வீட்டில் தனியாக இருக்கும் இல்லதரசிகள் மாடித் தோட்டம் அமைப்பதால், மன அழுத்தம் குறைகிறது என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் துறைத் தலைவர் சாந்தி கூறினார்.
கட்டட காடுகளில் விவசாயம்: உலகில் வளர்ச்சி அடைந்த பல்வேறு நாடுகளில், மாடித் தோட்டம் என்ற நகர விவசாயம் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக வெப்பமயமாதலைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அலுவலகங்களில் மாடித் தோட்டம் அமைப்பதை கட்டாயமாக்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் மாடித் தோட்டம் அமைக்க வேண்டிய அவசியத்தையும், பயன்களையும் உணரும் வகையில் மாடித் தோட்டம் அமைக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர். எல்லாராலும் முடியும் எளிய வகையில் அமையும் இத்திட்டத்தில், இதுவரை 15 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
undefined
உபயோகமற்றவற்றின் உபயோகம்:
உபயோகப்படாது என்று நாம் ஒதுக்கி வைக்கும் பல்வேறு பொருட்கள், மாடித் தோட்டத்திற்கு உபயோகமாகும். குறிப்பாக வாட்டர் பாட்டில், சிமென்ட் தொட்டி, உடைந்த மக், தண்ணீர் குவளை, உபயோகப்படாத வாஸ்பேஷன், மரத்தாலான பீப்பாய், தட்டையான கொள்கலன், தகர டப்பா, பழைய டிரம் உள்ளிட்ட பொருட்களில் மண் நிரப்பி, பயிர்கள் வளர்க்க பயன்படுத்தலாம்.
சத்தான காய்கறிகள்: மாடித் தோட்டம் அமைப்பதால், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமே பயிர் செய்து கொள்ளலாம். வயல்வெளிகளில் விரைவில் விளைச்சல் காணவும், அதிக உற்பத்தியை பெருக்கவும் பூச்சி மருந்துகளையும், பல்வேறு நவீன உரங்களையும் இடுகின்றனர். இதனால், காய்கறிகளில் இருக்கும் இயற்கைச் சத்துக்கள் அருகி வருகின்றன. ஒரு மனிதன் தினமும், 300 கிராம் காய்கறிகளையும், 85 கிராம் பழங்களையும் உட்கொள்ள வேண்டும். ஆனால், பொருளாதார தேவை கருதி சாப்பிடுவதில்லை. மாடித் தோட்டம் அமைக்கும் போது, வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நாமே பயிர் செய்து கொள்ளலாம்.
மாடியில் மருந்தகம்: வீட்டின் மாடியில் காய்கறி செடிகள் வளர்ப்பவர்கள், மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாம். குறிப்பாக அகத்தி, ஆடுதின்னாப் பாலை, ஆடாதொடை, இஞ்சி, ஊமத்தை, எலுமிச்சை, துளசி, ஓமவல்லி,
கண்டங்கத்திரி, கரிசலாங்கண்ணி, பிரண்டை, கீழாநெல்லி, சிறுகுறிஞ்சான், திருநீற்றுப் பச்சிலை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி உள்ளிட்ட மூலிகை பயிர்களை வளர்ப்பதன் மூலம் காமாலை, இருமல், காய்ச்சல், கண் புகைச்சல், வாய்ப்புண் போன்ற நோய்களை தவிர்க்கவல்ல பல்வேறு விதமான பயிர்களை வீட்டிலே வளர்ப்பதால், பின்விளைவுகள் இல்லாத இயற்கை மருந்துகள், எளிதாக நமது வீட்டு மாடியிலேயே கிடைக்கும். மேலும், வீட்டில் வளர்க்கும் மூலிகைப் பயிர்களின் வாசம் நம் வீட்டிற்கு மட்டுமின்றி, அண்டை வீடுகளுக்கும் வீசுவதால், உடல்
சுவாசத்துக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது.
மன அழுத்தம் குறையும்: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும், இல்லத்தரசிகளும் மாடித் தோட்டம் அமைத்தால், அவர்களின் மன அழுத்தம் குறையும். பயிர்கள் மீது அக்கறையும், வளர்ச்சியும் கொண்டிருப்பதால், இல்லத்தரசிகள் தங்கள் குழந்தைகளைப் போலவே அவற்றை நினைத்துக் கொள்வார்கள். பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாத போதும், மனக்குமுறலை வெளியில் சொல்ல நினைக்கும் போதும், இத்தோட்டம், அவர்களுக்கு நல்லதொரு துணையாக அமையும் என்கின்றனர், உளவியலாளர்கள். பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றுவதாலும், அவற்றை கவனிக்கும் போதும், மாடித் தோட்டம் மிகச் சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது. வெயில் தாக்கம் குறையும்: மாடித் தோட்டம்
அமைப்பதால், வீட்டிற்குள் இறங்கும் வெப்பத்தின் அளவில், 4 டிகிரி அளவு குறையும். அதிக அளவு செடி கொடிகள் வளர்க்கும் போது மென்மேலும் வெப்பத்தின் அளவு குறையும். காற்றில் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கிறது. காய்கறிப் பயிர்கள் மட்டுமின்றி, அருகம்புல், அகஸ்டின் புல், ஜப்பான் புல், கொரியன் புல் உள்ளிட்ட பல்வேறு புல் வகைகளை வளர்ப்பதால், வெப்பத்தின் அளவு அறவே குறைகிறது.