விவசாயிகளின் உண்மையான நண்பர்கள் பூச்சிகள்; சில கேள்விகள் மற்றும் பதில்கள்…

 |  First Published Aug 12, 2017, 11:58 AM IST
agriculture tips



வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப் பூச்சிகளும் விவசாயிகளின் நண்பர்களே.

பூச்சிக்கொல்லி மருந்துகளின் கடுமையான தீமைகள் பற்றியும், வயல்களில் பூச்சிகளைக் கையாள்வதற்கான உத்திகள் பற்றியும் தமிழ்நாடெங்கும் விவசாயிகள் தெரிந்துகொள்வது அவசியம்.

Tap to resize

Latest Videos

1.. பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

“வயல்களில் பயிரைத் தின்று மகசூல் இழப்பு ஏற்படுத்தும் பூச்சிகளால்தான் நமக்குப் பிரச்சினை. இவற்றை தீமை செய்யும் பூச்சிகள் என்கிறோம். அதே நேரத்தில் நம் சாகுபடி பயிரை சாப்பிடாமல், நமக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் பிடித்து சாப்பிடக் கூடிய சிலந்தி, குளவி, பொறிவண்டு, தட்டான் என வேறு ஏராளமான பூச்சிகள் உள்ளன. இவை யாவும் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகள்.

நம் பயிரை சாப்பிடும் பூச்சிகள் இலையை சுருட்டிக் கொண்டோ அல்லது தண்டுகளை துளைத்துக் கொண்டோ உள்ளே பாதுகாப்பாக இருக்கின்றன. தட்டான், குளவி, சிலந்தி போன்ற நன்மை செய்யும் பூச்சிகள்தான் பயிர்களுக்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும். இந்த சூழலில், நாம் பூச்சிக்கொல்லி மருந்துகளை வயல்களில் அடிக்கும்போது முதலில் நன்மை செய்யும் பூச்சிகள்தான் கொல்லப்படுகின்றன.

இது தவிர நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தாங்கி உயிர் வாழக் கூடிய தகவமைப்பு என்பது பூச்சிகளுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியத்தையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆக, பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வயல்களில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை சாப்பிடும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும்தான் பல புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன. மறுபுறம் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகிக் கொண்டே செல்கின்றன.

2.. பூச்சிகளைக் கட்டுப்படுத்த என்னதான் வழி?

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பார்கள். அதேபோல், பூச்சிகளை பூச்சிகளால்தான் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது நன்மை செய்யும் பூச்சிகள் போதுமான அளவில் நம் வயல்களில் இருக்க வேண்டும். அப்போது, பயிர்களை சாப்பிடும் தீமை செய்யும் பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகள் பிடித்து தின்று விடும். இதனால் பூச்சிகளின் பெருக்கம் இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தப்படும்.

3.. நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா?

பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் ஏற்கெனவே வயல்களில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க முடியும். மஞ்சள் நிறத்தில் பூ பூக்கக் கூடிய செண்டுப் பூ (துலுக்க சாமந்திப் பூ) செடி, மக்காச் சோளம் போன்றவற்றை வயல் வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பல பூச்சியினங்களை நம் வயல்களை நோக்கி வரும்படி கவரலாம்.

வரப்புகளில் ஊடு பயிராக தட்டைப் பயறு சாகுபடி செய்யலாம். தட்டைப் பயறு செடியில் இருக்கும் அசுவினி பூச்சியைச் சாப்பிட ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் நம் வயல்களை நோக்கி படையெடுத்து வரும். அசுவினியை தின்று முடித்த பின்னர் நம் வயல்களில் உள்ள பயிர்களில் மறைந்து கொண்டிருக்கும் தீமை செய்யும் பூச்சிகளையும் தேடிப் பிடித்து தின்னும். இதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் குறைக்க முடியும்.

4.. நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பைத் தடுத்து விட முடியுமா?

நன்மை செய்யும் பூச்சிகளைக் கொண்டு பயிர்களை அழிக்கும் தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு உத்தி. வேப்பங்கொட்டை கரைசல், இயற்கை பூச்சி விரட்டி கரைசல் போன்றவற்றை பயிர்களில் தெளிப்பதன் மூலம் பயிர்களின் இலைகளில் கசப்புத் தன்மையை உருவாக்கலாம். இதனால் கசப்பு சுவையுள்ள இலைகளை சாப்பிடாமல் தீமை செய்யும் பூச்சிகள் தவிர்த்து விடும். இது இன்னொரு உத்தி.

மேலும், ஆமணக்கு போன்ற செடிகளை வரப்புகளில் நட்டு வைப்பதன் மூலம், தீமை செய்யும் பூச்சிகளை வயல்களுக்குள் இறங்காமல் தடுக்க முடியும். உயரமான இடத்தில் இருக்கும் ஆமணக்கு போன்ற செடிகளில்தான் தீமை செய்யும் பூச்சிகள் முதலில் உட்காரும். ஆகவே, நம் பயிர்களுக்குச் செல்லும் தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

5.. நன்மை செய்யும் பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்கள் என்றால் சரி. எல்லா பூச்சிகளையும் நண்பர்கள் என எப்படிக் கூற முடியும்?

தீமை செய்யும் பூச்சிகளுக்கு நம் பயிர்கள்தான் உணவு. ஆனால் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீமை செய்யும் பூச்சிகள்தான் உணவு. தீமை செய்யும் பூச்சிகள் வயல்களில் கொஞ்சமாவது இருந்தால்தான் நன்மை செய்யும் பூச்சிகளும் நம் வயல்களிலேயே தங்கியிருக்கும். ஆகவே, நம் நண்பர்களாகிய நன்மை செய்யும் பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுவதால் தீமை செய்யும் பூச்சிகளும் நமது நண்பர்களே.

6.. இயற்கை சார்ந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறையால் வேறு என்ன பயன்கள் உள்ளன?

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாகுபடிக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட நஷ்டமே விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. ரசாயண உரங்களுக்கும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும் விவசாயிகள் செய்யும் செலவு மிகவும் அதிகம். அப்படியிருந்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இந்த சூழலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை சார்ந்த முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கான சாகுபடி செலவு குறைகிறது. மகசூல் இழப்பு தடுக்கப்படுகிறது. இயற்கை சார்ந்த நமது சூழலியலும் பாதுகாக்கப்படுகிறது.

click me!