் (2), கள் ஒரு லிட்டர், கரும்புச்சாறு மற்றும் நன்கு பழுத்த வாழைப்பழம் 10 ஆகியவற்றை சேர்க்க வேண்டும். கள்ளுக்கு பதிலாக 50 கிராம் கரும்புச் சாறுக்கு பதிலாக 2 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வெல்லத்தை கரைத்துப் பயன்படுத்தலாம்.
இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் கலனில் வைத்து நன்கு கலக்க வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் வலது புறமாக 50 முறையும், இடது புறமாக 50 முறையும் கலக்க வேண்டும்.
பின் அந்த கலனை பூச்சி மற்று புழுக்கள் அண்டாதவாறு பருத்தி துணி கொண்டு மூடி, சுத்தமான இடத்தில் வைத்துவிட வேண்டும். இம்முறையில் பதினான்கு நாட்களில் இக்கலவை தயாராகிவிடும்.
பயன்படுத்தும் முறை:
கரைசலை நன்கு கலந்து, முறையாக பராமரித்தால் ஆறு மாதங்கள் வரை பயிர்களுக்கு இதனை பயன்படுத்தலாம். கரைசல் சற்று அதிகமான அடர்த்தியில் காணப்பட்டால் இளநீர் அல்லது தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்.
இக்கரைசலை நன்கு வடித்துவிட்டு ஒரு ஏக்கருக்கு, இரண்டு லிட்டர் வீதம் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும்.