உலகில் பருத்தி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பருத்தி ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு 2-வது இடம்.
ஆண்டுக்கு 240 லட்சம் பேல்கள் பருத்தி (ஒரு பேல் என்பது 170 கிலோ பருத்திப் பொதி) இந்தியாவில் உற்பத்தியாகிறது. 90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. பருத்தியை நம்பி 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் வாழ்கின்றன.
ஆனால், பருத்தி விவசாயிகளுடன்தான் விளையாடுகிறது மான்சாண்டோ நிறுவனம். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மான்சாண்டோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. பருத்தி வகையை அறிமுகம் செய்தது. பல்வேறு நோய்களைத் தாங்கி வளரும் என்றும், இதில் மரபீனியிலேயே புழுக்களை அழிக்கும் மூலக்கூறுகள் இருப்பதால் புழுத்தாக்குதல் இருக்காது என்றும் சொல்லி விற்பனை செய்தது. பருத்தி, ஆடைக்குத்தானே பயன்படுகிறது; இதனால் மனிதருக்கு என்ன பாதிப்பு என்று மான்சாண்டோவுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. இருந்தாலும்கூட, இந்த பி.டி. பருத்தியில் கிடைக்கும் பருத்திப் பிண்ணாக்கை மட்டுமல்ல, பருத்தி இலையைத் தின்னும் ஆடுகள்கூட இறக்கின்றன. இந்த ஆடுகளின் பால் மனிதருக்குக் கேடு விளைவிக்கும் என்றெல்லாம் கூட இயற்கை விவசாயப் போராளிகள் குரல் கொடுத்து ஓய்ந்துபோனார்கள்.
இப்போது மான்சாண்டோ நிறுவனம் ரொம்ப நியாயஸ்தன் போல ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதாவது, "குஜராத்தில் நடத்திய கள ஆய்வுகளில், இளஞ்சிவப்பு புழுக்களை எதிர்த்து வளரும் சக்தியை பி.டி. பருத்தி விதைகள் இழந்துவிட்டன. இந்தப் புழுக்கள் தங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டுவிட்டதால் இனிமேல் பி.டி. பருத்தியில் 2-வது ரகத்தை விவசாயிகள் வாங்குவதுதான் நல்லது' என்று யாரும் கேட்காமலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது.
மான்சாண்டோ இந்த அறிக்கையை நியாயஸ்தன் போல வெளியிட்டாலும் இதன் மூலம் இரண்டு விஷயங்கள் அம்பலப்பட்டு இருக்கின்றன. ஒன்று, புழு, பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் என்பது வெறும் பொய்தான். இரண்டாவது, இது ஒரு வியாபார உத்தி. காப்புரிமை பெற்ற பி.டி. விதைகளுக்குக் குறிப்பிட்ட காலம்வரைதான் உரிமத்தொகையைக் காட்டி விலை நிர்ணயம் செய்ய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர், அந்த விதைக்கான உரிமத்தொகை பெறும் உரிமை காலாவதியாகிவிடும். ஆகவே, தற்போது புதிய ரகம் என்ற பெயரில் பி.டி.பருத்தியின் இரண்டாவது ரகத்தை மான்சாண்டோ அறிமுகம் செய்கிறது. முதல் ரகம் தகுதியற்றது என்று சொல்வதன் மூலம் விவசாயிகள் அனைவரும் இரண்டாவது ரகத்துக்கு மாறியே ஆக வேண்டும்.
இந்த உத்தி இந்தியாவுக்குப் புதிது. அமெரிக்காவுக்குப் பழையது. உலகில் 90 சதவீத உயிரி-தொழில்நுட்பப் பயிர்களைக் கையாளும் மான்சாண்டோ, அமெரிக்காவில் அறிமுகம் செய்த மரபீனி மாற்றப்பட்ட சோயாபீன் விதைகளுக்கான உரிமத்தொகை பெறும் உரிமை முடிகிறது. ஆகவே, அங்கேயும் புதிதாகக் காப்புரிமை பெற்றுள்ள இரண்டாம் வகை சோயாபீன் விதைகளைப் பயன்படுத்த விவசாயிகளைத் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறது மான்சாண்டோ.
மத்திய பருத்தி ஆய்வுக் கழகத்துக்கு இதுபற்றி தாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரிவித்துவிட்டதாக மான்சாண்டோ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் கூறியபோதிலும், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு இதுவரை தகவல் தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. இத்தகைய பி.டி. ரக விதைகளுக்கு அனுமதி அளிப்பதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். ஆனால் அவர்களுக்கு மான்சாண்டோ அறிக்கை வெளியிட்டு, பத்திரிகையில் வெளியான பிறகுதான் தகவல் தெரியும் என்றால், நம்ப முடிகிறதா!
வியாபாரத்துக்காக மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்குள் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்தவொரு பி.டி. ரக பயிருக்கும் அனுமதி பெறலாம், திடீரென்று இந்த விதை சரியில்லை; ஆகவே எங்களுடைய அடுத்த தயாரிப்பு விதைகளை வாங்கு என்று சொல்லலாம், விலையை தானே நிர்ணயிக்கலாம் அல்லது தான் விரும்புகிற விலையை நிர்ணயிக்கும்படி மத்திய அரசை வளைக்கலாம்...ஆனால் விவசாயிகள்? தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
பருத்தி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணமோ பொறுப்போ இல்லாமல் மத்திய அரசு இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை இந்திய விவசாயிகளிடம் நெருங்கவிடுகிறது. 40 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை நாம் மேற்கொள்ளும் முடிவுகளில்தான் இருக்கிறது என்ற பச்சாதாபம்கூட அரசிடம் இல்லை. மான்சாண்டோ போன்ற நிறுவனங்களின் வியாபாரத்தை தடுத்து நிறுத்தவும் தெம்பில்லை.
இதே நிலைமைதான் பி.டி கத்தரியிலும் ஏற்படும் என்பது நிச்சயம். இப்போது பி.டி மக்காச்சோளத்தை நமது வேளாண் பல்கலைக்கழகத்தில் கள ஆய்வு நடத்தி உற்பத்தி செய்து வருகிறார்கள். இன்னும் 40 உணவுப் பயிர்களுக்கு ஆய்வுகள் நடக்கின்றன.
ஒரு விவசாயி, கிராமப்புறச் சூழலில் கிடைக்கும் காட்டுத்தழை, வீட்டுக்குப்பை, ஆடு மாடுகளின் சாணம் என்று வயலில் போட்டு, தனது மாடுகளைக் கட்டி உழுது, அறுவடை செய்து, அடுத்த சாகுபடிக்கு விதைநெல் எடுத்து வைத்து, மற்றதை விற்றுப் பணம் பார்த்து.... அந்த அமைதியான வாழ்க்கையை விரட்டுகின்றன மான்சாண்டோ நிறுவனங்கள். அதற்குத் துணை போகிறது அரசு.
இன்றைய விவசாயி ரசாயன உரத்துக்காகச் செலவிட வேண்டும். ரசாயன உரம் விற்போர் கொழிப்பார்கள். டிராக்டரையும், அறுவடை இயந்திரங்களையும் நம்பியே வாழவேண்டும். இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் கொழிப்பார்கள். விதைகளுக்கும் மான்சாண்டோவைப் போன்ற நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டும். இத்தனையையும் மீறி, மழை பெய்து, விளைந்தால், அதற்கும் நியாயமான விலை கிடைக்காது. விவசாயத்தை அழிப்பதற்கு இதைவிட நல்ல உத்தி இருக்க முடியுமா!
இதையெல்லாம் மீறி இந்தியாவில் விவசாயம் நடக்கிறதென்றால், மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைத்தவிர வேறென்ன!
விவசாயிகள், குறிப்பாக தமிழக விவசாயிகள், தற்சார்பு தன்மைகொண்ட பாரம்பரிய விவசாயத்துக்கு மாறுவதைத் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளுக்கு புதிய பாதையைக் காட்ட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.